Casting : விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், பாக்யராஜ், ஆண்ட்ரியா
Directed By : மிஷ்கின்
Music By : அரோல் கரோலி
Produced By : விஷால் பிலிம் பேக்டரி
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகியிருக்கும் டிடேக்டிவ் சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘துப்பறிவாளன்’ எப்படி என்பதை பார்ப்போம்.
திருமண ஆக உள்ள ஆணையும், பெண்ணையும் வேவு பார்ப்பது, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்காக சான்றுகளை சரி பார்ப்பது, என்று ரெகுலர் டிடெக்டிவாக அல்லாமல், மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலான சிக்கலான வழக்குகளை ரொம்ப சிம்பிளாக சால்வு செய்யும் திறமையான துப்பறிவாளரான கணியன் பூங்குன்றனான விஷாலிடம், தனது நாயை யாரோ கொன்று விட்டார்கள், அந்த கொலையாளியை கண்டுபிடித்து தர வேண்டும், என்று கூறி பள்ளி சிறுவன் ஒருவன் வர, அந்த சிறுவனிடம் விஷால் விசாரிக்கையில், நாயின் வயிற்றில் இருந்ததாக கூறி சிறிய இரும்பு துண்டு ஒன்றை அந்த பையன் விஷாலிடம் கொடுக்கிறார். துப்பாக்கி புல்லட்டான அதை வைத்து தனது விசாரணையை தொடங்கும் விஷாலுக்கு, நாய் இறந்து கிடந்த இடத்தில் உடைந்த பல் ஒன்று கிடைக்கிறது. அதை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தும் விஷால், சிலரிடம் விசாரிக்க நெருங்கும் போது, அவர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்பட, வழக்கு தீவிரம் அடைகிறது.
இதற்கிடையே போலீஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழக்க, அந்த கொலையில் உள்ள மர்மங்கள் பற்றி காவல் துறை விஷாலிடம் பேசிக்கொண்டிருக்கும் போது விஷாலுக்கு பொறி தட்டுகிறது. உடனே இதேபோல் நடந்த மற்றொரு மரணம் குறித்து விஷால் விசாரணை நடத்துகிறார். உடனே அவரை கொலை செய்ய சிலர் முயற்சிக்க, மறுபுறம் தொடர் கொலைகள் அறங்கேறியபடி இருக்கிறது. இந்த கொலைகளை செய்வது யார்? எதற்காக இதை செய்கிறார்கள், என்பதை விஷால் எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பது தான் ‘துப்பறிவாளன்’ படத்தின் கதை.
மிஷ்கின் படம் என்றாலே ஸ்மூத்தாக இருக்கும், ஆனால் அதே அளவுக்கு விறுவிறுப்பாகவும் இருக்கும். அப்படி மட்டும் அல்ல, அதற்கு மேலாகவும் இப்படம் ஸ்மூத்னஸ் கலந்த விறுவிறுப்பான படமாக இருக்கிறது. படத்தில் ஏகப்பட்ட முடிச்சுகளைப் போட்டு அந்த முடிச்சுகள் அவிழ்ப்பதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கியிருக்கும் மிஷ்கின், தனது ஸ்டைலில் வித்தியாசமான கொலை சம்பவங்களை வைத்து சுவாரஸ்யமான டிடேக்டிவ் படமாக துப்பறிவாளனை இயக்கியுள்ளார்.
ஹீரோ விஷால் என்று சொன்னாங்கலே, எங்கப்பா ஒரு பிரேம்ல கூட விஷால காணோம், என்று ரசிகர்கள் தேடும் அளவுக்கு விஷால் இதில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். எந்த இடத்திலும் பழைய விஷாலை பார்க்க முடியாத அளவுக்கு தனது நடிப்பில் வித்தியாசத்தை காட்டியிருப்பவர், கணியன் பூங்குன்றான் என்ற கதாபாத்திரமாகவே உருவெடுத்திருக்கிறார். எப்போதும் வழக்கு குறித்த சிந்தனையுடன் சுற்றும் விஷால், திடீரென்று கோபப்படுவதும், பிறகு அதே கோபத்தோடு அன்பை பொழிவதும் என்று நடிப்பில் அசத்துபவர், ஆக்ஷனிலும் படு அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
ஹீரோயின் அனு இம்மானுவேலுக்கு டூயட் மற்றும் பெரிய அளவில் காதல் காட்சிகள் இல்லை என்றாலும், காதலியாக விஷால் மனதில் மட்டும் இன்றி, பிக்பாக்கெட் என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதிலும் ஒட்டிக்கொள்கிறார். விஷாலுடன் வரும் பிரசன்னா ஆரம்பம் முதல் அமைதியாக வருபவர், க்ளைமாக்ஸில் ஹீரோவாகிவிடுகிறார்.
வித்தியாசமான கெட்டப்பில் பாக்யராஜ் வில்லனாக புது அவதாரம் எடுக்க, மெயின் வில்லனாக வரும் வினய் ரொம்ப அமைதியாக மிரட்டுகிறார். அவருடன் வரும் ஆண்ட்ரியாவும் தனது வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
விறுவிறுப்பான காட்சிகளுக்கு மேலும் விறுவிறுப்பு கொடுக்கும் விதமாக அமைந்துள்ள அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் வி.ஐ-ன் கேமாரா ஏரியல் ஷாட்டில் காட்சிகளை பிரமிப்பாக காட்டியிருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியதிலும் மிரட்டுகிறது. படத்தின் நீளம் சற்று அதிகமாக இருந்தாலும், அதை ரசிகர்கள் உணராத வகையில், எடிட்டர் அருண்குமாரின் கத்திரி வேலை செய்திருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் சினிமா தியேட்டரில் போலீஸ் அதிகாரி ஒருவரை வில்லன் கூட்டம் டெக்னிக்கலாக கொலை செய்யும் காட்சியில் தொடங்கும் விறுவிறுப்பு, அதன் பிறகு வரும் அனைத்து காட்சிகளிலும் தொடரும் வகையில் இயக்குநர் மிஷ்கின் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்துள்ளார். சிறுவன் மூலமாக கதையை தொடங்கும் மிஷ்கின் அதே சிறுவன் மூலமாக கதையை முடித்திருப்பது செம.
தனது படம் இப்படித்தான் இருக்கும், இந்த விஷயத்தை இப்படித்தான் சொல்லுவேன், என்று தனக்கான தனி பாதையை வகுத்து அதில் மட்டுமே பயணிக்கும் இயக்குநர் மிஷ்கின், இந்த படத்திற்கும் அதே பாதையை பின்பற்றியிருப்பதாலும், சில காட்சிகளாலும் படம் சற்று ஸ்லோவாக இருப்பது போல தோன்றினாலும், எந்த ஒரு காட்சியையும் நீளமாக காட்டாமல், உடனாடியாக அடுத்தடுத்த காட்சிக்கு போய்விடுவது, படத்தில் ஏற்படும் தோய்வுகளை சரி செய்துவிடுகிறது.
ஹீரோக்களின் பஞ்ச் வசனங்களுக்கு கைதட்டும் ரசிகர்கள் அவர்களது ஆக்ஷன் காட்சிகளுக்கு என்றுமே கை தட்டியது கிடையாது. ஆனால், இந்த படத்தின் க்ளைமாக்ஸின் போது வில்லனிடம் சிக்கிக்கொள்ளும் விஷால், தப்பிப்பதற்காக செய்யும் சாமர்த்தியமான விஷயங்களை கைதட்டி ரசிக்கும் ரசிகர்கள், க்ளைமாக்ஸில் வரும் ஆக்ஷன் காட்சிக்கு தியேட்டரே அதிரும் வகையில் கை தட்டுகிறார்கள்.
மொத்தத்தில், ஒரு பர்ப்பெக்ட் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்று பட்டியல் ஒன்று தேர்வு செய்யப்பட்டால், அதில் ‘துப்பறிவாளன்’ படத்திற்கு முக்கிய இடம் கிடைக்கும்.
ஜெ.சுகுமார்