Latest News :

3:33 விமர்சனம்

609e9e3aa0c1f83b50da141d1df01431.jpg

Casting : Sandy, Shruthi Selvam, Goutham Vasudev Menon, Maim Gopi, Rama, Reshma

Directed By : NambikkaiChandru

Music By : Harshavardhan

Produced By : Bamboo Trees Productions - T Jeevitha Kshore

 

3:33 மணிக்கு பிறந்த படத்தின் நாயகன் சாண்டிக்கு அந்த நேரமே மிகப்பெரிய பிரச்சனையாக அமைகிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் கெட்ட கெட்ட கனவுகளால் பாதிக்கப்படும் சாண்டி, சில நேரங்களில் சில அமானுஷ்ய சம்பவங்களால் அச்சுறுத்த படுகிறார். இதனை கெட்ட சக்திகளின் ஆதிக்கம் என்று ஆன்மீகம் கூற, இது ஒரு உளவியல் பிரச்சனை என்று மருத்துவம் கூறுகிறது. இதனால் மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சாண்டி அதில் இருந்து விடுபட்டாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

இதுவரை ஜாலியான ஒருவராக அறியப்பட்ட நடன இயக்குநர் சாண்டி, நடிகராக முதல் படத்திலேயே மிக அழுத்தமான கதாப்பாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். சாண்டியின் இயல்பான நடிப்பு அந்த கதாப்பாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்துள்ளது.

 

சாண்டியின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா மற்றும் அக்காவாக நடித்திருக்கும் ரேஷ்மா ஆகியோர் திடிரென்று பேயாக மாறுவது நம்மை பீதியடைய வைக்கிறது.

 

சாண்டியின் காதலியாக வரும் நாயகி ஸ்ருதி செல்வம், ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்தாலும், அடுத்த அடுத்த காட்சிகளில் அவரும் நம்மை பயமுறுத்துகிறார்.

 

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மைம் கோபி ஆகியோர் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் மட்டும் தலை காட்டுகிறார்கள். மற்றபடி அவர்களுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை.

 

ஹர்ஷவர்தன் பின்னணி இசை திகில் படங்களுக்கு உண்டான நேர்த்தியோடு படம் முழுவதும் பயணித்து நம்மை பல இடங்களில் பதற வைக்கிறது.

 

சதீஷ் மனோகரனின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும், தனது கோணத்தின் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசத்தை காண்பித்திருப்பவர், தனது கேமராவை ஒரு கதாப்பாத்திரமாகவே வலம் வர செய்திருக்கிறார்.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் நம்பிக்கை சந்துரு உளவியல் ரீதியிலான பிரச்சனையை மையக்கருவாக எடுத்துக்கொண்டு அதனுடன் அமானுஷ்யத்தை சேர்த்து திரைக்கதை அமைத்துள்ளார்.

 

சில காட்சிகள் மெதுவாக நகர்வதும், ஒரே காட்சியை வெவ்வேறு விதமாக காட்டுவதும் சற்று சலிப்படைய செய்தாலும், 

ஒரே வீட்டில் நடக்கும் கதையை சொல்லிய விதமும், சில திகில் சம்பவங்களும் படத்தை ரசிக்க வைக்கிறது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery