Latest News :

’மாயமோகினி’ விமர்சனம்

322b2e2ddf01d6e76e7ef6359dccaa5b.jpg

Casting : அப்துல்லா, ஜோதிஷா, சாரிகா, இமான் அண்ணாச்சி, கே.ஆர்.விஜயா, சிசர் மனோகர்

Directed By : ராசாவிக்ரம்

Music By : எம்.ஜெயராஜ்

Produced By : கே.தங்கவேலு

 

பேய் இருக்கா? இல்லையா? என்ற தலைப்பில் டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி ந்டத்தப்படுகிறது. பேய் இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கும் அந்த சேனலை தொடர்பு கொள்ளும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் ஊரில் மோகினி பேய் இருப்பதாகவும் அதனை ஊர் மக்கள் அனைவரும் பார்த்திருப்பதாகவும் கூறுவதோடு, கேமராவோடு வந்தால் நிருபீக்க நாங்க தயார், என்று சேனல் நிர்வாகத்திடம் கூறுகிறார்கள். கிராம மக்கள் கூறியது போலவே, பேய் இருப்பதை நிரூபிக்க அந்த ஊருக்கு கேமரா மேன் மற்றும் நிருபரை சேனல் நிர்வாகம் அனுப்பி வைக்கிறது. அவர்கள் தான் ஹீரோ அப்துல்லா, ஹீரோயின் ஜோதிஷா.

 

பேய் கிராமத்தில் தங்கும் கேமரா மேனான அப்துல்லாவும், நிருபர் ஜோதிஷாவும் இரவு நேரத்தில் மோகினி பேயை தேடிப் போகும் போது, மோகினி ஹீரோ அப்துல்லா தோற்றமுடைய பிணம் ஒன்றை வைத்துக் கொண்டு அழுதுக்கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் அப்துல்லா தனக்கும் அந்த மோகினி பேய்க்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரித்து தெரிந்துக் கொள்ளும் போது, அந்த மோகினி பேய் அப்துல்லாவை அடைய நினைக்கிறது. அதே சமயம் அப்துல்லாவை காதலிக்கும் ஜோதிஷா தனது காதலுக்காக மோகினியுடன் போட்டி போட, இறுதியில் என்ன நடந்தது? மோகினி பேய்க்கும் அப்துல்லாவுக்கும் என்ன தொடர்பு? என்பது தான் ‘மாயமோகினி’ படத்தின் மீதிக்கதை.

 

அறிமுக ஹீரோ அப்துல்லா கிராமத்து மனிதராகவும், நகரத்து இளைஞராகவும் இரு வேடங்களில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு  கச்சிதமாக பொருந்தியிருக்கும் அப்துல்லா, எதிர்காலத்தில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல், வில்லன் உள்ளிட்ட வேடங்களிலும் நடித்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. 

 

ஜோதிஷா, சாரிகா ஆகிய இரண்டு நாயகிகளும் நடிப்பில் தங்களை வல்லவர்களாக நிரூபித்ததை விட கவர்ச்சியில் வல்லவர்களாக நிரூபித்தவர்கள். ஆனால், இந்த படத்தில் கவர்ச்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு முடிந்தவரை நடிப்பில் வல்லவர்களாக தங்களை நிரூபிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

 

இமான் அண்ணாச்சி மற்றும் சிசர் மனோகர் ஆகியோரது காமெடி காட்சி பெரிதாக எடுபடவில்லை. வித்தியாசமான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரம் மிக குறைவான காட்சிகளில் வருவதால் மனதில் ஒட்டவில்லை.

 

பேய் படம் என்றாலும், கொடூரமான மேக்கப் உள்ளிட்டவை மூலம் ரசிகர்களுக்கு திகில் பயத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல், ரொம்ப சாதாரணமாகவே பேயை கையாண்டிருக்கிறார் இயக்குநர் ராசாவிக்ரம்.

 

விட்டாலாச்சாரியார் எடுக்கும் படங்களைப் போன்ற கான்சப்ட் கொண்ட படம் என்றாலும், படத்தில் சிறு அளவு கூட கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்படவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தான் சில சாதாரண கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

 

பல கோடிகளை செலவு செய்து படு மோசமான படம் எடுப்பவர்களுக்கிடையே, ரொம்ப சிறிய பட்ஜெட்டில், தான் சொல்ல வந்த விஷயத்தை ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராசாவிக்ரம்.

 

எளிமையான வார்த்தைகளுக்கு அழகான மெட்டு போட்டிருக்கும் இசையமைப்பாளர் எம்.ஜெயராஜின் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், பின்னணி இசை ரொம்ப அல்ல, ரொம்ப ரொம்ப பழைய பார்மெட்டில் இருக்கிறது. திரைக்கதைக்கு ஏற்பட கேமராவை கையாண்டுள்ள கே.வி.ராஜன், குறிப்பிட்ட சில லொக்கேஷன்களிலேயே முழு படத்தையும் முடித்திருக்கிறார்.

 

இந்த படம் நம்மை பிரமிக்க வைக்கிறதோ இல்லையோ, இந்த படத்தின் கதை, இப்படத்தை தயாரித்துள்ள கே.தங்கவேலுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம், என்பதை அறியும் போது ரொம்பவே பிரமிப்பாக இருக்கிறது. அப்படி தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை, திரைப்படமாக தயாரிப்பாளர் தங்கவேலு அவரால் முடிந்த அளவுக்கு நேர்த்தியாக தயாரித்துள்ளார்.

 

தற்போது படம் தயாரிப்பது சுலபம் என்றாலும், அப்படத்தை திரையரங்கிற்கு கொண்டு வருவது மிகப்பெரிய சவால் நிறைந்த பணியாகும். அத்தகைய சவாலை சமாளிக்க முடியாமல் பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர்களே சில சமயங்களில் தடுமாறும் போது, தனது வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற விருப்பத்தில், தங்கவேலு அதை படமாக தயாரித்ததுடன், வெற்றிகரமாக தியேட்டருக்கும் கொண்டு வந்தததற்காகவே அவரை பாராட்டி, அவரது இந்த முதல் முயற்சியை ஊக்குவிக்கலாம்.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery