Latest News :

’வினோதய சித்தம்’ விமர்சனம்

32da0936ef0c22ec75d486b7cb22c9d3.jpg

Casting : Samuthirakkani, Thambi Ramaiah, Sanjana Shetty, Deepak, Sivaranjani, Munishkanth

Directed By : Samuthirakkani

Music By : C.Sathya

Produced By : Abirami Ramanathan

 

சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் படம் ‘வினோதய சித்தம்’. தம்பிராமையா மற்றும் சமுத்திரக்கனி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அபிராமி மீடியா நிறுவனம் சார்பில் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள இப்படம் ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

 

இந்த படத்தின் கதை, ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையின் கதையாகும். இந்த கதையை சொன்னால் புரியாது, என்பதை விட, சொல்லி புரிந்துக் கொள்வதை விட, பார்த்து தெரிந்துக் கொண்டால், அது வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும்.

 

இன்றைய வேகமான உலகில், அதிவேகமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும், என்ன நடக்கமோ, எப்படி நடக்கமோ என்ற கவலையும், குழப்பமும் கொண்டிருப்பவர்களுக்கும், இதை இப்படி செய்யலாம், அதை அப்படி செய்யலாம், என்று திட்டம் போட்டுக்கொண்டிருப்பவர்களும், தெளிவை கொடுத்து, வாழ்க்கை என்றால் இது தான், என்பதை புரிய வைப்பது தான் ‘வினோதய சித்தம்’ படத்தின் கதை.

 

அதிகமாக பேசும் சமுத்திரக்கனியும், அளவுக்கு அதிகமாக நடிக்கும் தம்பிராமையாவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் என்றாலே, அங்கு அதிகமாக எது இருக்கும் என்பதை ரசிகர்கள் யூகித்து விடுவார்கள். அவர்கள் யூகிப்பது சரியாக இருந்தாலும், அவை அனைத்துமே ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக சமுத்திரக்கனி பேசும் ஒவ்வொரு வசனமும், வாழ்க்கைக்கான ஒரு புத்தகத்தை படித்தது போன்ற உணர்வை கொடுக்கிறது.

 

இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையான தம்பிராமையா, குடும்பம் மற்றும் தான் பணியாற்றும் நிறுவனம் மீது காட்டும் பற்று, எதிர்ப்பார்ப்பு ஆகிய அனைத்தும் எதிர்மறையாக நடக்கும் போது தடுமாறும் காட்சிகளாகட்டும், அதே சமயத்தில் தான் எதிர்ப்பார்க்காதவைகள் நடக்கும் போது தற்பெருமை அடிக்கும் காட்சிகளாகட்டும், அனைத்திலும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் அவரது வழக்கமான ஓவர் டோஸ் நடிப்பு தென்பட்டாலும், காட்சிகளில் சொல்லப்படும் ஆழமான கருத்துகள் அதை அழித்துவிடுகிறது.

 

முனிஷ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, தீபக், சிவரஞ்சனி, ஜெயப்பிரகாஷ் என படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

 

எளிமையான கதைக்கு, இயல்பாக ஒளிப்பதிவு செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்

இசையமைப்பாளர் சி.சத்யாவின் பின்னணி இசை கதாப்பாத்திரங்களுடன் பயணிப்பதோடு, அவர்களின் உணர்வுகளை மக்களிடத்தில் சரியான முறையில் கொண்டு சேர்க்கிறது.

 

ஸ்ரீவத்சனின் கதைக்கு சமுத்திரக்கனி அமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள், நமது கவனத்தை திசை திருப்பாமல் படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறது.

 

விறுவிறுப்பு மற்றும் பரபரப்பு போன்ற சினிமாவுக்கான கூடுதல் விஷயங்கள் படத்தில் இல்லை என்றாலும், சமுத்திரக்கனியின் காட்சி அமைப்புகளும், கதை சொல்லலும், படத்தில் நம்மை முழுமையாக மூழ்கடித்து விடுகிறது. 

 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது, என்று சொல்வார்கள். அதுபோல தான், நாம் ஆயிரம் மொக்கையான படங்களை பார்க்கலாம், ஆனால் ஒரு நல்ல படத்தை பார்க்காமல் இருக்க கூடாது, என்று சொல்ல வைக்கிறது இந்த படம்.

 

இப்படி ஒரு நல்ல படத்திற்கு, அனைவருக்கும் புரியும்படியான எளிமையான தலைப்பு வைக்காமல் போனது, படத்தின் குறை என்று சொல்லலாம்.

 

மொத்தத்தில், ‘வினோதய சித்தம்’ நமக்கான போதி மரம்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery