Latest News :

’என்னங்க சார் உங்க சட்டம்’ விமர்சனம்

e4a249bc1870df107bb02d88bab54d94.jpg

Casting : RS Karthik, Ira, Rohini, Junior Balaiyah, Soundarya Bala Nandhakumar

Directed By : Prabhu Jayaram

Music By : Guna Balasubramaniyam

Produced By : Passion Studios

 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வழங்கப்படும், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பது தான் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் கரு. ஆனால், அதை நேரடியாக சொல்லாமல், கமர்ஷியல் கரம்மசாலாவோடு சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.

 

இயக்குநராக நினைக்கும் ஹீரோ, தயாரிப்பாளரிடம் ஒரு கதை சொல்கிறார். ஆனால், அந்த கதை தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போக, தன்னிடம் இருக்கும் மற்றொரு பரபரப்பான  கதையை சொல்கிறார். ஹீரோ சொன்ன அந்த பரபரப்பான கதை என்ன?, அந்த கதை தயாரிப்பாளருக்கு பிடித்ததா இல்லையா? என்பது தான் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் கதை.

 

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.கார்த்திக் கொடுத்த வேலையை குறை வைக்காமல் செய்திருக்கிறார். படத்தின் முதல் பாகம் முழுவதையும் தன் தோள் மீது சுமந்திருக்கும் ஆர்.எஸ்.கார்த்திக்கின் காதல் கதைகளை பல பகுதிகளாக பிரித்து சொல்வது சற்று சலிப்படைய செய்தாலும், ஒவ்வொரு கதையிலும் தனது நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.

 

ஐரா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா என நான்கு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களை ஓரம் கட்டிவிடுகிறார் ரோகினி. முதல் பாதியில் வெகுளித்தனமான அம்மா கதாப்பாத்திரத்திலும், இரண்டாம் பாதியில் நேர்மையான அரசு அதிகாரியாகவும் நடித்திருக்கும் ரோகினியின் கதாப்பாத்திரமும், நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

 

பகவதி பெருமாள், ஜூனியர் பாலையா, பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம், கயல் வின்செண்ட் என அனைவரும் தங்களது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

 

திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்தப்படாத லொக்கேஷன்களை தேடி பிடித்து காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணா, கதைக்கு ஏற்ப பயணித்துள்ளார்.

 

இசையமைப்பாளர் குணா பாலசுப்ரமணியத்தின் மெட்டும், பாடலாசிரியர்கள் கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித் ஆகியோரது வரிகளும் கேட்கும் ரகங்களாக இருப்பதோடு, புரியும் ரகங்களாகவும் இருக்கிறது. அதிலும், ஜெகன் கவிராஜின் “சீரக பிரியாணி...” பாடல், திகட்டாத பிரியாணியை ருசிப்பது போல், திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.

 

படத்தின் மிகப்பெரிய தூணாக படத்தொகுப்பாளர் பிரகாஷ் கருணாநிதி செயல்பட்டுள்ளார். தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக கதை சொல்லியிருக்கும் இயக்குநரின் முயற்சியை, தன்னால் முடிந்த அளவுக்கு குழப்பம் இல்லாமல் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கும் படத்தொகுப்பாளர் பிரகாஷுக்கு சபாஷ் சொல்லலாம்.

 

சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை விட, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதே சரியானது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பிரபு ஜெயராம், அதை ஒரு திரைப்படமாக சொல்லும் போது, பல தடுமாற்றங்களோடும், குழப்பத்தோடும் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய குறையாக இருக்கிறது.

 

சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை, சாதியின் பெயரால் கோருவதுதான் இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம். ஆனால், இயக்குநர் பிரபு ஜெயராமன் இது குறித்து எந்த இடத்திலும் உப்புக்கு கூட பேசாமல், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், என்பது சரி என்றால், பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் உயர் சாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்குவது சரியே, என்று வாதிடுகிறார்.

 

இடஒதுக்கீடு சட்டத்தின் பின்னணியை முழுமையாக தெரிந்துக்கொள்ளாமல், சமீபத்திய பா.ஜ.க அரசியலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தவறான அரசியலை படமாக்கியிருக்கும் இயக்குநர் பிரபு ஜெயராமன், தனது தவறான அரசியல் கருத்தை ஒரு சரியான திரைப்படமாக கொடுப்பதில் கூட கோட்டை விட்டுள்ளார்.

 

ரேட்டிங் 2.5/5