Latest News :

‘குட்டி ஸ்டோரி’ விமர்சனம்

c3e9be760735aa56e5d9400a19f97547.jpg

Casting : Goutham Menon, Vijay Sethupathi, Varun, Amala Paul, Adhithi Balan

Directed By : Goutham Menon, Vijay, Venkat Prabhu, Nalan Kumarasamy

Music By : Karthik, Madhu, Premji Amaran, Hedwin Luz Vishwanath

Produced By : Vels Films International

 

இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியிருக்கும் நான்கு சிறு கதைகளின் தொகுப்பு தான் இந்த ‘குட்டி ஸ்டோரி’.

 

ஒன்றாம் தொகுப்பை இயக்கியிருக்கும் கெளதம் வாசுதேவ மேனன் ஹீரோவாக நடிக்க, அமலா பால் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், வினோத் கிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

 

ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது, என்பதை மையப்படுத்திய கதையில், ஆங்கில வார்த்தைகளை பேசி நடிக்கும் கதாப்பாத்திரத்திற்கு கெளதம் மேனன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவருடைய சிறுவயது வேடத்தில் நடித்திருக்கும் வினோத் கிருஷ்ணன், தனது ஏக்கத்தையும், தடுமாற்றத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

ஒரு காதல் தோற்றால், மற்றொரு காதல் என்று வாழ்ந்த கெளதம் மேனனிடம் தனக்கு இருந்த காதலை மறைக்க முடியாமலும், வெளிப்படையாக சொல்ல முடியாமல், தவிக்கும் மனநிலையை அமலா பால் வெளிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் எதிர்ப்பார்ப்புகளுடன் நகரும் இந்த தொகுப்பு, ஒரு பெண்ணின் காதல் தோல்வியின் வலியை அழுத்தமாகவும், அழகாகவும் பதிவு செய்திருக்கிறது.

 

மனோஜ் பரஹம்சாவின் ஒளிப்பதிவு, கார்த்திக்கின் இசை மற்றும் ஆண்டனியின் படத்தொகுப்பு அனைத்தும் படத்திற்கு பெரும் பலம்.

 

இயக்குநர் விஜய் இயக்குகியிருக்கும் இரண்டாம் தொகுப்பில் மேகா ஆகாஷ், அமிர்டாஷ் பிரதான் ஆகியோர் நடித்துள்ளனர். 

 

ஒன்றை உண்மையாக நேசித்தால் அது எப்படியும் நமக்கு கிடைத்துவிடும் என்ற கருவை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கும் இக்கதையில், இளம் காதலர்களுக்கு இடையே ஒட்டல் அறையில் நடக்கும் சம்பவங்கள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனை தொடர்ந்து வரும் முடிவு, என அனைத்தும் அக்கால படங்களில் பார்த்தவைகளாக இருக்கிறது.

 

அரவிந்த் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, மதுவின் இசை மற்றும் ஆண்டனியின் படத்தொகுப்பு அனைத்தும் அளவாக உள்ளது.

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் மூன்றாவது தொகுப்பு, வீடியோ கேம் விளையாட்டை மையமாக கொண்ட காதல் கதையாகும். இதில், வருண், சங்கீதா, சாக்சி அகர்வால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

பார்க்காமல் காதலிப்பதை தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைத்து கையாண்டிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, காதலை நம்பிக்கையாக சித்தரித்திருக்கிறார். ஏதோ ட்விஸ் இருக்கும் என்ற நம்பிக்கையை கதையின் துவக்கத்தில் ஏற்படுத்துபவர், இறுதியில் ஏமாற்றி விட்டார்.

 

கம்ப்யூட்டர் முன்பு வீடியோ கேம் விளையாடிக் கொண்டே தனது காதலை வெளிப்படுத்தும் வருண் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரண், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் ஆகியோரை விட கிராபிக்ஸ் செய்தவருக்கு தான் அதிக வேலை.

 

நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் நான்காவது தொகுப்பில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் நடித்திருக்கிறார்கள். கணவன், மனைவி  இரண்டு கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குநர் நலன், மனைவிகளை ஏமாற்றும் கணவர்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார்.

 

கதை சிறிதாக இருந்தாலும், அசால்டாக அசுரத்தன நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் சேதுபதி, சிறு சிறு எக்ஸ்பிரஷன்களில் கூட ஸ்கோர் செய்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கும் அதிதி, அமைதியாக இருந்துக் கொண்டே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.

 

செட் பிராப்பர்ட்டிகளின் மீதும் படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக காட்சிகளை கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் என்.சண்முகசுந்தரம், விஜய் சேதுபதியை கூடுதல் பொலிவுடன் காட்டியிருக்கிறார். ஹெட்வின் லூஸ் விஸ்வநாத்தின் இசையும் பலம் சேர்த்துள்ளது. ஸ்ரீதர் பிரசாத்தின் படத்தொகுப்பு கச்சிதம்.

 

காதலை கண்ணியமாக கையாண்டிருக்கும் இந்த நான்கு கதைகள் கொண்ட ’குட்டி ஸ்டோரி’ காதலர்களின் இனிய நினைவுகள் கொண்ட டைரி.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery