Casting : Jeeva, Disha Pandey, Pandiyarajan, Swaminathan, Kanja Karuppu, Ambani Shankar
Directed By : E.Ibrahim
Music By : Dev Guru
Produced By : M Paneer Selvam - P Vanathi
திரைப்படம் எடுப்பதற்காக கதை எழுதிக் கொண்டிருக்கிறார் ஹீரோ ஜீவா. ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கிறார் ஹீரோயின் திஷா பாண்டே. ஆவிகள் மீது நம்பிக்கை இல்லாத ஜீவா, அவ்வபோது திஷா பாண்டேவை கலாய்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே, ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் பெண்கள் மரணமடைகிறார்கள். அந்த மரணத்திற்கு அந்த வீட்டில் இருக்கும் ஆவி தான் காரணம், என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள். இந்த விஷயத்தை அறியும் திஷா பாண்டே, அந்த வீட்டில் இருக்கு ஆவி குறித்து ஆராய செல்லும் போது, ஆவி மீது நம்பிக்கையில்லாத ஜீவாவும் அவருடன் செல்கிறார். இறுதியில் அந்த வீட்டில் நடக்கும் மரணங்களுக்கு காரணம் ஆவியா அல்லது ஆசாமியா என்பதை திகிலாகவும், கலகலப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
ஜீவாவின் ஒவ்வொரு அசைவிலும் ரஜினிகாந்தின் சாயல் இருப்பதை, பச்சை குழந்தை கூட சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது. ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதற்காக, நடிப்பிலும் அதை காட்டுவது சரியல்ல என்று தான் தோன்றுகிறது. மற்றபடி ஆக்ஷன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், காமெடி நடிகரை தாண்டிய ஒரு நாயகனாக ஜீவா வலம் வருகிறார்.
நாயகி திஷா பாண்டே கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஆடை சிக்கனத்தை கடைபிடித்து ரசிகர்களின் மனதில் தாராளமாக தங்கிவிடுகிறார்.
படம் முழுவதும் வரும் பாண்டியராஜன், ஈஸ்வர் மற்றும் அவ்வபோது தலை காட்டும் லொள்ளு சபா சுவாமிநாதன், கஞ்சா கருப்பு, அம்பானி சங்கர் ஆகியோரது காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. வில்லாக நடித்திருக்கும் நடிகர்கள் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப பொருந்துகிறார்கள்.
சுதீப்பின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அழகாகவும், பேய் வீட்டின் காட்சிகள் திகிலாகவும் இருக்கிறது. தேவ் குருவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் பேய் படங்கள் என்றாலே, காமெடி கலந்த திகில் கலாட்டாவாகவே இருக்கின்றன. ஆனால், அதை மட்டுமே வைத்து திரைக்கதை அமைக்காமல், புதிய விஷயம் ஒன்றை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் இ.இப்ராகிம், கமர்ஷியலான ஒரு திகில் படத்துடன், மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரு விழிப்புணர்வு படமாகவும் இப்படத்தை கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் திரைக்கதை மற்றும் காட்சிகளில் சில தொய்வுகள் இருந்தாலும், ’கொம்பு’-ஐ காட்ட தொடங்கியதுமே அந்த தொய்வுகள் அனைத்தும் தொலைந்து போய், விறுவிறுப்பும், பரபரப்பும் நம்மை தொற்றிக் கொள்கிறது. இறுதியில், கொலைக்கான காரணம் மற்றும் பின்னணியை விவரிக்கும் போது, படத்தில் இருந்த சிறுசிறு குறைகள் மறைந்து நிறைவான ஒரு படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது.
ரேட்டிங் 3/5