Latest News :

’வேட்டை நாய்’ விமர்சனம்

fe46bc3501c3395a9dcf5263fd7f1d04.jpg

Casting : RK Suresh, Subiksha, Ramki, Rama, Namo Narayanan

Directed By : S.Jaishankar

Music By : Ganesh Chandrasekar

Produced By : Surabhi P.Jyothimurugan

 

ரவுடித்தனம் செய்துக் கொண்டிருக்கும் ஹீரோ ஆர்.கே.சுரேஷுக்கும், நாயகி சுபிக்‌ஷாவுக்கு திருமணம் நடக்கிறது. கணவரை திருத்தி நல்வழிப்படுத்த சுபிக்‌ஷா முயற்சிக்க, சுரேஷ் திருந்தினாரா இல்லையா, என்பதை செண்டிமெண்டாக சொல்லியிருக்கிறார்கள்.

 

ராம்கி என்ன சொன்னாலும் செய்யும் அடியாளாக அதிரடி காட்டும் ஆர்.கே.சுரேஷ், காதலில் விழுந்ததும் செய்யும் காமெடி கலாட்டா, கணவரானவுடன் மனைவியிடம் காட்டும் அன்பு, என்று நவரச நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். ஆனால், அந்த பாழாப்போன நடிப்பு தான் அவருக்கு வரவே மாட்டேங்குது. வில்லனாக நடித்து பாராட்டு பெற்ற சுரேஷுக்கு, ஹீரோத்தனம் கடினமாக இருப்பது போல, அவரது ஹீரோ நடிப்பை பார்க்க, நமக்கு ரொம்ப கஷ்ட்டமாக இருக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் சுபிக்ஷா, இயல்பான அழகோடும் அளவான நடிப்போடும், தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

 

வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் ராம்கி, கவனிக்க வைத்தாலும், அவருடைய கதாப்பாத்திரமும், அவருடைய நடிப்பும் பெரிதாக எடுபடவில்லை.

 

ரமா, நமோ நாராயணன், சுபிக்‌ஷாவை ஒருதலையாக காதலிக்கும் நபர் என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

கதை கொடைக்கானலில் நடந்தாலும், கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவை மட்டுமே கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளரின் பணியும், கணேஷ் சந்திரசேகரின் இசையும் கச்சிதம்.

 

ரவுடித்தனம் செய்துக் கொண்டு வெட்டி ஆபிசராக இருக்கும் ஹீரோவை திருத்தும் மனைவி கதைகள் பல வந்திருந்தாலும், அதை சில மாற்றங்களோடு சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.ஜெய்சங்கர், மதுவினால் ஆண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அந்த ஆண்களால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.

 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றாலும், கதாநாயகனுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்காக பல காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பது சலிப்படைய செய்கிறது. இடைவேளைக்குப் பிறகு கதை தடம் மாறுவதோடு, காட்சிகளும் சீரியல் பாணியில் நகர்வது திரைக்கதையின் வேகத்தை குறைத்துவிடுகிறது.

 

மொத்தத்தில், இந்த ‘வேட்டை நாய்’ வெறிபிடித்த நாயாக நம்மை அச்சுறுத்துகிறது.

 

ரேட்டிங் 2.25/5

Recent Gallery