Casting : Kangana Ranaut, Aravind Swami, Samuthirakani, Nazzar, Bhaghyashree, Thambi Ramaiah, Poorna, Radharavi
Directed By : Vijay
Music By : GV Prakash Kumar
Produced By : Vishnu Vardhan Induri, Shaailesh R.Singh
மறைந்த நடிகையும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான முதல் திரைப்படம் தலைவி.
இளம் வயதில் நடிகையான ஜெயலலிதா, சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தது, எம்.ஜி.ஆர் உடன் நெருக்கமாக பழகியது, பிறகு அரசியலில் நுழைந்தவர், எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்ததோடு, அவரது மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளராகி, சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு அதில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வர் அரியணையில் அமர்வது வரை சொல்லப்பட்டிருப்பது தான் ‘தலைவி’ படத்தின் கதை.
இந்த கதை பெரும்பாலானவர்கள் அறிந்தது தான் என்றாலும், ஜெயலிதாவின் இந்த பயணத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களும், அதை அவர் சமாளித்த விதத்தையும் திரைக்கதையாக்கியிருப்பது சுவாரஸ்யமாக உள்ளது.
ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா போல் இருக்கிறாரோ இல்லையோ, தனது நடிப்பில் ஜெயலலிதாவின் ஆளுமையை வெளிக்காட்டியிருக்கிறார். நடிகை ஜெயலலிதாவாக சில இடங்களில் தடுமாற்றமடைந்தாலும், அரசியல் தலைவர் ஜெயலலிதாவாக நடிப்பிலும், தோற்றத்திலும் சபாஷ் வாங்கிவிடுகிறார்.
எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி, எம்.ஜி.ஆர் போல நடிக்காமல், அவருடைய கதாப்பாத்திரமாக கச்சிதமாக நடித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்திருக்கும் ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் நடிப்பு புதிதாக இருக்கிறது. பேசுவதை குறைத்துக் கொண்ட சமுத்திரக்கனி, பல இடங்களில் கண்களினால் நடித்து அசத்துகிறார்.
கருணா என்ற வேடத்தில் நடித்திருக்கும் நாசர், வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், நிறைவாக நடித்திருக்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் தம்பி ராமையா, ராதாரவி உளிட்ட அனைவரும் தங்களது வேலை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல், படத்தொகுப்பாளர் ஆண்டனி, கலை இயக்குநர்கள் எஸ்.ராமகிருஷ்ணா, மோனிகா நிகோர் ஆகியோரது கடுமையான உழைப்பு திரையில் தெரிகிறது.
மக்களுக்கு தெரிந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை சுவாரஸ்யமாக சொல்ல நினைத்திருக்கும் இயக்குநர் விஜய், சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் அவருக்கு முக்கிய எதிரியாக இருந்தவரைப் பற்றி மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
பொதுவாக ஜெயலலிதாவின் அரசியல் எதிரி என்றால், மக்களுக்கு சட்டென்று ஒரு முகமும், ஒரு கட்சியும் நினைவுக்கு வரும். ஆனால், அதைவிட, அவருடைய சினிமா பயணத்திலும், ஆரம்ப அரசியல் பயணத்திலும் அவருக்கு அதிகமாகதொல்லைக் கொடுத்த ஒருவர் இருக்கிறார், அதுவும் அவர் எம்.ஜி.ஆர் கட்சியில், அவருக்கு நெருக்கமாக இருந்தவர், என்ற உண்மையை இயக்குநர் விஜய் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் அறிவுத்திறன், ஆளுமை ஆகியவற்றை கச்சிதமாக தொகுத்திருக்கும் இயக்குநர் விஜய், அவருடைய ஒரு பக்கத்தை மட்டுமே காட்டியிருப்பது சில நேரங்களில் டாக்குமெண்டரி படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், இரண்டாம் பாதி அந்த குறையை போக்கி படத்தை விறுவிறுப்பாக நகர்த்து செல்கிறது.
ஒட்டுமொத்த ஆண்களை அடக்கி ஆண்ட பெண், என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஜெயலலிதாவை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர் தான், அவர் இல்லாமல் ஜெயலலிதா இல்லை, என்பதை படத்தின் பல காட்சிகளில் நிரூபித்து வந்த இயக்குநர், ஒரு கட்டத்தில், ஜெயலலிதா இல்லை என்றால், எம்.ஜி.ஆரின் அரசியல் கட்சி அழிந்து போயிருக்கும் என்பதை ரொம்ப அழகாக சொல்லி, ஜெயலலிதாவின் ஆளுமையை நிலைநாட்டியுள்ளார்.
மொத்தத்தில், ‘தலைவி’ ஜெயலலிதாவின் பிள்ளைகளுக்கான படமாக உள்ளது.
ரேட்டிங் 3.5/5
குறிப்பு : ‘தலைவி’ திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.