Casting : Jyothika, R. Parthiban, K. Bhagyaraj, Thiagarajan, Pandiarajan, Pratap Pothen
Directed By : J. J. Fredrick
Music By : Govind Vasantha
Produced By : Suriya
ஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில், நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது ‘பொன்மகள் வந்தாள்’. நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் என்ற அடையாளத்தோடு வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி, என்பதை பார்ப்போம்.
ஊட்டியில் சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். அப்போது ஒரு பெண்ணிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற முயன்ற இரு வாலிபர்கள் அப்பெண்ணால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அந்த பெண்ணை கைது செய்யும் போலீஸ், அவரை என்கவுண்டர் செய்வதோடு, வட மாநில பெண்ணான அவர் ஒரு சைக்கோ என்றும், பெண் குழந்தைகளை கடத்தி கொலை செய்யும் அவரால் சுமார் 5-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர், என்று கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, வழக்கும் முடித்து வைக்கப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கை கையில் எடுக்கும் வழக்கறிஞரான ஜோதிகா, சிறுமிகள் கொலையில் புதைந்த உண்மைகளை வெளிக்கொண்டுவர போராடுகிறார். இறுதியில் அவர் அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா, அவருக்கும் அந்த சம்பவத்துக்கும் உள்ள தொடர்பு என்ன, என்பதை பல திருப்புமுனைகளோடு சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
“காலதாமதமாக கிடைக்கும் நீதியும் அநீதியே” என்ற ஒற்றை வார்த்தையில் நீதித்துறையை விமர்சித்திருக்கும் இந்த ‘பொன்மகள் வந்தாள்’ பெண்களுக்கான பாலியல் வழக்குகளில் ஆதாரங்களை பார்க்காமல், உண்மையை பார்த்து நீதி வழங்க வேண்டும், என்பதை அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறது.
சிறுமிகளை கொலை செய்யும் பெண் சைக்கோ கொலையாளியின் வழக்கோடு படம் தொடங்கும் போதே, நம்மை இறுக்கி கட்டிப் போட்டு விடுகிறது. வழக்கின் மறுவிசாரணையின் போது, ஜோதிகாவின் வாதத்தின் மூலமாகவும், அவருக்கு எதிராக வாதாடும் பார்த்திபன் மூலமாகவும், ”என்ன நடந்திருக்கும்?” என்ற கேள்வியை நம் ஆழ்மனதில் ஏற்படுத்துவது படத்தின் மிகப்பெரிய பலம்.
வழக்கறிஞர் வேடத்திற்கான கம்பீரத்தை நடிப்பில் வெளிக்காட்டியிருக்கும் ஜோதிகா, வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் குழந்தைகளின் வலியை படம் பார்ப்பவர்களும் உணரும்படி நடித்திருக்கிறார். சோகம், மகிழ்ச்சி, வலி என அத்தனை உணர்ச்சிகளையும் தனது நடிப்பு மூலம் ரசிகர்களிடம் கடத்துபவர், இறுதிக் காட்சியில் நீதிமன்ற வளாகத்தில் இருப்பவர்கள் மட்டும் இன்றி, படம் பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்து விடுகிறார்.
அரசு வழக்கறிஞராக நடித்திருக்கும் பார்த்திபன், தனது அளவான நடிப்பால் கவர்கிறார். கதாப்பாத்திரத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்திருந்தாலும், சில இடங்களில் தனது ஸ்டைலை குறைவாக காட்டி ரசிக்க வைக்கிறார்.
தொழிலதிபராக நடித்திருக்கும் தியாகராஜன் ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அனுபவம் வாய்ந்த நடிப்பை கொடுக்கிறார். ஜோதிகாவின் தந்தையாக நடித்திருக்கும் பாக்யராஜ், நீதிபதியாக நடித்திருக்கும் பிரதாப் போத்தன், நீதிமன்ற ஊழியராக நடித்திருக்கும் பார்த்திபன், என படத்தில் ஒரு சில கதாப்பாத்திரங்கள் மட்டுமே இருந்தாலும், அனைவரது நடிப்பும் அளவோடும் அப்ளாஷ் வாங்கும் விதத்திலும் இருக்கிறது.
தனது கேமரா மூலம் ஊட்டியின் அழகையும், குளிர்ச்சியையும் கூட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, சிறுமிகள் கொலை செய்யப்பட்ட இடத்தின் மூலம் மிரட்டியும் இருக்கிறார். கதைக் கருவில் இருக்கும் வலியை கதாப்பாத்திரங்கள் தங்களது நடிப்பு மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இவரது பணி பாலமாக அமைந்திருக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையுடன் பயணித்துள்ளது. காட்சிகளை முந்திச்செல்லாமல் பயணிக்கும் பின்னணி இசையும், சில இடங்களில் நிலவும் அமைதியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கதாப்பாத்திரங்கள் பேசுவது தான் பெரும்பாலான காட்சிகளாக இருந்தாலும், அப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தாமல், படம் விறுவிறுப்பாக நகர்வதற்கு ரூபனின் கச்சிதமான எடிட்டிங் முக்கிய காரணமாக உள்ளது.
பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பல குற்றங்கள் நடப்பதற்கு, குற்றவாளிகளுக்கு சரியான தண்டனைகள் கிடைப்பதில்லை, என்று சொல்லியிருக்கும் இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக், அதே சமயம், பாதிக்கப்பட்ட பெண்கள், மானத்திற்கு பயந்து உண்மையை வெளியில் சொல்லாமல் இருப்பதும் ஒரு காரணம் தான், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
”நாங்க தோத்துட்டோம், என்று சொல்ல இது கேம் இல்லை, நீதி” உள்ளிட்ட வசனங்கள் மூலம் சமூகத்தில் நடந்த பல குற்றங்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட நீதி சரியானதா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கும் இயக்குநர் சட்டத்துறைக்கு சாட்டையடியும் கொடுத்திருக்கிறார்.
படத்தில் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடந்தாலும், தனது கச்சிதமான திரைக்கதை மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர், இடைவேளை காட்சியில் வைத்திருக்கும் ட்விஸ்ட், ரசிகர்களிடம் ஏற்படும் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது.
கதாப்பாத்திரங்களின் தேர்வு, அவர்களது நடிப்பு, கச்சிதமான காட்சிகள், நேர்த்தியான திரைக்கதை என அனைத்தையும் கச்சிதமாக கையாண்டிருக்கும் இயக்குநர் இப்படத்தை விறுவிறுப்பான பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, பெண்கள் எப்படி இருக்க வேண்டும், என்று பாடம் நடத்தும் பெற்றோர்கள், தங்களது ஆண் பிள்ளைகளுக்கு எதை முக்கியமாக சொல்லிக் கொடுக்க வேண்டும், என்பதை இயக்குநர் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘பொன்மகள் வந்தாள்’ பெண்களுக்கான படம் என்று ஒதுக்கிவிட முடியாத, அனைத்து தரப்பினருக்குமான ஒரு திரைப்படமாகவும், நல்ல பாடமாகவும் உள்ளது.
ரேட்டிங் 4/5
குறிப்பு : இப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக இன்று (மே 29) வெளியாகியுள்ளது. படத்தை பார்க்க www.primevideo.com என்ற தளத்திற்கு செல்லவும்.