Latest News :

‘ஜிப்ஸி’ விமர்சனம்

b64377b5498c53a18c4245d874e2160f.jpg

Casting : Jiiva, Natasha Sing, Lal Jose, Susheela Raman

Directed By : Raju Murugan

Music By : Santhosh Narayanan

Produced By : Ambeth Kumar

 

டெல்லியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களின் வடு மறையாத நிலையில், மத அரசியலால் சாமாணிய மக்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்கிறது, அந்த பிரச்சினையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மத அரசியல் என்ற மாயைக்குள் சிக்காமல், மனிதத்துடன் வாழ வேண்டும், என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்வது தான் இப்படத்தின் கதை.

 

குழந்தையிலேயே அப்பா, அம்மாவை இழக்கும் ஜீவாவை, நாடோடி ஒருவர் எடுத்து வளர்க்கிறார். அவருடன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணிக்கும் ஜீவா, நடனம் ஆடும் குதிரையை வைத்து பிழைத்து வருகிறார். பிழைப்புக்காக தமிழகத்திற்கு வரும் ஜீவாவுக்கு, முஸ்லீம் பெண்ணான ஹீரோயின் நடாஷா சிங் மீது ஈர்ப்பு ஏற்பட, அவருக்கும் ஜீவா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. இதற்கிடையே, நடாஷாவுக்கு திருமண ஏற்பாடு நடக்க, அவர் ஜீவாவுடன் சென்றுவிடுகிறார். இருவரும் வட இந்தியாவின் ஒரு பகுதியில் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், அங்கு முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெறும் கலவரத்தில் சிக்கி பிரிந்துவிடுகிறார்கள். ஜீவா சிறைக்கு செல்ல, நடாஷா நிரைமாத கர்ப்பிணியாக கலவர பூமியில் நடந்த கொடூர சம்பவங்களை நேரில் பார்த்த அதிர்ச்சியோடு மாயமாக, இறுதியில் ஜீவாவும், நடாஷாவும் சேர்ந்தார்களா இல்லையா, என்பதை நாட்டின் முக்கியமான பிரச்சினையோடு சேர்த்து சொல்வதோடு, மத அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியில் இருந்து மக்கள் எப்படி விலகியிருக்க வேண்டும், என்பதற்கான தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது.

 

இந்தியாவில் மதத்தை வைத்து நடத்தப்படும் வன்முறைகளை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் ராஜு முருகன், பாமர மக்களுக்கும் புரியும்படி கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார்.

 

ஜிப்ஸி என்ற நாடோடியின் வேடத்திற்கு ஜீவா கச்சிதமாக பொருந்துகிறார். ஆங்கிலம் கலந்த அவருடைய பேச்சும், குதிரையுடன் அவர் ஆடும் நடனும் ரசிக்க வைக்கிறது. காதலுக்காக ஏங்குபவர் அதை வெளிக்காட்டாமல் இருப்பதும், கலவரத்தில் தனது குதிரையை தீயிட்டு கொளுத்தும் போது பதறும் போதும், நடிப்பில் அசத்துகிறார்.

 

ஹீரோயினாக நடித்திருக்கும் நடஷா சிங் அதிகம் பேசாமல் நடித்தாலும், அவரது கண்கள் அனைத்தையும் பேசி விடுகிறது. கலவர பூமியில் ஆயுதங்களுடன் தன்னை சுற்றி நிற்பவர்களிடம், அவர் கையெடுத்து கும்பிடும் போது, அவரது கண்களில் தேங்கும் கண்ணீர், நமது நெஞ்சை பதற வைக்கிறது.

 

மதத்தின் மீது ஈடுபாட்டுடன் இருக்கும் ஹீரோயின் தந்தை வேடத்தில் நடித்திருக்கும் லால் ஜோஸ், மூலம் மதத்தை விட மனிதம் தான் உயர்ந்தது, என்பதை இயக்குநர் புரிய வைத்திருக்கிறார்.

 

Gypsy Movie Review

 

மதத்தால் மக்களை முட்டாளாக்கி அப்பாவி மக்களை கொன்று குவித்து அரசியல் செய்யும் மத அரசியல்வாதிகள், அதே இந்துக்களை சாதியை காரணம் காட்டி எப்படி புறக்கணிக்கிறார்கள், என்பதை சோனு குமாரின் கதாப்பாத்திரம் அழுத்தமாக பதிவு செய்கிறது. ”இந்து என்று சொல்லி தான், முஸ்லீம்களை கொல்ல சொன்னார்கள், ஆனால், நான் கோவிலுக்குள் நுழைந்த போது தீட்டுப்பட்டுவிடும், என்று சொல்லி எனது கைகளை வெட்டி விட்டார்கள்” என்று சோனு குமார் பேசும் வசனம், மதத்தின் பெயரால் முட்டாளக்கப்படுபவர்களுக்கு ஒரு பாடம்.

 

சந்தோஷ் நாராயணின் இசையில் ஒவ்வொரு பாடல்களும் ஒரு விதமாக இருப்பது போல, புதுவிதமாகவும் இருக்கிறது. பாடகர்களின் குரலும் தனித்துவமாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு ஏற்ப உள்ளது.

 

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே, இந்தியாவின் அழகோடு, இந்தியாவின் அவலங்களையும் கச்சிதமாக படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் கத்திரியை போட்டதை விட சென்சார் அதிக காட்சிகளுக்கு கத்திரி போட்டதால், படத்தொகுப்பாளர் ரேமெய்ண்ட் எதுவும் செய்யாமல் விட்டுள்ளார். படத்தின் முதல் பாதியில் சில காட்சிகளுக்கு அவர் கத்திரி போட்டிருக்கலாம்.

 

சமூகத்திற்கான கருத்துள்ள படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் ராஜூ முருகன், சென்சாரின் தீவிரமான எடிட்டிகின் மூலம், தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல முடியாமல் தவித்திருப்பது படத்தின் பல இடங்களில் தெரிகிறது.

 

மனிதத்தை தாண்டி புனிதம் இல்லை, என்பதை மக்களுக்கு புரிய வைத்திருக்கும் இயக்குநர் ராஜூ முருகன், மத அரசியல் செய்பவர்களின், சம கால அரசியல் நிலைபாட்டினையும் தோலுரித்து காட்டியிருக்கிறார். 

 

திரைக்கதை நகர்வில் சற்று தொய்வு இருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு மிக அவசியமான படம் மட்டும் இன்றி மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாகவும் இந்த ‘ஜிப்ஸி’ உள்ளது.

 

ரேட்டிங் 4.5/5

Recent Gallery