Latest News :

‘மம்மி சேவ் மீ’ விமர்சனம்

ff857d703dfafc3ecdccbb469750d185.jpg

Casting : Priyanka, Yuvina Parvathi, Madhusudhanan

Directed By : B.Lohith

Music By : Ajaneesh Loknath

Produced By : J Sathish Kumar

 

’தங்க மீன்கள்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’தரமணி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த ஜெ.சதீஷ் குமார் தயாரிப்பில், பிரியங்கா, பேபி யுவினா ஆகியோரது நடிப்பில் பி.லோஹித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திகில் படம் ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me).

 

கோவாவில் உள்ள அழகிய பங்களா ஒன்றில் கணவரை இழந்த பிரியங்கா, தனது மகள், தங்கை மற்றும் அம்மாவுடன் குடியேற, அந்த பங்களாவில் இருக்கும் பேய் பிரியங்கா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பலவிதத்தில் சிக்கல்களை கொடுக்கிறது. அவர்கள் அதில் இருந்து எப்படி மீண்டார்கள்? அந்த பேய் யார்?, அதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருக்கும் பிரியங்கா, கணவரை இழந்த சோகத்தை முகத்திலும், பேய் பயத்தை கண்களிலும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மகள் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக பிரியங்கா நடத்தும் பாசப்போராட்டம் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

 

பிரியங்காவின் மகளாக நடித்திருக்கும் சிறுமி யுவினா பார்வதி, பயத்தில் உரையும் காட்சிகளில் கண்களினாலேயே நடித்திருக்கிறார். 

 

பிரியங்காவின் தங்கையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா சிந்தோகி, பிரியங்காவின் அம்மாவாக நடித்திருக்கும் வட்சலா மோகன் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட வேலை குறைவு என்றாலும், அதை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

 

கிறிஸ்தவ பாதிரியராக வரும் ‘கோலி சோடா’ மதுசூதனின் கதாப்பாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

 

ஒரு பேய் படம் என்றால் எப்படி இருக்கும், என்ற ரெகுலர் பார்மட் சமாச்சாரங்கள் கூடுதலாக இருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்தாலும், வித்தியாசமான க்ளைமாக்ஸ் அதை சரிகட்டி விடுகிறது.

 

எச்.சி.வேணுவின் ஒளிப்பதிவும், அஜனீஷ் லோக்நாத்தின் இசையும் சில சமயங்களை பேயை விடவும் அதிகமாக பயமுறுத்துகிறது. 

 

படத்தின் ஆரம்பத்திலேயே பேயின் ஆட்டம் ஆரம்பிக்க, அந்த பேய் யாராக இருக்கும், என்ன செய்ய போகிறது, என்ற எதிர்ப்பார்ப்பை க்ளைமாக்ஸ் வரை கொண்டு செல்லும் இயக்குநர் பி.லோஹித், திரைக்கதையையும், காட்சிகளையும் எளிமையான முறையில் கையாண்டிருந்தாலும், தொடக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.

 

மொத்தத்தில், திகில் பட பிரியர்களை முழுமையாக திருப்திப்படுத்துகிறது இந்த ‘மம்மி சேவ் மீ’.

 

ரேட்டிங் 2.75/5

 

குறிப்பு : தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின், தமிழ் பதிப்பு, https://jskprimemedia.com/ (JSK Prime Media) என்ற OTT தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

 

Recent Gallery