Casting : ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், நாசர், பவல்
Directed By : பிரம்மா
Music By : ஜிப்ரான்
Produced By : நடிகர் சூர்யா
பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களின் வரவு குறைவான தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் ‘மகளிர் மட்டும்’ எப்படி என்பதை பார்ப்போம்.
சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் பள்ளி காலத்தில் நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள். ஹாஸ்டலில் தங்கி படிக்கும் இவர்கள் ஒரு விஷயத்திற்கு ஆசைப்பட்டு, அதற்காக ஹாஸ்டலில் இருந்து திருட்டுத்தனமாக வெளியேறி நிர்வாகத்திடம் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த் தவறுக்காக அவர்களது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவர்களது பெற்றோர், அவர்களது நட்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள்.
பிறகு காலங்கள் ஓடிவிட, இந்த மூன்று பேருடைய நட்பு குறித்து அறியும் ஊர்வசியின் மருகளான ஜோதிகா, இந்த தோழிகளை மீண்டும் சந்திக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, அவர்கள் பள்ளி காலத்தில் ஆசைப்பட்டதையும் நிறைவேற்றும் முயற்சியில் இறங்க, அது நடந்ததா இல்லையா? என்பது ஒரு பக்கம் இருக்க, பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என்றால் என்ன? என்பதையும் சொல்லியிருப்பது, தான் ‘மகளிர் மட்டும்’ படத்தின் கதை.
பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களை விட ஒரு படி மேலேயே ன்றுவிட்டாலும், இன்னமும் பெண்கள் அடிமைகளாகவும், சம்பளம் இல்லாத வேலைக்காரர்களாகவும் நடத்தப்படுகிறார்கள், என்ற பழைய ரெக்கார்ட் இந்த படத்திலும் ஓட்டப்பட்டிருந்தாலும், “தங்கை நகைகளை போட்டுக் கொண்டு, ஒரு பெண் தனியாக நடந்து செல்வது, பெண் சுதந்திரம் அல்ல”, ”தான் விரும்பும் ஆணை எந்தவித தடையும் இன்றி ஒரு பெண் எப்போது திருமணம் செய்துகொள்கிறாளோ அது தான் பெண் சுதந்திரம்” என்ற மிகப்பெரிய விஷயத்தை ரொம்ப அழகாக இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் திரைக்கதையும், காட்சி அமைப்பும் நம்மை எப்படி ரசிக்க வைக்கிறதோ, அதைவிட ஒரு பங்கு அதிகமாகவே நடிகர்களின் கதாபாத்திர தன்மையும், அதில் அவர்கள் நடித்த விதமும் கவர்ந்துவிடுகிறது.
துதுறுவென்று சுட்டி பெண்ணாக இருக்கும் ஜோதிகாவின் ஹார் ஸ்டைல் மற்றும் அவரது பாடி லேங்குவேஜ் ரொம்ப புதுசாக இருப்பதோடு, திருமணமான ஜோவா இவர், என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நடித்திருப்பதோடு, தனது தோற்றத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை காண்பித்திருக்கிறார்.
சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் தான் கதையின் நாயகிகள் என்றாலும் அவர்களது நடிப்பு எந்தவித ஸ்பெஷலும் இல்லை. இருந்தாலும், அவர்கள் ஏற்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமான பணியை கொடுத்திருக்கிறார்கள்.
ஜோதிகாவுக்கு பிறகு நடிப்பில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பவல் மற்றும் நாசர். ஆக்ராவில் வசிக்கும் தமிழர்களாக நடித்துள்ள இந்த இரண்டு பேரும், ரொம்ப சின்ன காட்சியாக இருந்தாலும், தங்களது இயல்பான நடிப்பு மூலமாகவும், எக்ஸ்பிரஸன்ஸ் மூலமாகவும் அப்ளாஸ் வாங்குகிறார்கள். இந்தி கலந்த தமிழில் பேசிக்கொண்டு, எப்போதும் முகத்தை கோபமாகவே வைத்துக் கொண்டிருக்கும் பவல், க்ளைமாக்ஸின் முன்பாக மனம் மாறும் அந்த ஒரு காட்சிக்கு பிறகும், தனது சுடுமூஞ்சி முகத்துடனே தனது கதாபாத்திரத்தை கையாண்டு, பர்பாமன்ஸில் பின்னுகிறார். மனைவி,, மருமகள், மகள், பேத்தி என யாராக இருந்தாலும் பெண்களை அதற்றி பேசும் திமீர் பிடித்த ஆணாக நடித்துள்ள நாசர், தனது நடிப்பால் படத்தில் உள்ள அனைத்து மகளிர்களையும் ஓரம் கட்டிவிடுகிறார்.
தனது அண்ணிக்கு பிரசவ வலி ஏற்படும் போது, எந்தவித பதற்றமும் இல்லாம, “எண்ணாச்சு.., அந்த பேண்ட எடு...” என்று கூலாக கேட்கும் கோகுலின் அந்த சிறிய ரியாக்ஷன் மூலம் கூட பெண்களின் வலியையும், அதை ஆண்கள் பார்க்கும் முறையையும் இயக்குநர் புரிய வைக்கிறார்.
ஜிப்ரானின் இசையில் அனைத்து மெட்டுகளும் வெறி குட் என்று சொல்ல வைப்பதோடு, பின்னணி இசையோடு, பாடல்கள் இசையிலும் தனது தனித்தன்மையை காண்பித்திருக்கிறார். பள்ளிக் காலத்தில் மூன்று தோழிகளை காட்டும் போதும், அவர்களை முதியவர்களாக காட்டும் போது ஒளிப்பதிவில் வித்தியாசத்தை காண்பித்திருக்கும் ஒளிப்பதிவாளர் மணிகண்டன், இயக்குநர் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார். படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேமின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
அப்பா, அம்மா ஆகியோரது கட்டுப்பாட்டில் வாழும் பெண், பிறகு கணவனுக்காக, பிறகு பிள்ளைகளுக்காக, என்று தனது காலம் முழுவதும் பிறருக்காகவே வாழ்வதாகவும், அப்படி இல்லாமல் தங்களுக்காக தாங்கள் விரும்பும் வகையில் வாழ வேண்டும், அப்படி வாழ்வது தான் உண்மையான பெண் சுதந்திரம், என்பதை இப்படத்தின் மூலம் நமக்கு பாடமாக சொல்லாமல், ஜனரஞ்சகமான முறையில் நல்ல படமாகவே இயக்குநர் பிரம்மா கொடுத்திருக்கிறார்.
படம் பெண்களை பற்றி பேசினாலும், ஆண்கள் எல்லோரும் பெண்களை அடிமையாகப் பார்ப்பதில்லை என்றும், அதேபோல் பெண்கள் எல்லோரும் அடிமைப்போல வாழ்வதில்லை என்பதையும் சொல்லி, ஆண் பெண் இரண்டு தரப்பினரையும் பேலன்ஸ் செய்திருக்கும் இயக்குநர் பிரம்மா, பெண்கள் குறித்து மட்டுமே பேசாமல், சங்கர் - கெளசல்யா ஜோடியின் கெளரவ கொலை குறித்தும் லேசாக தொட்டிருப்பவர், அந்த சம்பவம் நடந்த போது மக்கள் வேடிக்கை பார்க்காமல் தடுத்திருக்கலாம், என்பதை பக்கம் பக்கமாக வசனம் பேசாமல், சிறிய காட்சி மூலம் நச்சென்று சொல்லியிருக்கிறார்.
வெளிநாட்டில் இருக்கும் ஊர்வசியின் மகன், அதாவது ஜோதிகாவின் வருங்கால கணவர் வேடத்தில் எந்த நடிகர் நடித்திருப்பார், என்ற ஒரு விஷயத்தை தவிர படத்தில் சஸ்பென்ஸான விஷயம் எதுவும் இல்லை என்பது படத்தின் பலவீனங்களில் ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும், பிரிந்த மூன்று தோழிகள் மீண்டும் ஒன்றாக சேருவது என்ற கருவை வைத்துக்கொண்டு, அதை பெண்களுக்கான படமாகவும், அதே சமயம் ஆண்களும் ஏற்றுக்கொள்ளும் படமாகவும் இயக்குநர் பிரம்மா கொடுத்திருக்கிறார்.
இப்படத்தை பார்க்கும் கணவர்கள் தங்களது மனைவியை நேசிக்க தொடங்குவார்கள், ஏற்கனவே நேசித்துக் கொண்டிருப்பவர்கள் இன்னும் அதிகமாக நேசிப்பார்கள், மகன்கள் தங்களது அம்மாக்களின் தியாகங்களை புரிந்துக்கொள்வார்கள் என்பது மட்டும் அல்லாமல், மருமகள்களும் தங்களது மாமியார்கள் மீது கொஞ்சமாவது இறக்கத்தை காட்டுவார்கள்.
மொத்தத்தில் இந்த ‘மகளிர் மட்டும்’ பெண்களுக்கான படமாக மட்டும் இல்லாமல், அனைத்து தரப்பினருக்குமான படமாகவே உள்ளது.
ஜெ.சுகுமார்