Latest News :

’நெஞ்சம் மறப்பதில்லை’ விமர்சனம்

da76a601f2c74227544abe4d37d15bca.jpg

Casting : S J Suryah, Regina Cassandra, Nandita Swetha

Directed By : Selvaraghavan

Music By : Yuvan Shankar Raja

Produced By : Escape Artists Motion Picture and Glo Studios

 

பெரும் பணக்கார தம்பதியான எஸ்.ஜே.சூர்யா - நந்திதா ஸ்வேதா, குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலையில் ரெஜினா கசாண்ட்ரா சேருகிறார். எஸ்.ஜே.சூர்யா மற்றும் நந்திதா ஸ்வேதாவின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக இருப்பதோடு, அவர்கள் வீட்டில் சமையல் உள்ளிட்ட அனைத்து வேலையாட்களும் ஆண்களாகவே இருக்கிறார்கள். அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் ரெஜினா கசாண்ட்ரா பாதிக்கப்படுவதும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும் தான் படத்தின் கதை.

 

கொலை செய்யப்பட்ட ஒரு நபரின் அல்லது சிலரது ஆத்மாக்கள், தங்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவது தான் பேய் படங்களின் பெரும்பாலான கதைக்களமாக இருக்கும். இப்படி ஒரு வழக்கமான கதைக்களத்தை கையில் எடுத்தாலும், இயக்குநர் செல்வராகவன் அதை ரசிகர்களுக்கு கொடுத்த விதத்தில், தனது பாணியை கையாண்டிருப்பதோடு, ரசிகர்கள் ரசிக்கும்படியான காட்சிகள் நிறைந்த படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார், என்று சொல்வதை விட அவருடைய ஸ்டைல் நடிப்புக்கு ஏற்ற கதாப்பாத்திரம் என்று சொல்லலாம். தனது நடிப்பின் மூலம், தனது கதாப்பாத்திரத்தின் மீது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடும் எஸ்.ஜே.சூர்யா, நடனம் மூலமாகவும் ரசிக்க வைக்கிறார்.

 

பணக்கார குடும்ப பெண்களின் அதிரடியை தனது நடிப்பில் அப்பட்டமாக வெளிக்காட்டும் நந்திதா ஸ்வேதா, மிக அழுத்தமான கதாப்பாத்திரத்தில் அசால்டாக நடித்திருக்கிறார்.

 

மேக்கப் இல்லாமல் எளிமையாக நடித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ராவின் அழகும், நடிப்பும் படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை ஒன்றிவிட செய்யும் முக்கிய காரணியாக உள்ளது.

 

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருந்தாலும், செல்வராகவன் - யுவன் கூட்டணியின் மீது மிக்கப்பெரிய எதிர்ப்பார்ப்புக் கொண்டிருக்கும் ரசிகர்களை ஏமாற்றி விட்டது. 

 

கேமரா மூலமாகவும் சில இடங்களில் கதை சொல்லும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, திரைக்கதைக்கு ஏற்ப அளவான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.

 

இந்த கதையை இப்படியும் சொல்லலாம், என்ற இயக்குநரின் முயற்சியை திருவினையாக்கியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே-வின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம். 

 

திகில் படத்தை காதல் ரசணையோடு கையாண்டிருக்கும் இயக்குநர் செல்வராகவன், படத்தின் துவக்கத்தில் இருந்தே ரசிகர்களை கதைக்குள் ஒன்றிவிடும் வகையில், கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் கையாண்டிருக்கிறார். 

 

என்ன நடக்கப் போகிறது, என்ற எதிர்ப்பார்ப்போடும், என்னதான் நடக்கிறது, என்று புரிந்துக் கொள்ள முடியாதபடியும் முதல் பாதி படத்தை நகர்த்திச் செல்லும் செல்வராகவன், அவ்வபோது சிரிக்க வைப்பதோடு, “அவரு எம்.ஜி.ஆர் போல” என்று சொல்வதற்கான உண்மையான அர்த்தத்தை சொல்லி திரையரங்கையே அதகளப்படுத்துகிறார். கூடுதலாக எஸ்.ஜே.சூர்யா சில இடங்களில் சிவாஜி போல நடிப்பதோடு, சிறு மாற்றத்தோடு, அவருடைய பட பாடல் வரிகளால், அவரையும் பங்கமாக கலாய்த்திருப்பது திரையரங்கையே அதிர வைக்கிறது.

 

மேலோட்டமாக பார்த்தால் செல்வராகவன் பாணியிலான கமர்ஷியல் படமாக தெரிந்தாலும், கதைக்களத்துடன் சமூகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கான பின்னணி குறித்தும் இப்படம் பேசுகிறது. எத்தனை கோடி கொடுத்து, எப்படிப்பட்ட பேரழிகளையும் வசப்படுத்தும் பல கோட்டீஸ்வரர்களால் சாதாரணமான பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது எதனால், என்பதை எளிமையாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கும் செல்வராகவன், இப்படியான குற்றங்களில் இருந்து குற்றவாளிகளை காப்பாற்றுவதும், அதனால் இதுபோன்ற குற்றங்கள் தொடருவதற்கும் பெண்களே காரணமாக இருப்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

முதல் பாதி முழுவதும் ரசிக்கும்படி நகர்த்திச் செல்லும் செல்வராகவன், இரண்டாம் பாதியில் திடீரென்று மாய உலகத்திற்குள் அழைத்துச் சென்று நம்மை நோகடிக்கவும் செய்கிறார். இருந்தாலும், வழக்கமான ஒரு பேய் கதையை, இப்படியும் கொடுக்க முடியும், என்று நிரூபித்திருக்கும் செல்வராகவனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஏமாற்றவில்லை.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery