Latest News :

’கமலி From நடுக்காவேரி’ விமர்சனம்

995f955a1ac44e7cd0c98aac45cdc37b.jpg

Casting : Anandhi, Prathap Pothan, Rohit Seraph, Imman Annachi, Azhagamperumal,

Directed By : Rajasekar Duraisamy

Music By : Dheenathayalan

Produced By : Abbundu Studios

 

டிவி-யில் பார்க்கும் இளைஞர் மீது காதல் வயப்படும் கிராமத்து பெண்ணான ஆனந்தி, அவருக்காக சென்னை ஐஐடி-யில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று முடிவு செய்ய, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, நல்ல திரைப்படமாக மட்டும் இன்றி, இளைஞர்களுக்கான நல்ல பாடமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

 

காதல் உள்ளிட்ட பலவித குழப்பமான மனநிலையில் இருக்கும் மாணவர்களுக்கு சரியான பாதையை காட்டும் விதத்தில் படத்தின் கதையும் காட்சிகளும் அமைந்துள்ளது.

 

கமலி கதாப்பாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை, என்று சொல்லும் அளவுக்கு தனது வெகுளித்தனமான நடிப்பு மற்றும் முகத்தால் படத்தின் மிகப்பெரிய பலமாக ஆனந்தி இருக்கிறார். நீளமான வசனங்கள் பேசவில்லை என்றாலும், இளம் பருவ காதல் உணர்வுகளை தனது கண்களினாலேயே அழுத்தமாக வெளிப்படுத்தும் ஆனந்தியின் நடிப்பு, கமலி என்ற கதாப்பாத்திரத்தை நம் மனதில் ஆழமாக பதிய வைத்துவிடுகிறது.

 

ஐஐடி மாணவராக நடித்திருக்கும் ரோகித் செராப், பெண்கள் மொய்க்கும் சக்கரை கட்டி போல இருக்கிறார். பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசினாலும் அவரது பேசும் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது. 

 

பிரதாப் போத்தனின் கதாப்பாத்திரத்திற்கும் அவரது அளவான நடிப்புக்கும் பல நல்லாசிரியர் விருதுகளை வழங்கலாம். இமான் அண்ணாச்சி, அழகம்பெருமாள் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 

 

சில நிமிடங்கள் வரும் வினாடி வினா போட்டி நடத்தும் நடுவரின் நடிப்பு கூட ஏதோ நிஜமான வினாடி வினா அரங்கில் நாம் உட்கார்ந்திருபது போல உணர செய்கிறது.

 

ஜெகதீஷன் லோகயனின் ஒளிப்பதிவு அழகான கிராமத்துக்கு பயணம் சென்ற அனுபவத்தோடு, ஐஐடி-க்குள் நுழைந்த அனுபவத்தையும் கொடுக்கிறது. தீனதயாளனின் பாடல்கள் இனிமை. பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணிக்கிறது.

 

கதாநாயகியை மையப்படுத்திய கதை என்றாலும், படம் பார்ப்பவர்களுக்கு அந்த உணர்வே ஏற்படாத வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி.

 

காதலுக்காக ஐஐடி-யில் சேருவதா? என்று ஆரம்பத்தில் நம்மை அதிர வைக்கும் இயக்குநர், பிறகு அதையே வைத்து, இரண்டாம் பாதியில் சொல்லியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் சபாஷ் போட வைக்கிறது.

 

மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி அறிவுரை சொல்லும் இடங்கள் படத்தில் பல இருந்தாலும், அவற்றை தவிர்த்துவிட்டு, ஒரு சுவாரஸ்யமான படமாக இயக்கியிருப்பதோடு, தான் சொல்ல நினைத்ததையும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

 

ஐஐடி-யில் சேர வேண்டும் என்று நினைக்கும் ஆனந்திக்கு, பிரதாப் போத்தன் பயிற்சி அளிக்க தொடங்கும் போது வேகம் எடுக்கும் படம், ஆனந்தியின் ஐஐடி அனுபவத்தால் நம் கவனத்தை முழுமையாக ஈர்த்துவிடுகிறது. பொது அறிவு வினாடி வினா போட்டி நம்மை சீட் நுணியில் உட்கார வைக்க, இறுதியில், “அடடே....” என்று சொல்லும் விதமாக படத்தை முடித்திருக்கும் இயக்குநர் ராஜசேகர் துரைசாமியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

’கமலி From நடுக்காவேரி’ நல்ல திரைப்படத்திற்கான சரியான அடையாளம்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery