Casting : விஷ்ணு விஷால், கேத்ரின் தெரசா, சூரி, அருள்தாஸ், ஆனந்த்ராஜ்
Directed By : முருகானந்தம்
Music By : ஷான் ரோலாண்ட்
Produced By : விஷ்ணு விஷால், ஃபாக்ஸ் ஸ்டார்
பயந்த சுபாவம் கொண்ட ஹீரோ விஷ்ணு விஷாலுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹீரோயின் கேத்ரின் தெரசாவுக்கும் காதல். காதலியை மனைவியாக்க குடும்பத்தோடு சென்று பெண் கேட்க, கேத்ரினின் அப்பாவோ, விஷ்ணு விஷாலின் பயந்த சுபாவத்தை காரணமாக காட்டி பெண் கொடுக்க மறுக்கிறார். இதனால் மன வேதனைக்கு ஆளான விஷ்ணு விஷால், சரக்கடித்துவிட்டு போதையில் பெரிய ரவுடி ஒருவரை அடித்து துவைக்கிறார்.
சண்டை போட்டதால் ஏற்பட்ட சிறு காயத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் விஷ்ணு விஷாலை பரிசோதிக்கும் மருத்துவர்கள், லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய அரிதான நோய் வந்திருப்பதால், இன்னும் கொஞ்சம் நாட்களில் விஷ்ணு விஷால் மரணமடைந்து விடுவார், என்று தவறான ரிப்போர்ட்டை கொடுத்துவிட, இதை அறிந்து கலங்கும் விஷ்ணு விஷால், தனது அக்காவின் திருமண செலவுக்காக கோடீஸ்வரரான ஆனந்தராஜுக்கு தனது கிட்னியை கொடுப்பதாக ஒப்புக்கொண்டு 50 லட்சம் ரூபாயும் வாங்கிவிடுகிறார்.
அனைத்து ஏற்பாடுகளும் நடந்து அறுவை சிகிச்சை நடக்கும் தினத்தின்று மருத்துவர்கள் தவறு செய்திருப்பதை அறிந்துக் கொள்ளும் விஷ்ணு விஷால், கிட்னியை கொடுக்க மறுக்க, கிட்னி கிடைத்தால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இருக்கும் ஆனந்தராஜ் அவரை பிடித்து வர ஆட்களை அனுப்புகிறார். அதே சமயம், விஷ்ணு விஷாலிடம் அடிவாங்கிய ரவுடி அருள்தாஸும் பழி தீர்க்க அவரை துரத்த, இந்த வில்லன்களிடம் இருந்து தப்பித்து தனது காதலியை கரம் பிடித்து விஷ்ணு விஷால் எப்படி ஹீரோவாகிறார் என்பது தான் இந்த ‘கதாநாயன்’ படத்தின் கதை.
சொந்தமாக படம் தயாரிக்க தொடங்கியதுமே ஆடியன்ஸ் பல்சை அறிந்து கதையை தேர்வு செய்து வந்த விஷ்ணு விஷால், கதாநாயகன் மூலம் மீண்டும் சறுக்களை சந்தித்திருக்கிறார். ரசிகர்களை எந்த கோணத்திலும் ஈர்க்காத இந்த படம், விஷ்ணு விஷாலை ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் எந்த கோணத்தில் திருப்திப்படுத்தியிருக்கும் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
ஒரு நடிகராக தனது வேலையை எந்தவித குறையும் இல்லாமல் நூறு சதவீதம் சிறப்பாக விஷ்ணு விஷால் செய்திருந்தாலும், கதாநாயகியாக நடித்துள்ள கேத்ரின் தெரசா ஏதோ பொம்மை போல வந்து போகிறார். நடிக்கவில்லை சரி, பாடல் காட்சிகளிலாவது அவரை வைத்து பட்டையை கிளப்புவார்கள், என்று எதிர்ப்பார்த்தால் அங்கேயும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சூரியின் காமெடி படத்தின் ஆரம்பத்தில் எடுபடவில்லை என்றாலும், முடிவில் ரொம்பவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதிலும், படத்தின் இறுதி 10 நிமிடங்கள் சூரி எப்படியோ படத்தை சற்று ரசிக்க வைத்திருப்பது ஆறுதலாக இருக்கிறது.
இயக்குநர் முருகானந்தம் கதையை தான் சரியாக கையாளவில்லை (கதை என்ற ஒன்று இருந்தால் தானே) என்றால், இசையமைப்பாளர் சான் ரோலாண்ட், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் ஆகியோரையும் சரியாக வேலை வாங்கவில்லை. ஹிட் பாடல்கள் மூலம் குட் இசையமைப்பாளர் என்று பெயர் எடுத்த ஷான் ரோலாண்ட், இந்த படத்தின் மூலம் தனது பெயரை கெடுத்துக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அப்ளாஸ் வாங்கும் முருகானந்தம், தான் இயக்கும் படத்தில் காமெடியில் கலக்கு கலக்கு என்று கலக்குவார் என்று எதிர்ப்பார்த்தால், அதற்கு நேர் மாறாக நம்மை படம் முழுவதுமே காமெடி என்ற பெயரில் கடித்து கொதறி விடுகிறார். காமெடி காட்சிகள் தான் இப்படி என்றால், காதல் காட்சிகள் அதைவிடவும் கொடூரமாக இருக்கிறது. இப்படி ஒட்டு மொத்த படமே ஒன்னுமில்லாமல் இருக்க, கெளரவ வேடம் என்ற பெயரில் விஜய் சேதுபதியை கொஞ்சம் டேமேஜ் பண்ணிவிடுகிறார்கள்.
மொத்தத்தில் இந்த ‘கதாநாயகன்’ படத்தின் மூலம் விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு வில்லனாகிவிட்டார்.
ஜெ.சுகுமார்