Casting : Arulnithi, Jiiva, Manjima Mohan, Priya Bhavani Shankar, Robo Shankar, Bala Saravanan
Directed By : N.Rajasekar
Music By : Yuvan Shankar Raja
Produced By : Super Good Films
அருள்நிதியும், ஜீவாவும் நெருங்கிய நண்பர்கள். திருமணமே வேண்டாம், என்று இருக்கும் அருள்நிதி திருமணத்திற்கு சம்மதிக்கும் போது, ஜீவாவின் செயலால் அவரது திருமணம் நின்று போகிறது. திருமணத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஜீவாவுக்கு காதல் செட்டாகும் நிலையில், அந்த காதலுக்கு அருள்நிதி இடையூறாக இருக்கும் சூழல் ஏற்படுகிறது. இப்படி நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்களே, ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்க, அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், அதனால் அவர்களது வாழ்க்கை என்ன ஆனது, என்பதையும் நகைச்சுவையாக சொல்லியிருப்பது தான் படத்தின் கதை.
அடிக்கடி அடிதடியில் இறங்கும் அதிரடி கதாப்பாத்திரத்தில் அருள்நிதி, தனது வார்த்தை ஜாலத்தால் அனைவரையும் ஈர்த்துவிடும் அமைதியான கதாப்பாத்திரத்தில் ஜீவா, என இருவருக்கும் படத்தில் சரிசம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் சண்டைக்காட்சிகள் சற்று அதிகம் என்பதால், அருள்நிதிக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் இருப்பது போல தெரிகிறது. ஆனால், நடிப்பை பொருத்தவரை ஜீவா தான் கூடுதலாக ஸ்கோர் செய்துவிடுகிறார்.
இதுவரை ஜீவா எந்த ஒரு படத்திலும் காட்டாத அளவுக்கு எக்ஸ்பிரஷன்களை வாரி வழங்கியிருப்பதோடு, அதை ரசிக்க கூடிய வகையில் செய்திருப்பவர், ரசிகர்களை சிரிக்கவும் வைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் எக்ஸ்பிரஷனை, காதல், சோகம், சந்தோஷம், கோபம் என அனைத்து இடங்களிலும் காட்டுவதால் அருள்நிதியின் நடிப்பு எடுபடாமல் போகிறது.
மஞ்சுமா மோகன் மற்றும் பிரியா பவானி சங்கர் என இரண்டு கதாநாயகிகளும் தங்களது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். அதே சமயம், இருவரும் உடல் எடை அதிகரித்து சற்று குண்டாகவும் இருக்கிறார்கள்.
அருள்நிதி மற்றும் ஜீவாவுக்கு இணையாக படம் முழுவதும் வரும் ரோபோ சங்கர் மற்றும் பாலசரவணன், பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
ராதாரவி, இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் கதாப்பாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவாக இருக்கிறது. அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத, புதிய காரைக்குடியை பார்க்க முடிகிறது.
ரத்த உறவுகளை விட நட்பே பெரிது, என்ற கருவில் காதலையும், காமெடியையும் சேர்த்து முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் என்.ராஜசேகர், சில இடங்களில் சமூக அக்கறையுடனும் காட்சிகளை வைக்க, அவரின் சமூக அக்கறைக்கு பலம் சேர்க்கும் வகையில் ஆர்.அசோக்கின் வசனங்கள் அமைந்துள்ளது.
நட்பை பற்றி பஞ்ச் வசனம் பேசும் ஹீரோக்கள், அவர்களை சுற்றி நடக்கும் குழப்பங்கள் தான் படத்தின் திருப்புமுனை என்றாலும், அவை அனைத்தும் யூகிக்க கூடியதாக இருப்பது படத்திற்கு பெரிய பலவீனமாக இருக்கிறது. ஆனால், படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் அந்த பலவீனங்களின் பாதிப்பை சரி செய்து படத்தை ரசிக்க வைத்து விடுகிறது.
ரேட்டிங் 3/5