Casting : Suresh Ravi, Raveena Ravi, Mime Gopi, RJ Munna
Directed By : RDM
Music By : Adithyha - Soorya
Produced By : Bhaskaran B, Rajapondiyan.P, Suresh Ravi
பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்டால், அவர்களின் நிம்மதியை சீர்குலைத்து, அவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையை சீரழிக்கும் காவல்துறையின் மற்றொரு முகத்தை வெளிக்காட்டும் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘காவல்துறை உங்கள் நண்பன்’.
பரபரப்பான சூழலில் மனைவியுடன் பைக்கில் வரும் ஹீரோ சுரேஷ் ரவி, இரவு நேர வாகன சோதனையில் இருக்கும் காவலர் ஒருவரை, “அறிவு இருக்கிறதா?” என்று கேட்க, அதற்கு கோபமடையும் அந்த காவலரின் செயலால், காவல்துறை அதிகாரிக்கும், சுரேஷ் ரவிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்படுகிறது. அப்போது சுரேஷ் ரவியின் மனைவியை காவல்துறை அதிகாரி தரக்குறைவாக பேச, அதற்கு காவல்துறை அதிகாரியை சுரேஷ் ரவி, கேட்கும் கேள்வியால், அவர் கடும்கோபமடைய, அதனால் சுரேஷ் ரவி சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் கதை.
அப்பாவியான முகத்தோடு வலம் வரும் சுரேஷ் ரவி, கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். காதல் மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிப்பவரின் வாழ்க்கையில், புயல் போல வரும் காவல்துறையின் கொடூரத்தால் கலங்கி நிற்பவர், நடிப்பால் அவர் அனுபவிக்கும் வலிகளை நம்மையும் உணரச் செய்கிறார். கதாநாயகி ரவீனா ரவி, படம் முழுவதும் சோகமாக வந்தாலும், பாடல் காட்சிகளில் தனது சிரிப்பால் கவர்கிறார்.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மைம் கோபியின் நடிப்பு மிரட்டுகிறது. “போலீஸ் மீது மக்களுக்கு இருந்த பயம் போயிடுச்சு, அது மீண்டும் வரவேண்டும்” என்ற எண்ணத்தில் வலம் வருபவர், தப்பு செய்யாதவர்களும் போலீஸை பார்த்து பயப்பட வைத்துவிடுகிறார்.
படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறும் சில போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ’சூப்பர் குட்’ சுப்பிரமணி, ஈ.ராமதாஸ் ஆகியோரின் கதாப்பாத்திரமும் மனதில் நிற்கின்றன.
ஆதித்யா மற்றும் சூர்யா ஆகியோரது இசையில் “ராணி தேனீ...” பாடல் சுகம். பின்னணி இசை பலம். கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ-யின் ஒளிப்பதிவு கதையுடன் பயணித்துள்ளது.
”நாங்க பப்ளிக் சர்வென்ட்தான். ஆனா பப்ளிக்தான் எங்களுக்கு சர்வென்ட்”, ”கிரிமினல் போலீஸ் மாதிரி யோசிக்க முடியாது, போலீஸ் கிரிமினல் மாதிரி யோசிக்க முடியும்”, “இங்க சட்டம்கிறது பணம் இருக்குறவங்களுக்கு வாலாட்டுற வீட்டு நாய், பணம் இல்லாதவங்களுக்கு வெறி நாய்” என தனது வசனங்கள் மூலம் பொதுமக்களின் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறார் ஞானகரவேல்.
காவல்துறை நண்பனாக இருப்பது குற்றவாளிகளிடமும், பணம் படைத்தவர்களிடமும் தான், என்பதை வெளிப்படையாக மட்டும் இன்றி அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஆர்.டி.எம்-ன் தைரியத்தை ஆயிரம் அப்ளாஸ் கொடுத்து பாராட்டியாக வேண்டும்.
கடும் குற்றம் செய்தால் மட்டுமே காவல்துறையால் தண்டிக்கப்படுவோம் என்பது இல்லை, அவர்களை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டாலே போதும், நம் வாழ்க்கையை தொலைக்க, அவர்கள் எதையும் செய்வார்கள், என்று சொல்வது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.
சாமாணிய மக்கள் மீது, மனசாட்சி இன்றி காவல்துறை நடத்தும் கொடூரத்தை சொல்லும் படங்கள் பல வந்திருந்தாலும், எளிமையான கதையோட்டத்தில், பொதுமக்களின் வலிகளை சொல்லும் இயல்பான படமாக உள்ளது இந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’.
ரேட்டிங் 3.25/5