Latest News :

'ஏ கொய்ட் பிளேஸ் 2’ (A Quiet Place 2) விமர்சனம்

9dab4bb84590a87d7191c5ab27490a9d.jpg

Casting : Emily Blunt, Cillian Murphy, Millicent Simmonds, Noah Jupe

Directed By : John Krasinski

Music By : Marco Beltrami

Produced By : Michael Bay, Andrew Form, Brad Fuller, John Krasinski

 

ஏலியன்களை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் பல ஹாலிவுட் படங்களில் இதுவும் ஒன்று என்றில்லாமல், தனி சிறப்போடு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’ஏ கொய்ட் பிளேஸ்’படத்தின் தொடர்ச்சி தான் 'ஏ கொய்ட் பிளேஸ் 2’.

 

’ஏ கொய்ட் பிளேஸ் 2’ படத்தை பார்ப்பதற்கு முன்பாக முதல் பாகத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, முதல் பாகத்தை பார்த்தால் தான், இரண்டாம் பாகத்தில் என்ன நடக்கிறது, என்று புரியும். மற்றொரு காரணம், இரண்டாம் பாகத்தை விட முதல் பாகம் ரொம்ப நல்லா இருக்கும்.

 

'ஏ கொய்ட் பிளேஸ் 2’ படத்தின் கதை என்னவென்றால், பூமியில் இறங்கிய ஏலியன்கள், அனைத்து மக்களையும் கொன்று விடுகிறது. ஊரே மயானக்காடாக மாறிவிட, ஒரு அம்மா, அவருடைய காது கேட்காத, வாய் பேசாத மகள், மகன் மற்றும் கைக்குழந்தை ஆகியோர் மட்டும் ஏலியன்களிடம் இருந்து தப்பிப்பதோடு, அந்த ஏலியன்களை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

 

ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள் அனைத்திலும், விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பிரம்மாண்டம் ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த படத்தில் கதாப்பாத்திரங்களின் உணர்வு மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இப்படத்தின் தனி சிறப்பு என்றே சொல்லலாம். அதற்காக, படத்தில் விஷுவல் எபெக்ட்ஸுக்கு முக்கியத்துவம் இல்லையா, என்று நினைக்க வேண்டாம். அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், அதை அளவாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

 

படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர்கள் தான். அம்மாவாக நடித்திருக்கும் எமிலி புளுண்ட், அவருடைய மகள் மற்றும் மகன் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் சிறுவர்கள், தங்களது ஒவ்வொரு அசைவிலும் அசத்துகிறார்கள். அதிகமான வசனங்கள் இல்லை என்றாலும், கண்களின் மூலமாகவே உணர்வுகளை வெளிப்படுத்தி, நம்மையும் படத்துடன் பயணிக்க வைக்கிறார்கள்.

 

ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது ஹாலிவுட் சினிமாவின் வழக்கம் என்றாலும், அப்படி எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. அந்த கருவை வைத்துக் கொண்டு வேறு ஒரு திரைக்கதையில் பயணிப்பதோடு, முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுப்பார்கள். ஆனால், இப்படத்தின் இயக்குநர் ஜான் கிரசின்ஸ்கி, முதல் பாகத்திற்கு அமைத்த திரைக்கதை வழியில் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் நகர்த்தி செல்கிறார்.

 

கண் பார்வை இல்லை என்றாலும், சிறிய சத்தம் கேட்டாலும், அங்கு மின்னல் வேகத்தில் வரும் சக்திக் கொண்ட ஏலியன்களிடம் தப்பிக்க, அன்றாட வாழ்வில், சத்தத்தை தவிர்த்து விட்டு வாழும் குடும்பம், நிறைமாத கர்ப்பிணி, அவருக்கு பிரசவமாவது, கைக்குழந்தையை பாதுகாப்பது என முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யமான காட்சிகள், இரண்டாம் பாகத்தில் சற்று குறைவாக இருப்பது படத்தின் மிகப்பெரிய குறையாக இருக்கிறது.

 

குறிப்பாக, ஏலியனிடம் இருந்து தப்பிக்க, முதல் பாகத்தில் முதன்மை கதாப்பாத்திரங்கள் கையாண்ட யுக்தியை, சிறிய மாற்றதோடு ஒரு தொழிற்சாலையை வைத்து காட்சிப்படுத்தியிருப்பது, முதல் பாகத்தின் நகல் போல் இருப்பதோடு, முதல் பாகத்தை பார்க்காதவர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் இருக்கிறது.

 

ஆனால், நடிகர்களின் நடிப்பும், இயக்குநரின் கதை சொல்லலும், அத்தனை குழப்பங்களையும், குறைகளையும் மறந்து நம்மை சீட் நுணியில் உட்கார்ந்து முழு படத்தையும் பார்க்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ’ஏ கொய்ட் பிளேஸ் 2’ வெற்றியின் தொடர்ச்சி...

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery