Latest News :

‘எட்டுத்திக்கும் பற’ விமர்சனம்

ba05e599c382f3d4fdad5467b3c2b3a8.jpg

Casting : Samuthirakkani, Shanthini, Sajimon, Nithish Veera

Directed By : Va.Keera

Music By : MS Srikanth

Produced By : Varnalaya Cine Creations

 

தருமபுரியைச் சேர்ந்த இளவரசன் மற்றும் திவ்யா என்ற வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்களின் திருமணத்தால் ஏற்பட்ட ஜாதி கலவரத்தையும், அதையடுத்து நிகழ்ந்த இளவரசனின் மரணத்தையும் மையமாக வைத்து இக்கதையை எழுதியிருக்கும் இயக்குநர் வ.கீரா, காதலை வைத்து சாதி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பற்றியும், ஆணவக் கொலைகள் பற்றியும் பேசியிருப்பது தான் ‘எட்டுத்திக்கும் பற’.

 

உயர்ந்த சாதியினர் என்று சொல்பவர்களின் பெண்ணும், தாழ்ந்த சாதியினர் என்று சொல்லக்கூடிய ஆணும் காதலித்து திருமணம் செய்துக் கொள்வதை அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும், அரசியலுக்காக அதை நாடகக் காதல் என்று சொல்லி, அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காயும் அரசியல்வாதிகளின் முகத்திரையை இயக்குநர் கீரா கிழித்திருக்கிறார்.

 

காதல் என்பது பணம், மதம், சாதியை பார்த்து வருவதில்லை என்பதை உணர்த்துவதற்காக, வயதானவர்களின் காதல், சாலை ஓரங்களில் வாழ்பவர்களிடம் ஏற்படும் காதல் என்று மூன்று காதல் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்று காதல் கதைகளின் ஜோடிகளான சாந்தினி - சஜூமோன், நித்தீஷ் வீரா - சவுந்திகா, தீக்கதிர் குமரேசன் - நாச்சியாள் சுகந்தி என அனைவரது நடிப்பும் இயல்பாக இருக்கிறது.

 

அம்பேத்கர் என்ற வழக்கறிஞர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தும் சமுத்திரக்கனி, தனது பாணியில் சாதி பிரிவினைக்கு எதிராகவும், ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார்.

 

Ettuthikkum Para

 

அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கும் முத்துராமனின் கதாப்பாத்திரம், சமகால சாதி கட்சி தலைவரை நினைவுப்படுத்துகிறது.

 

சிபின்சிவனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையில், “உசுருக்குள் உன்னை வைத்தேன்...” பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம்.

 

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் சாதி பிரிவினை பிரச்சினை குறித்து பேசியிருக்கும் இயக்குநர் வ.கீரா, சில அரசியல் தலைவர்களால் சொல்லப்படும் ”நாடக காதல்” என்ற ஒன்றே இல்லை என்பதை அழுத்தமாக மறுத்திருப்பதோடு, மேல் சாதி என்று சொல்லப்படும் பலர், கீழ் சாதி என்று சொல்லப்படுபவர்களை விட பொருளாதாரத்தில் பின் தங்கியே இருக்கிறார்கள், என்பதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். அப்படி இருக்கும் போது, பணத்திற்காக பெண்களை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஆண்கள் திட்டமிட்டு காதலிப்பதாக சொல்லப்படுவது பொய்யான பிரச்சாரம் மட்டும் இன்றி, அதன் மூலம் இளைஞர்களிடம் வன்மத்தை விதைத்து, ஓட்டு வங்கியை அதிகரிக்கச் செய்யும் நாடகத்தை தான், “நாடக காதல்” என்ற பெயரில் அரசியல்வாதிகள் அரங்கேற்றுகிறார்கள், என்பதை மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்.

 

தான் சொல்ல வந்த கருத்து, அதை காட்சிப்படுத்திய விதம், அதற்கான வசனங்கள் என்று அனைத்தையும் நேர்மையாக கையாண்டிருக்கும் இயக்குநர் வ.கீரா, சினிமாவுக்கான பார்மட்டில் அதை செய்ய தவறியிருக்கிறார். அதனால், படம் சற்று பலவீனமடைந்திருப்பதை மறுக்க முடியாது. 

 

இருந்தாலும், ‘எட்டுத்திக்கும் பற’ எட்டுத்திக்கும் உள்ள மக்கள் பார்க்க வேண்டிய படம் தான்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery