Casting : Mohanlal, Nedumudi Venu, Prabhu, Arjun, Sunil Shetty, Ashok Selvan, Keerthy Suresh
Directed By : Priyadarshan
Music By : Ronnie Raphael
Produced By : Antony Perumbavoor
இந்தியாவின் முதல் கடற்படை தளபதியான மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இப்படத்தில் மரைக்காயரின் கடல் சாகசங்கள் மற்றும் வலிமையான ஆங்கிலேயர்களின் கடற்படையை வீழ்த்தியது ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கடல் கொள்ளையனாக சித்தரிக்கப்படும் மரைக்காயர், ஏன் அப்படி மாறினார், பிறகு எப்படி கடற்படை தளபதியாக உருவெடுத்து ஆங்கிலேயர்களை தோற்கடித்தார், அதன் பிறகு நடந்த சதி போன்ற வரலாற்று உண்மைகளோடு இயக்குநர் பிரியதர்ஷன் தனது கற்பனையை சேர்த்து சொல்லியிருப்பது தான் படத்தின் கதை.
மரைக்காயர் வேடத்தில் நடித்திருக்கும் மோகன்லால், வழக்கம் போல் தனது நடிப்பால் அந்த கதாப்பாத்திரத்தை ரசிகர்களிடம் திறம்பட கொண்டு சேர்த்திருக்கிறார்.
இளம் வயது மோகன்லால் வேடத்தில் நடித்திருக்கும் பிரணவ் மோகன்லால், பிரபு, அர்ஜுன், நெடுமுடி வேணு, சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், கல்யாணி என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ரோனி ரெபெலின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அத்தனையும் பிரமாண்டமாக இருக்கிறது. ஐய்யப்பன் நாயரின் படத்தொகுப்பும் கச்சிதம்.
படத்தின் ஹைலைட்டே கிராபிக்ஸ் காட்சிகள் தான். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான மிக நேர்த்தியாக கிராபிக்ஸ் காட்சிகள் கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக மரைக்காயர் கடல் சூறாவளியில் சிக்கி தப்பிக்கும் காட்சியும், கடலில் நடக்கும் போர்க்காட்சிகளும் பிரமிக்க வைக்கிறது.
படத்தில் பல கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், அனைத்து கதாப்பாத்திரங்களும் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் பிரியதர்ஷன், வரலாற்று கதையோடு சிறு காதல் கதையையும் சொல்லி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
கிராபிக்ஸ் என்பதே தெரியாத வகையில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே சமயம், முதல் பாதியில் இருக்கும் வேகமும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் சற்று குறைந்துவிடுவது படத்தின் சிறு குறை. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் படம் பிரமிக்க வைக்கிறது.
ரேட்டிங் 3.5/5