Casting : விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், நான் கடவுள் ராஜேந்திரன்
Directed By : பி.அசோக் குமார்
Music By : ஷான் ரோலாண்ட்
Produced By : விக்ரம் பிரபு, இசக்கி துரை, ஆர்.கே.அஜய்குமார்
விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் அறிமுக இயக்குநர் பி.அசோக் குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘நெருப்புடா’ எப்படி என்ப்பது பார்ப்போம்.
விக்ரம் பிரபு மற்றும் அவரது நான்கு நண்பர்கள் என ஐந்து பேரும் சிறு வயதில் இருந்தே தீயணைப்பு துறை வேலையில் சேர வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருப்பதோடு, சுற்று வட்டாரத்தில் எங்கு தீ விபத்து ஏற்பட்டாலும், அவர்களுக்கென்று வைத்திருக்கும் தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு தீயை அணைப்பதோடு, உயிர் சேதும் ஏற்படாமலும் தடுத்து வருகிறார்கள். அவர்களது இத்தகைய சேவைக்காக, அவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் வேலை கிடைக்க, தீயணைப்பு துறை உயர் அதிகாரி பல உதவிகளை செய்துக் கொடுக்கிறார்.
இதற்கிடையே மருத்துவம் படிக்கும் நிக்கி கல்ராணிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் காதல் நெருப்பு போல சட்டென்று பற்றிக் கொள்ள, குஷியாகும் விக்ரம் பிரபுவை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக, தீயணைப்பு துறை பணிக்கான தேர்வு கடிதம் வந்துவிடுகிறது. இப்படி அனைத்தும் சரியாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் பிரபுவின் நண்பர் வருண் சூழ்நிலைக் காரணமாக சென்னையை ஆட்டிப்படைக்கும் பெரிய ரவுடியின் மரணத்திற்கு காரணமாகிவிடுகிறார். அந்த ரவுடியின் மரணத்திற்கு பழி தீர்க்க அவரது நண்பரான மற்றொரு ரவுடி விக்ரம் பிரபு மற்றும் அவரது நண்பர்களை தேடிக் கொண்டிருக்க, அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகும் விக்ரம் பிரபுக்கு, முகம் தெரியாத புது புது எதிரிகள் உருவாக, அதனால் தனது அப்பாவை இழப்பதோடு, நண்பர்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கெல்லாம் காரணமான அந்த முகம் தெரியாத எதிரி யார், அவரை விக்ரம் பிரபு எப்படி வீழ்த்தினார், தனது லட்சியமான தீயணைப்பு வீரராக ஆனாரா இல்லையா, என்பது தான் ‘நெருப்புடா’ படத்தின் மீதிக்கதை.
பற்றி எரியும் நெருப்பு காட்சியோடு படம் தொடங்குவது போலவும், முடிவில் நெருப்போடு படம் முடிந்தாலும், இரண்டு சம்பவங்களிலும் உயிரை காப்பதை மட்டுமே விக்ரம் பிரபு கடைபிடிப்பது போல காட்டியிருப்பது இயக்குநரின் டச்சாக உள்ளது.
படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விக்ரம் பிரபு, தீயணைப்பு வீரராக இப்படத்தில் தனது பங்களிப்பை ரொம்ப அதிகமாகவே கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளில் எப்படி ஸ்கோர் செய்கிறாரோ அதைவிடவும் ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாகவே ஸ்கோர் செய்திருப்பவர், பஞ்ச் வசனங்கள் பேசாமலே ஹீரோயிஷத்தை காட்டுவதோடு, கதைக்கு ஏற்ற நடிகராகவும் ஜொலிக்கிறார்.
நெருப்புக்கே நெருப்பு, என்பது போல கோவிலில் ஏற்படும் தீயை படு சாமர்த்தியமாக அனைத்து விக்ரம் பிரபுவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நிக்கி கல்ராணியின் வேடத்திற்கான வேலை குறைவானதாக இருந்தாலும், தீயணைப்பு துறை உயர் அதிகாரியின் மகளாக அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்தது, அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியது என்று அவரும் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.
வருண் உள்ளிட்ட விக்ரம் பிரபுவின் நண்பர்களாக நடித்தவர்கள், ஆடுகளம் நரேன், பொன்வண்ணன் என்று அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். நான் கடவுள் ராஜேந்திரனை காமெடிக்காக மட்டும் பயன்படுத்தாமல் சற்று குணச்சித்திர வேடத்திலும் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால், அவரது காமெடி தான் எடுபடமால் போய்விட்டது.
நெருப்பு போல பரபரப்போடு தொடங்கும் படம் அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்போடு விறுவிறுப்பாக நகர்கிறது. ரவுடியின் கொலைக்கு காரணமாகிவிட்ட விக்ரம் பிரபு மற்றும் நண்பர்கள் மாட்டிக் கொள்வார்களா? என்ற கேள்வி எழும்போது, அவர்கள் தப்பிக்கும் விதம் படத்திற்கு சுவாரஸ்யத்தை சேர்க்கிறது. அதிலும் தப்பித்து விட்டோம்டா சாமி, என்று விக்ரம் பிரபு பெருமூச்சு விடும் நேரத்தில் அவரது நண்பர்கள் செய்யும் வேலையால் மீண்டும் வில்லனிடம் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட, அதிலும் அவர்கள் எஸ்கேப் ஆவது போல காட்சியை திசை திருப்பிய இயக்குநர் திரைக்கதையை கச்சிதமாக கையாண்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புக் கொண்ட கண்ணகி நகரை பிரம்மாண்டமாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், அழகாகவும் காண்பித்திருக்கிறார். அழுக்கு நிறைந்த பகுதிகளைக் கூட தனது பிரேம் மூலம் அழகு நிறைந்த பகுதியாக காட்டியிருக்கும் ஆர்.டி.ராஜசேகரின் கேமரா நெருப்பின் சூட்டை நாம் உணரும்படி செய்கிறது. ஷான் ரோலாண்டின் இசையில் சில பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும்படியாக உள்ளது. மெலோடியான பாடல்கள் மட்டும் இன்றி, தாளம் போடும் வகையிலும் சில பாடல்களை கொடுத்திருப்பவர், பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார்.
சாதாரண ஒரு கதையை, திரைக்கதை மூலம் சுவாரஸ்யப்படுத்தியிருக்கும் இயக்குநர் அஷோக் குமார், வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் பல ட்விஸ்ட்டுகளை வைத்து படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறார்.
நெருப்பில் சிக்கிக்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதை கடமையாக கொண்ட விக்ரம் பிரபுவின் கதாபாத்திரத்தை கடைசி வரை அதே எண்ணத்தோடு பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் அசோக் குமார், ஹீரோ சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை வைக்காமல் ரொம்ப நேர்மையாக படத்தை கையாண்டிருக்கிறார்.
முதல் பாதியை ஆக்ஷன் மசாலா படமாக நகர்த்தும் இயக்குநர், இரண்டாம் பாதியில் வைத்திருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் அந்த முகம் தெரியாத வில்லன் வேடம், அந்த கதாபாத்திரம் விக்ரம் பிரபு மற்றும் அவரது நண்பர்களை பழிவாங்குவதற்கான காரணம் உள்ளிட்டவை படத்தை க்ளைமாக்ஸ் வரை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது.
மொத்தத்தில், தலைப்புக்கு ஏற்றவாறு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகரும் இந்த ’நெருப்புடா’ கொடுத்த பணத்திற்கு ரசிகர்களை முழுசாக திருப்திப்படுத்தும் படமாக உள்ளது.
ஜெ.சுகுமார்