Casting : Rana, Vishnu Vishal, Zoya Hussain, Shriya Pilgaonkar
Directed By : Prabhu Solomon
Music By : Shantanu Moitra
Produced By : Eros International
வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டு ராணா வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அதிகார வர்க்கத்தினரால் வனத்திற்கும், வனவிலங்குகளுக்கும் ஆபத்து ஏற்பட, அவர்களை எதிர்த்து போராடும் ராணா, வனத்தையும், வனவிலங்குகளையும் காப்பாற்றினாரா இல்லையா, என்பது தான் ’காடன்’ கதை.
வனங்களை பணமாக்கும் அதிகார வர்க்கத்தினரிடம் இருந்து வனங்களை பாதுகாக்கவில்லை என்றால், எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும், என்ற பாடத்தை ஜனரஞ்சகமான திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
யானைகளை பேர் சொல்லி அழைப்பது, மரங்கள் மற்றும் பறவைகளுடன் பேசுவது என்ற வித்தியாசமான கதாப்பாத்திரமாக இருக்கும் ‘காடன்’கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பில் வித்தியாசத்தை காட்ட முயற்சித்திருக்கும் ராணா, பல இடங்களில் பெரிய அளவில் உழைத்திருக்கிறார். வனத்திற்கு ஆபத்து என்றவுடன் கோபம் கொண்டு அதிகாரிகளை புரட்டி எடுப்பது, யானைகள் தன் மீது கோபமாக இருப்பதை எண்ணி கலங்குவது என்று பல இடங்களில் பாராட்டும்படி ராணா நடித்திருக்கிறார்.
யானை பாகனாக கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் விஷ்ணு விஷாலின் கும்கி மாறன் கதாப்பாத்திரம் பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தினாலும், கதையுடன் நெருக்கமாக இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் ஜோயா ஹுசைன் மற்றும் ஷ்ரியா பில்கவுன்கர் கொடுத்த வேலையை முழுமையாக செய்திருக்கிறார்கள்.
அமைச்சராக நடித்திருக்கும் ஆனந்த் மகாதேவன், ஆகாஷ், ஸ்ரீகாந்த், சம்பத்ராம், ரவிகாலே, போஸ் வெங்கட் ஆகியோர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.
அசோக்குமார் ராஜுவின் ஒளிப்பதிவு காட்டுக்குள் பயணம் சென்ற அனுபவத்தை கொடுத்தாலும், பிரபு சாலமன் படங்களில் காட்டப்படும் வனத்தின் பிரம்மாண்டத்தை காட்ட தவறியிருக்கிறது.
சாந்தனு மோய்த்ரா இசையில் பாடல்கள் எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை ஈர்க்கிறது.
யானைகளின் பிளிறல், பறவைகளின் வித்தியாசமான ஒலி ஆகியவற்றின் மூலம் ரசூல் பூக்குட்டி பலம் சேர்த்திருக்கிறார்.
கோயம்பத்தூரில் பல ஏக்கர் வனத்தை அழித்து கோவில் மற்றும் யோகா மையம் உருவாக்கப்பட்டதால், யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அதன் பின்னணியை மெல்லிய இழையாக சொல்லியிருக்கும் இயக்குநர் பிரபு சாலமன், வனங்களை அழிப்பதால் ஏற்பபடும் விளைவுகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
வனங்களை பாதுகாக்க வேண்டும், என்பதை வலியுறுத்தும் படம் என்றாலும், அனைத்து தரப்பினருக்குமான ஒரு படமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரைக்கதை கையாளப்பட்டிருப்பது, சில இடங்களில் பலவீனமாக அமைந்திருந்தாலும், பணத்திற்காக அதிகாரவர்க்கத்தினரால் வனங்கள் அழிக்கப்படும் உண்மையை தைரியமாக சொல்லியதற்காக இயக்குநர் பிரபு சாலமனை பாராட்டலாம்.
நல்ல விஷயத்தை கமர்ஷியலாக சொல்லும் முயற்சியினால் சிறு குழப்பமும், குறையும் படத்தில் ஏற்பட்டிருந்தாலும், தான் சொல்ல வந்ததை அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் பிரபு சாலமனையும், ‘காடன்’ படத்தையும் தாராளமாக வரவேற்கலாம்.
‘காடன்’ எச்சரிக்கை.
ரேட்டிங் 3/5