Casting : Karthikeyan Velu, Sanjana Purli
Directed By : Eswar Kotravai
Music By : Sathish Raghunathan
Produced By : Annakkili Velu
ஒருவர் நன்றாக இருந்துவிட்டால் அவர் மீது பொறாமைப்பட்டு, பில்லி சூனியம் மூலம் அவரது வாழ்க்கையை நாசமாக்குவதையே வேலையாக செய்துக் கொண்டிருக்கும் தனது கிராம மக்களை திருத்தி நல்வழிப்படுத்த நினைக்கும் நாயகன், அவர்கள் வழியிலேயே சென்று அவர்களை திருத்த முடிவு செய்கிறார். அதற்காக பில்லி சூனியம் வைப்பதையே தொழிலாக செய்யும் கிராமம் ஒன்றுக்கு செல்கிறார். அங்கு பில்லி சூனியம் வைக்கும் பெண்ணின் அழகில் மயங்கி அவர் மீது காதல் கொள்கிறார். அந்த பெண் மூலம் தனது கிராம மக்களை திருத்துவதற்காக அப்பெண்ணை தனது கிராமத்துக்கு அழைத்துச் செல்ல, இவனுக்கு இவ்வளவு அழகனா காதலியா!, என்ற பொறாமையில் நாயகனின் காதலுக்கு கிராம மக்கள் பல இடையூறுகளை செய்கிறார்கள். அவற்றை நாயகன் சமாளித்து தனது காதலியை கரம் பிடித்தாரா இல்லையா, என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லியிருப்பது தான் ‘சூ மந்திரகாளி’.
படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் புதியவர்களாக இருந்தாலும், ஒரு முழுமையான பேண்டஸி நகைச்சுவை படத்தை கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
நாயகன் கார்த்திகேயன் வேலு புதுமுகம் என்பது தெரியாத வகையில் நடித்திருக்கிறார். அதிலும் காமெடி காட்சிகளில் இயல்பாக நடித்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா புர்லி, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருப்பதோடு, காமெடி காட்சிகளிலும் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் பலர் புதுமுகங்களாக இருந்தாலும், கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். அதேபோல், சில இடங்களில் நடிக்க தெறியாமல் திணறவும் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் முகமது பர்ஹான், இசையமைப்பாளர் சதிஷ் ரகுநாதன், படத்தொகுப்பாளர் கோகுல் மற்றும் கலை இயக்குநர் ஜே.கே.ஆண்டனி ஆகியோரது உழைப்பு படத்தை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறது. சிறு பட்ஜெட் படம் என்றாலும், அதை தெறியாதபடி பணியாற்றியிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை தனியாக பாராட்டலாம்.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, ரசிகர்கள் சிரிக்க மட்டுமே செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஈஸ்வர் கொற்றவை, லாஜிக் பார்க்காமல் பேண்டஸியை வைத்து காமெடி மேஜிக் செய்திருக்கிறார்.
எந்த விஷயமாக இருந்தாலும் அதை நகைச்சுவையோடு சொல்லும் இயக்குநர் கூடவே பேண்டஸியையும் சேர்த்து காட்சிகளை கையாண்டிருப்பது ரசிக்க வைக்கிறது.
கதை மற்றும் அதை திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்திய விதமும் நேர்த்தியாக இருந்தாலும், அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் கதாப்பாத்திரங்களான நடிகர்கள் ஏரியா ரொம்பவே வரட்சியாக இருக்கிறது. அந்த ஏரியாவில் இயக்குநர் சற்று கவனம் செலுத்தியிருந்தால் ‘சூ மந்திரகாளி’ திரையரங்குகளில் மிக்கப்பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கும்.
ரேட்டிங் 3/5