Latest News :

’சக்ரா’ விமர்சனம்

f8dbb6f024a48972a0bd95bede5a53bd.jpg

Casting : Vishal, Shraddha Srinath, Regina Cassandra

Directed By : MS Anand

Music By : Yuvan Shankar Raja

Produced By : Vishal Film Factory

 

ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பயன்பாட்டுக்காக மக்கள் கொடுக்கும் தகவல்களைக் கொண்டு நூதன முறையில் மிகப்பெரிய திருட்டில் மர்ம கும்பல் ஈடுபட, அந்த கொள்ளையின் பின்னணி மற்றும் அந்த குற்றவாளிகளை ஹீரோ விஷால் எப்படி கண்டுபிடிக்கிறார், என்பது தான் படத்தின் கதை.

 

’டிஜிட்டல் இந்தியா’-வுக்கு பின்னால் இருக்கும் மிக பயங்கரமான பாதிப்பு குறித்து சில தமிழ்ப் படங்கள் பேசியிருக்கிறது. ஏன், விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தில் கூட இந்த விஷயம் கையாளப்பட்டிருந்தாலுலும், ”இப்படியும் நடக்குமா!” என்று நமக்கு அதிர்ச்சியளிக்கும் கருவுக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

 

ஆக்‌ஷன் படங்களை அசால்டாக கையாளும் கோலிவுட் ஹீரோக்களில் மிக முக்கியமானவராக திகழும் விஷால், இப்படத்தில் நடிப்பு மூலமாகவே ஆக்‌ஷன் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஹீரோயிஷத்தை வெளிக்காட்டாமல் கதையின் நாயகனாக வலம் வந்திருக்கும் விஷாலின் நடிப்பு, திரைக்கதையின் வேகத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

படத்தின் முக்கியமான கதாப்பாத்திரத்திரமாக ஹீரோயின் வேடம் இருந்தாலும், அவருக்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கிறது. அந்த குறைவிலும் நிறைவாக செய்திருக்கிறார் ஷரத்த ஸ்ரீநாத்.

 

படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் ஹீரோவுக்கு நிகரான வேடமாக இருப்பதோடு, வித்தியாசமாக இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அந்த வேடத்தில் நடித்திருக்கும் ரெஜினா கெசண்ட்ராவின் நடிப்பு அதிரடியாக இருப்பதோடு, அவர் அழகான ராட்சசியாக மனதில் நின்று விடுகிறார்.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பாடல்கள் இல்லை என்றாலும், படத்தின் பின்னணி இசை ஈர்க்கிறது. அதிலும், வில்லி கதாப்பாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை நடுங்க வைக்கிறது. பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறது.

 

எதற்கு எடுத்தாலும் ஆன்லைனை நாடும் மக்களுக்கு அதன் பின்னணியில் இருக்கும் பயங்கரத்தை மிக தெளிவாக விவரித்திருக்கும் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த், எதிர்ப்பார்க்க முடியாத பல ட்விஸ்ட்டுகளோடு படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதோடு, சமூக அக்கறையுடனான காட்சிகளை வைத்து கைதட்டல் பெறுகிறார்.

 

படு வேகமாக நகரும் படத்தில் காமெடி என்ற பெயரில் ரோபோ சங்கரின் நடிப்பு செம கடுப்பேற்றுகிறது. படத்தின் மிகப்பெரிய குறையாக இருக்கும் ரோபோ சங்கரை தவிர்த்திருக்கலாம்.

 

படத்தின் துவக்கதிலேயே ரசிகர்களை கதைக்குள் இழுத்து செல்லும் இயக்குநர், அடுத்து என்ன நடக்கும்? என்ற கேள்வியோடு நம்மை சீட் நுணையில் உட்கார வைத்து, படத்தை படு வேகமாக நகர்த்துகிறார். இடைவேளையின் போது வில்லன் கதாப்பாத்திரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாலும், அவரை விஷால் நெருங்குவதும், பிறகு இருவருக்குமான மோதல் என்று கிளைமாக்ஸ் வரை படத்தை படு சுவாரஸ்யமாக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் நகர்த்தியிருக்கிறார்.

 

வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த திரைப்படமாக மட்டும் இன்றி, மக்களுக்களை எச்சரிக்கும் திரைப்படமாகவும் இருக்கும் ‘சக்ரா’ நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery