Latest News :

’மட்டி’ விமர்சனம்

4cb2f9d592beb7ff8c8019583af9f92e.jpg

Casting : Yuvan Krishna, Rithan Krishna, Amit Shivadas Nair, Anusha Suresh

Directed By : Dr.Pragabhal

Music By : Ravi Pasrus

Produced By : PK 7 Creations - Prema Krishnadass

 

மட்டி ரேஸ் எனப்படும் ஆபத்து நிறைந்த மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையோடு வெளியாகியிருக்கும் இப்படத்தின் கதை மிக எளிமையானது என்றாலும், காட்சிகளை படமாக்கிய விதம் மிக வலிமையானதாக இருக்கிறது.

 

வில்லனை ஜெயிப்பதற்காக பிரிந்திருக்கும் அண்ணன், தம்பி ஒன்று சேர்ந்து மட்டி கார் பந்தய போட்டியில் ஈடுபடுகிறார்கள். அப்போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா, என்பதை மிரட்டலான மேக்கிங் மற்றும் அதிர்ச்சியளிக்கும் கார் பந்தய காட்சிகளுடன் விவரிப்பது தான் ‘மட்டி’.

 

படத்தில் நடித்திருக்கும் அனைவரும் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத முகங்களாக இருந்தாலும், நம் மனதில் அழுத்தமாக பதியும் வகையில் அவர்களுடைய திரை இருப்பு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

நிஜமான அண்ணன், தம்பிகளான யுவன் கிருஷ்ணா மற்றும் ரிதன் கிருஷ்ணா படத்திலும் அண்ணன் தம்பியாக நடித்திருக்கிறார்கள்.

 

கம்பீரமான தோற்றம், மிரட்டும் கண்கள் என இருவரும் தங்களது ஒவ்வொரு எக்ஸ்பிரஷன்கள் மூலம் கவனம் ஈர்க்கிறார்கள். முதல் திரைப்படத்திலேயே இப்படி ஒரு சவாலான கதாப்பாத்திரத்தில், கடுமையான உழைப்பை வெளிப்படுத்தியிருப்பவர்கள் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார்கள்.

 

வில்லனாக நடித்திருக்கும் அமித் சிவதாஸ் நாயர், ஆக்ரோஷமான நடிப்பில் மிரட்ட, ஆர்பாட்டம் இல்லாத நடிப்பின் மூலம் மிரட்டுகிறார் நோஹா என்ற வேடத்தில் நடித்த மூத்த நடிகர்.

 

யுவன் கிருஷ்ணாவுடன் வரும் நடிகர்கள் பல இடங்களில் நம்மை சிரிக்க வைப்பதோடு, குணச்சித்திர நடிகர்களாகவும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரதீஷின் கேமரா நிகழ்த்திய சாகசங்கள் வியக்க வைக்கிறது. காடு மற்றும் மலைகளில் மட்டும் இன்றி கரடுமுரடான மண் சாலைகள், சகதி என்று ஏகப்பட்ட ஏரியாவில் தனது கேமரா மூலம் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரதீஷின் உழைப்பு படம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

 

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூஸ் கதைக்கு தேவையான பாடல்களை கேட்கும்படி கொடுத்ததோடு, திரைக்கதையோடு பயணிக்கும் பின்னணி இசையை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.

 

அண்ணன், தம்பி செண்டிமெண்ட், காதல், காமெடி என அனைத்து அம்சங்களையும் அளவாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், மட்டி கார் பந்தயத்தின் சாகசங்களை நிறைவாகவும், ரசிக்கும்படியும் தொகுத்திருக்கிறார்.

 

அனல் பறக்கும் வசனங்கள் மூலம் தெறிக்கவிடும் வசனகர்த்தா ஆர்.பி.பாலா, பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கவும் செய்கிறார்.

 

கதை நடக்கும் களத்தில் நாமும் பயணிக்கும் ஒரு உணர்வை ஏற்படுத்தும் விதமாக படத்தை எழுதி இயக்கியிருக்கும் டாக்டர்.பிரபகலை முதலில் பாராட்டியாக வேண்டும்.

 

முதல் படம், படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்று தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய சவாலோடு பயணித்திருக்கும் இயக்குநர் பிரபகல், அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். 

 

படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை, ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாக கையாண்டிருப்பவர், கார் பந்தயத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைத்தாலும், அதை ஒரு அழகான கதையோடு விவரித்திருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.

 

திரைக்கதை மற்றும் காட்சிகள் வடிவமைப்பு, கதாப்பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு, அவர்களை கையாண்ட விதம், படம் முழுவதும் பின்பற்றப்பட்ட கலர் டோன் என அனைத்திலும் தனி சிறப்போடு, ரசிகர்களை வியக்க வைத்திருக்கும் ‘மட்டி’ சினிமா ரசிகர்கள் மட்டும் அல்ல திரையுலகினரும் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 4.5/5

Recent Gallery