Casting : Santhanam, Preeti Varma, MS Baskar, Shyaji Shindey, Vamsi, Rama
Directed By : Srinivasa Rao
Music By : Sam CS
Produced By : RK Entertainment - C.Ramesh Kumar
திக்குவாய் பிரச்சனையுடன் இருக்கும் நடிகர் சந்தானத்திற்கு தனது எதிர் வீட்டு பெண்ணான நாயகி ப்ரீத்தி வர்மா மீது காதல். காதலி கிடைக்க வேண்டுமானால் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்பதால், வேலை தேடி அலையும் சந்தானத்தின் வாழ்வில் விதி விளையாட, அந்த விளையாட்டால் ஏற்படும் பிரச்சனைகளும், அதனால் சந்தானத்தின் வாழ்க்கை என்னவாகிறது, என்பதும் தான் ‘சபாபதி’ படத்தின் கதை.
திக்குவாய் குறைபாடுள்ள வேடத்தில் சந்தானம் மிக சிறப்பாக நடித்துள்ளார். தனது ரெகுலரான கலாய்க்கும் வசனங்கள் இல்லாமல், உடல் அசைவுகள் மூலமாக நம்மை குளுங்கி குளுங்கி சிரிக்க வைப்பவர், இதுவரை பார்த்திராத சந்தானத்தை தனது நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார். வெகுளித்தனமாக அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் ரசிக்க வைப்பதோடு, விழுந்து விழுந்து சிரிக்கவும் வைக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி வர்மா பாடல் காட்சிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு பெரிதாக எந்த வேலையும் கொடுக்காகதால், அவர் முகமே நினைவுக்கு வரவில்லை.
சந்தானத்தின் அப்பாவாக நடித்திருக்கு எம்.எஸ்.பாஸ்கார், வழக்கம் போல தனது வேடத்தை மிக நேர்த்தியாக செய்துள்ளார். கணபதி வாத்தியார் என்ற வேடத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார்.
வம்சி, ஷாயஜி சிண்டே, புகழ், ரமா என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தங்களது வேலையை முழுமையாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார். சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் விதி எப்படி விளையாடுகிறது, என்பதை காமெடி ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சீனிவாச ராவ், நடு நடுவே நல்ல கருத்துக்களையும் கூறி முழு படத்தையும் நகச்சுவையாக நகர்த்தி செல்கிறார்.
சந்தானம் படம் என்றால் இப்படி தான் இருக்கும், என்ற பார்மட்டை மாற்றி புதுவிதமான சந்தானத்தை ரசிகர்களுக்கு காண்பித்திருக்கும் இயக்குநர் சீனிவாச ராவ், படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை எந்தவித நெருடலும் இல்லாமல் ரசிக்க வைக்கிறார்.
மொத்தத்தில், ‘சபாபதி’ முழுமையான சந்தோஷம்
ரேட்டிங் 3.5/5