Latest News :

’ருத்ர தாண்டவம்’ விமர்சனம்

a2262eef4af555fc770940e4c1e8bbff.jpg

Casting : Richard, Darsha Gupta, Thambi Ramaiah, Gowtham Menon, Radharavi

Directed By : Mohan G

Music By : Jubin

Produced By : G.M.Film Corporation, 7 G Films

 

நேர்மையான போலீஸ் அதிகாரியான ரிச்சர்ட், போதைப்பொருள் கடத்தல் மாபியாவை கூண்டோடு பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். இதற்கிடையே, தனது கடமையை செய்யும் போது, வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி காயமடைவதற்கு ரிச்சர்ட் காரனமாகிறார். சில நாட்களுக்குப் பிறகு அந்த சிறுவன் திடீரென்று உயிரிழந்து விடுகிறார். இதனால், உயிரிழந்த வாலிபரின் தரப்பு ரிச்சர்ட்டை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட, ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் சாதி பிரச்சனையாக உருவெடுக்கிறது.

 

இதனால், போலீஸ் அதிகாரி ரிச்சர்ட், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார். அதே சமயம், வாலிபரின் மரணத்தில் மர்மம் இருப்பதை உணரும் ரிச்சர்ட், தன்னை கொலை வழக்கில் சிக்க வைத்ததோடு, தன்னை சாதி வெறியனாக சித்தரித்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்க, அதன் பிறகு நடக்கும் சபவங்கள் தான் ‘ருத்ர தாண்டவம்’.

 

குற்றவாளிகளிடம் அதிரடியையும், சாமானிய மக்களிடம் பனிவையும் காட்டும் ரிச்சர்ட், ஒரு நல்ல காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும், என்பதை திரையில் காட்டியிருப்பதோடு, நடிப்பில் கப்பீரத்தை காட்டியுள்ளார்.

 

ரிச்சர்ட்டின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷா குப்தா, கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். அதே சமயம், சில இடங்களில் தனது நடிப்பு மூலம் சீரியல் நடிகைகளை நினைவுப்படுத்துகிறார்.

 

வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் கெளதம் மேனனனின், கதாப்பாத்திரமும் அதை அவர் கையாண்ட விதமும் படத்திற்கு மிகப்பெரிய பலம். 

 

ராதாரவி, ராம்ஸ், தம்பி ராமையா, தீபா, காக்கா முட்டை விக்கி, கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் பொருத்தமான தேர்வு.

 

பரூக் ஜே.பாட்ஷாவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஜுபினின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. 

 

தேவராஜின் படத்தொக்குப்பும், பி.ஏ.ஆனந்தின் கலை இயக்கமும் கச்சிதம். அதிலும், கடற்கரை காவல் நிலையம் கவனம் ஈர்க்கிறது.

 

தொழில்நுட்பம் மற்றும் நடிகர்கள் ரீதியாக இயக்குநர் மோகன்.ஜி, தனது முந்தைய படத்தை விட ஒரு தரமான படமாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், தனது முந்தைய படத்தில் சொல்லிய ஒன்றை தான் இப்படத்தின் கருவாக கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்.

 

இப்படம் வெளியாவதற்கு முன்பாக, இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் படம், என்ற பிம்பத்தை இயக்குநர் மோகன்.ஜி ஏற்படுத்தினார். ஆனால், படத்தில் அப்படிப்பட்ட விஷயங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது, அவரை நம்பி அரசியல் செய்ய காத்திருந்த காவிகளுக்கு நிச்சயம் பெருத்த ஏமாற்றமாகவே இருக்கும்.

 

வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக சொல்லியிருக்கும் இயக்குநர் மோகன், பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு அந்த சட்டம் எப்படி அரணாக இருக்கிறது, என்பதையும் காட்டியிருக்கலாம்.

 

சட்டம் ஒரு தரப்பினருக்கு சாதகமாக இருப்பதாக, தனது திரெளதி படத்தில் அடிக்கடி சொல்லிய இயக்குநர் மோகன், இந்த படத்திலும் ஒரு காட்சியில் அந்த கருத்தை பதிவு செய்திருப்பதோடு, இந்த கருத்தை மையமாக வைத்து தான், முழு திரைக்கதையையும் வடிவமைத்திருக்கிறார்.

 

ஒரு இயக்குநராக மோகன், எந்த ஒரு புதிய விஷயத்தையும் கையில் எடுக்கவில்லை. அதே சமயம், ஒரு கருத்தை திரைவடிவம் மூலம் நேர்த்தியாக சொல்ல முயற்சிக்காமல், நேரடியாக குறிப்பிட்ட ஒரு தரப்பின் மீது இருக்கும் கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதில் தனது முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘ருத்ர தாண்டவம்’ மூலம் தன்னை ஆளுமை மிக்க ஒரு இயக்குநராக அடையாளப்படுத்திக் கொள்ள தவரினாலும், நல்ல வியாபாரியாக மோகன்.ஜி அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery