Casting : அனு ஹாசன், நாசர், டேவிட் யுவராஜன்
Directed By : எஸ்.டி.நந்தா
Music By : எல்.வி.முத்துக்குமரசாமி
Produced By : லக்ஷனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பவர் டூல்ஸ் மீடியா
லக்ஷனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பவர் டூல்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் என்.டி.நந்தா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வல்லதேசம்’ முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கப்பட்ட படமாகும்.
கம்ப்யூட்டர் இன்ஜினியரான அனு ஹாசனின் கணவருக்கு லண்டனில் வேலை கிடைக்க, குடும்பத்தோடு லண்டன் வருகிறார்கள். லண்டனுக்கு வரும் அனு ஹாசனின் குடும்பத்தை சர்வதேச ஆயுதம் கடத்தல் டான் ஆன, டேவிட் யுவராஜனின் ஆட்கள் நோட்டமிடுகிறார்கள்.
திடீரென்று அனு ஹாசனின் கணவரை கடத்தும் டேவிட் ஆட்கள், அவர் இந்திய ராணுவத்தின் உளவாளி என்பதை கண்டுபிடிப்பதோடு, அவரை கொலை செய்துவிடுகிறார்கள். இந்த சம்பவத்தின் போது துப்பாக்கி காயத்துடன் அனு ஹாசன் உயிர் பிழைக்க, அவரது மகள் கடத்தப்பட்டு விடுகிறாள்.
சிகிச்சைக்குப் பிறகு தனது மகளை தேடும் முயற்சியில் இறங்கும் அனு ஹாசன், லண்டனில் உள்ள சில சமூக விரோதிகளையும் வேட்டையாட, அப்போது தான் தெரிகிறது, இந்திய ராணுவத்தின் உளவாளி அனு ஹாசன் என்று. இதையடுத்து டேவிட்டின் ஆட்கள் அனு ஹாசனை தேட, மறுபுறம் லண்டன் போலீசும் அனு ஹாசனை தேட, அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகும் அனு ஹாசன், லண்டனுக்கு உளவாளியாக வந்தது ஏன்? அவரது மகளை கண்டுபிடித்தாரா இல்லையா? என்பது தான் ‘வல்லதேசம்’ படத்தின் மீதிக்கதை.
சென்னை மற்றும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் லண்டனில் படமாக்கப்பட்டதோடு, இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத பல முகங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
கதையின் நாயகியாக நடித்துள்ள அனு ஹாசனுக்கு நடிக்க பெரிய அளவில் வாய்ப்பு ஏதும் இல்லை என்றாலும், ஒரு ஆக்ஷன் காட்சியில் மட்டும் ரசிகர்களின் அப்ளாஸை அள்ளிவிடுகிறார். அனு ஹாசனுக்கு பிறகு படத்தின் முக்கிய கதாபாத்திரமான நாசர், எப்போதும் போல தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
வில்லனாக நடித்துள்ள டேவிட் யுவராஜன் உருவத்தில் மிரட்டினாலும் நடிப்பில் பெரிய அளவில் மிரட்டவில்லை. அவர் மட்டும் அல்ல படத்தில் நடித்த பல நடிகர்கள் புதியவர்கள். இருந்தாலும் தங்களது நடிப்பால் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும், பெரிய அளவில் சொதப்பவும் இல்லை.
இப்படத்தை இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவும் செய்திருக்கும் என்.டி.நந்தா, சர்வதேச அளவிலான உளவாளி படத்தை ரொம்ப எளிமையாக கையாண்டுள்ளார். கதைக்களம் லண்டன் என்பதால், அவர் கேமராவை திருப்பும் இடமெல்லாம் அழகோ அழகு. அடுக்குமாடி கட்டிடங்களாகட்டும், பறந்து விரிந்த புல்வெளியாகட்டும் லண்டன் அழகை நமக்கு விருந்தாக படைத்திருக்கிறார். எல்.வி.முத்துகுமாரசாமியின் பின்னணி இசை படத்திற்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது.
லண்டன் காட்சிகளின் போது கார் சேசிங், ஹெலிகாப்டர் சேசிங் என்று காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கும் இயக்குநர் எஸ்.டி.நந்தா, சென்னையில் உள்ள இந்திய ராணுவ தளத்தை காட்டும் போது மட்டும், காட்சிகளை டிவி சீரியல் போல படமாக்கியிருக்கிரார்.
தந்து குடும்பத்தை தீவிரவாதிகள் கடத்திச் செல்லும் போது, தனது கணவருக்காக அவர்களிடம் கதறும் அனு ஹாசன், பிறகு அதே தீவிரவாதிகளை அதிரடியாக தும்சம் செய்யும் காட்சியும், அதன் பிறகு அவர் தான் உண்மையான உளவாளி என்பது தெரிய வந்ததும், அவர் காட்டும் அதிரடியும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தினாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையில் எந்தவித டிவிஸ்ட்டும் இல்லாததால் படம் ஆமைப்போல நகர்கிறது. இருந்தாலும், தான் சொல்லவந்ததை இயக்குநர் எஸ்.டி.நந்தா, சில சுவாரஸ்யங்களோடு, எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
புதியவர்களின் முயற்சியில் உருவாகியுள்ள இந்த ‘வல்லதேசம்’ தமிழ் சினிமாவை சர்வதேச அளவில் அழைத்துச் சென்றுள்ளது.
ஜெ.சுகுமார்