Casting : Chinna, Kasimayan, Risha Haridass, Rajasimman
Directed By : Veerangan K
Music By : Raja Sai
Produced By : K.Kasimayan
முரட்டுத்தனமாக சுற்றித்திரியும் ஹீரோவை காதல் எப்படி மாற்றுகிறது, என்பதை திருடுவதை தொழிலாக கொண்ட சமூகத்தின் பின்னணியோடு சொல்லும் படம்.
திருட்டு கூட்டங்களை வளர்க்கும் ஜமீனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹீரோ சின்னாவும், அவரது நண்பர்களும் கால் போன போக்கில் வாழ்ந்துக் கொண்டிருக்க, அவர்களுடைய வாழ்வில் காதல் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது, அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன, என்பது தான் படத்தின் கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் சின்னாவுக்கு இது தான் முதல் படம் என்றாலும், அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல நடித்திருக்கிறார். சண்டியர் தனம் செய்யும் போது நடிப்பில் அதிரடி காட்டுபவர், காதல் காட்சிகளில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரிஷா ஹரிதாஸ் எளிமையான அழகோடும், இயல்பான நடிப்போடும் வலம் வருகிறார்.
ஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் காசிமாயனும் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். மற்றொரு நண்பராக நடித்திருக்கும் நடிகரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
வில்லன்களாக நடித்திருக்கும் ராஜசிம்மன், பசுபதி ராஜ், கயல் பெரரா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
ராஜா சாயின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை கதைக்கு ஏற்பவும் பயணித்துள்ளது. பி.வாசுவின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளை இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது.
சின்னாவின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் வீராங்கன்.கே. நாம் ஏற்கனவே பார்த்த கதைப்போல இருந்தாலும், இதுவரை சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை பின்னணியாக வைத்து சொல்லியிருப்பதும், கதாப்பாத்திரங்களின் இயல்பு தன்மையாலும் படத்தை ரசிக்க முடிகிறது.
திருடுவதை குலத்தொழிலாக கொண்ட சமூகத்தின் பின்னணியையும், அவர்களை திருடர்களாக மாற்றியவர்கள் யார்? அதனால் அவர்கள் அனுபவிக்கும் பலன்கள் என்ன? என்பதை தைரியமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் வீராங்கனை பாராட்டலாம்.
‘கணேசாபுரம்’ விறுவிறுப்பு
ரேட்டிங் 3/5