Casting : Navayuga, Thamizharasi, Rajkumar Basky, Manmathan
Directed By : Ananda Ramanan
Music By : Chinthaka Jayakodi
Produced By : IBC Tamil
தமிழ் ஈழத்தில் நடந்து வந்த ஆயுதப்போர் முடிவடைந்தாலும், தமிழ் மக்கள் இன்னமும் பெரும் துயரங்களையும், துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், என்பதை உலக நாடுகளுக்கு உரக்க சொல்லும் முயற்சியாக உருவாகியிருக்கும் படம் தான் ‘ஆறாம் நிலம்’.
2009 ஆம் ஆண்டு தமிழ் ஈழப்போர் முடிவுக்கு வந்த போது, பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தனர். அப்படி சரணடைந்தவர்கள் என்ன ஆனார்கள்? என்பது இதுவரை புரியாத புதிராக இருக்கிறது. அவர்களின் உண்மை நிலையை சிங்கள அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. அதே சமயம், சரணடைந்தவர்களை காணாமல் போனவர்கள் என்றும் அறிவித்துள்ளது.
இப்படி சரணடைந்து காணாமல் போனவர்களை இழந்து அவர்களது குடும்பங்கள் தவிப்பதையும், அவர்களின் அன்றாட வாழ்க்கையின் துயரங்களையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி தான் இப்படத்தின் கதை.
சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை தேடும் மனைவி, அப்பா எப்போது வருவார்? என்ற கேள்வியுடனும், ஏக்கத்துடனும் காத்துக்கொண்டிருக்கும் மகள். இந்த இரண்டு கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழ் ஈழ மக்களின் இதய வலிகலை நமக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் அனந்த ரமணன்.
போரில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் துயரங்கள் ஒரு பக்கம், மறுபக்கம் ஒட்டு மொத்த தமிழ் ஈழ மக்களும் தங்களது அன்றாட வாழ்க்கையை துயரங்களோடு கடந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர், போருக்குப் பிறகும் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகளின் கண்காணிப்பில் மக்கள் இன்னமும் அடிமையாகத் தான் இருக்கிரார்கள் என்பதை நேர்த்தியாக விவரித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் நவயுகா மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் தமிழரசி, இருவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பது போல் இல்லாமல் நம் கண் முன் வாழ்கிறார்கள். படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாப்பாத்திரங்களையும் நடிகர்களாக பார்க்க முடியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
தமிழகர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்துக் கொடுப்பதாகவும், வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் கூறிக்கொள்ளும் சிங்கள அரசு, அவர்களுக்கு வழங்கியிருக்கும் வேலை கண்ணிவெடிகளை அகற்றும் வேலை. அந்த வேலைக்கு செல்பவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம், என்பதை படம் பார்ப்பவர்களுக்கு உணர்த்தியிருக்கும் இயக்குநர், கண்ணிவெடி அகற்றும் காட்சிகள் வரும்போதெல்லாம் படம் பார்ப்பவர்களையும் பதற்றமடைய செய்துவிடுகிறார்.
சிந்தக்கா ஜெயக்கொடியின் பின்னணி இசை அம்மா மற்றும் மகளின் வலிகளை நம்முள் கடத்துகிறது. சிவ சாந்தகுமாரின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், இயக்குநரின் கருவுக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் உள்ளது.
திரைப்படமாக பார்ப்பவர்களுக்கு, மெதுவாக நகரும் படமாக தோன்றினாலும், யுத்தம் மற்றும் இரத்தத்தை காட்டாமலும், தமிழ் ஈழ மக்களின் வலிகளை உணர வைக்க முடியும் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் அனந்த ரமணன், பல இடங்களில் காட்சி மொழிகள் மூலமாக அம்மக்களின் துயரங்களை வெளிக்காட்டியிருக்கிறார்.
மக்கள் விரும்பினால் தங்களுடைய தமிழ் பெயர்களை மாற்றிக்கொள்ளலாம், என்ற வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் சிங்கள அரசு, இப்படிப்பட்ட வசதிகள் மூலம் தமிழ் மக்களின் அடையாளங்களை அடியோடு அழிப்பதற்கான வேலைகளை சத்தமில்லாமல் செய்துக்கொண்டிருப்பதையும் உலகிற்கு புரிய வைத்திருக்கும் இயக்குநர் அனந்த ரமணனையும், இப்படத்தை தயாரித்து வெளியிடும் ஐபிசி தமிழ் சேனலையும் கொண்டாடலாம்.
‘ஆறாம் நிலம்’ படம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி ஐபிசி தமிழ் (IBC Tamil) யூடியுப் சேனலில் ஒளிபரப்பாகிறது.