Casting : Vijay Antony, Aathmika, Super Subbarayan, Ramachandra Raju, Divyaprabha
Directed By : Ananda Krishnan
Music By : Nivas K Prasanna
Produced By : T.D.Rajha and D.R.Sanjay Kumar
கலெக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழும் விஜய் ஆண்டனி, எதிர்பாராத சில சம்பவங்களால் தனது லட்சியத்தில் தோல்வியடைகிறார். தனது லட்சியத்தில் தோல்வியடைந்தாலும், கோடியில் ஒருவராக மிகப்பெரிய பதவியை எட்டி பிடிக்கிறார். அது என்ன பதவி, அந்த இடத்திற்கு விஜய் ஆண்டனி எப்படி செல்கிறார், என்பதை மசலாத்தனமாகவும், மாசாகவும் சொல்லியிருப்பது தான் படத்தின் கதை.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு சாக்லெட் பாய் போல் இருந்தாலும், பார்வையிலேயே கோபத்தை வெளிக்காட்டும் தன்மை கொண்ட விஜய் ஆண்டனிக்கு ஏற்ற கதாப்பாத்திரம். வசனம் பேசுவதில் மட்டும் அல்ல, அதிரடியான ஆக்ஷன் காட்சிகளிலும் பொறுமையை கையாண்டு, நம் மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆத்மிகாவை விட, விஜய் ஆண்டனிக்கு அம்மாவாக நடித்திருக்கும் திவ்யபிரபாவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரம். அவரும் பொறுப்பாக நடித்து சிறப்பு பெறுகிறார்.
முதன்மை வில்லனாக நடித்திருக்கும் ராமச்சந்திர ராஜு, சுள்ளானாக நடித்திருக்கும் ஜூனியர் வில்லன் சூரஜ் பாப்ஸ், அவ்வபோது வந்து போகும் வில்லன் பிரபாகர், கவுன்சிலர் வேடத்தில் நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயண் என அனைத்து வில்லன்களும் தங்களது வேலை கச்சிதமாக செய்து மிரள வைக்கிறார்கள். வில்லன் கோஷ்ட்டில் புதிதாக களம் இறங்கியிருக்கும் பூ ராமும், தனது பங்கிற்கு வில்லத்தனத்தை கச்சிதமாக காட்டி பாராட்டு பெறுகிறார். சில காட்சிகள் வந்தாலும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் அப்ளாஷ் பெறுகிறார் சச்சின் கேதேகேர்.
என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவும், நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம். அதிலும், அழுக்கு படிந்த குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு அபாரம். அதே பகுதியை தூய்மைப்பகுதியாக மாற்றியதில் இருந்த கிராபிக்ஸ் பணியும் நேர்த்தி.
சமூகத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்கும் ஹீரோயிஷமான கதையில், அரசியலை கலந்துக்கட்டி சொல்லியிருக்கும் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன், கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாரோ, அதே அளவுக்கு நாயகன் விஜய் ஆண்டனிக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதோடு, இயல்பாகவும் காட்சிகளை வடிவமைத்திருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.
ஏற்கனவே பலரால் சொல்லப்பட்ட புரட்சிக்கரமான கதையை, மக்களின் புத்தியில் ஏறும்படி அழுத்தம் திறுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சபாஷ் சொல்லி, ‘கோடியில் ஒருவனை’ தாராளமாக கொண்டாடலாம்.
ரேட்டிங் 3.5/5