Latest News :

’வெல்வெட் நகரம்’ விமர்சனம்

63dd7619ac62393020eb644292f65d2e.jpg

Casting : Varalakshmi, Malavika Sundar, Ramesh Thilak, Arijay, Santhosh Krishna

Directed By : Manojkumar Natarajan

Music By : Achu Rajamani, Background Score - Saran Raghavan

Produced By : Arun Karthik

 

மலைவாழ் மக்களின் இருப்பிடங்களை அழித்து தொழிற்சாலை அமைக்க முயற்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடும் கஸ்தூரி, அவர்களுக்கு எதிரான டாக்குமெண்ட் ஒன்றை தயார் செய்ய, அவரை மர்ம நபர் கொலை செய்துவிடுகிறார். இறப்பதற்கு முன்பு அந்த டாக்குமெண்ட் பற்றி பத்திரிகை நிருபரான வரலட்சுமியிடம் கஸ்தூரி கூறிவிடுகிறார். அதன்படி, கஸ்தூரி தயார் செய்த டாக்குமெண்டை மீட்டு, கார்ப்பரேட் நிறுவனத்தின் தொழிற்சாலை கட்டும் பணியை தடுக்கும் பணியில் வரலட்சுமி ஈடுபட, அதே டாக்குமெண்டை கார்ப்பரேட் நிறுவனமும் தேடி வருகிறது. இதற்கிடையே, வரலட்சுமி தனது தோழி வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் கொள்ளையடிக்க வரும் ஐந்து நபர்களால், புதிய பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் வரலட்சுமி அதில் இருந்து தப்பித்தாரா, அந்த டாக்குமெண்டை கைப்பற்றினாரா இல்லையா, என்பதை ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

 

பத்திரிகை நிருபராக களம் இறங்கும் வரலட்சுமியின் ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும், அதன் பிறகு திருடர்கள் கையில் சிக்கிக்கொண்டு மூளையில் உட்கார்ந்து விடுகிறார். சில நேரங்களில் மாடி படியில் ஓடுவது, அடி வாங்குவது என்று அமைதியாகி விடுகிறார். அரிஜய், ரமேஷ் திலக் உள்ளிட்ட திருடர்களாக நடித்திருப்பவர்களும், வரலட்சுமியின் தோழியாக நடித்திருக்கும் மாளவிகா சுந்தர், அவரது கணவராக நடித்திருக்கும் சந்தோஷ் கிருஷ்ணா என அனைவரும் தங்களது வேலை சரியாக செய்திருக்கிறார்கள்

 

அச்சு ராஜாமணி பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் பாடல்கள் வருகிறதா, என்பது சந்தேகமாக இருக்கிறது. பின்னணி இசையும் ஓரளவே.

 

பகத் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்பட பயணித்திருக்கிறது. ஒரே வீட்டில் நடக்கும் காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக அதிகமாக மெனக்கெட்டிருக்கிறார்.

 

மலைவாழ் மக்கள் பிரச்சினை, அதை தொடர்ந்து நடக்கும் கொலை, அதன் பின்னணியை கண்டுபிடிக்கும் பத்திரிகை நிருபர், என்று பயணிக்கும் ஆரம்பம் நம்மிடம் ஆர்வத்தை தூண்டினாலும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் மற்றும் திருட்டு கூட்டத்தின் காட்சிகள் அனைத்தும் தேவையில்லாதவைகளாகவே இருக்கிறது.

 

இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன், படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் வைத்திருக்கிறார். ஆனால், அத்தனை ட்விஸ்ட்டுகளும் நமக்கு தலைவலியை தான் கொடுக்கிறது. அதற்கு முக்கிய காரணம், படத்தின் நீளமும் கூட. ஒரே பிரச்சினையை பல முறை, பல கோணங்களில் காட்டும் இயக்குநர், ஆரம்பத்தில் தான் சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிட்டு, க்ளைமாக்ஸில் அதனை இணைத்திருப்பதில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லை.

 

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படத்தை பலவித திருப்புமுனைகளோடும், சுவாரஸ்யமாகவும் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன், தனது முயற்சியில் தோல்வியடைந்து விட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.

 

ரேட்டிங் 2.5/5

Recent Gallery