Latest News :

’உத்ரா’ விமர்சனம்

381d51f364d174cd72466aeefb1853e3.jpg

Casting : Gousalya

Directed By : Naveen Krishna

Music By : Sai.V

Produced By : Rekha Movies - M.Chakravarthi

 

மலை கிராமம் ஒன்றில் திருமணம் நடந்தாலோ அல்லது ஆண், பெண் உடலுறவு வைத்துக் கொண்டாலோ, அடுத்த நிமிடமே அவர்களை அமானுஷ்ய சக்தி ஒன்று கொன்று விடுகிறது. இதனால், அந்த கிராமத்தில் எந்த ஒரு திருமணம் நடக்காமல் இருப்பதோடு, தம்பதியினர் தாம்பத்யத்தில் ஈடுபடாமலும் வாழ்ந்து வருகிறார்கள்.  இதனால், பலர் அந்த கிராமத்தை விட்டு வெளியேறினாலும், கிராமத்தில் இருப்பவர்கள் தங்களது ஆசாபாசங்களை கட்டுப்படுத்திக்கொண்டு சோகமான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை அறியும் கல்லூரி மாணவர்கள் சிலர், அந்த கிராமத்தின் ரகசியத்தை அறிந்துக்கொள்வதோடு, அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து அந்த கிராம மக்களை காப்பாற்றும் நடவடிக்கையிலும் இறங்குகிறார்கள். 

 

அந்த கிராமத்தை ஆட்டிப்படைக்கும் அந்த அமானுஷ்யம் யார்?, எதற்காக இப்படி செய்கிறது?, அமானுஷ்யத்திடம் இருந்து கிராம மக்களை கல்லூரி மாணவர்கள் காப்பாற்றினார்களா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். குறிப்பாக உத்ரா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

 

உத்ராவின் காதலராக நடித்திருக்கும் நடிகர், வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர், சித்தர் ஆகியோரும் தங்களது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார். கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கும் கெளசல்யா கவனம் பெறுகிறார்.

 

சாய்.வி இசையில் பாடல்கள் புரியும்படியும், கேட்கும் ரகமாகவும் இருக்கிறது. பின்னணி இசை திகில் படத்திற்கே உண்டான பாணியில் நம்மை பயமுறுத்தினாலும், சில இடங்களில் தேவையில்லாத சத்தங்களால் நிரப்பப்பட்டும் இருக்கிறது.

 

ஏ.ரமேஷின் ஒளிப்பதிவில் மலை கிராமத்தின் அழகை ரசிக்கவும் முடிகிறது, திகில் காட்சிகள் கொடுக்கும் பயத்தை உணரவும் முடிகிறது.

 

ராஜ்குமார்.சி கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் நவீன் கிருஷ்ணா. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் நேர்த்தியான குடும்ப படமாக கொடுத்திருக்கிறார்.

 

அனுபவம் இல்லாத சில அறிமுக நடிகர்களின் தடுமாற்றமான நடிப்பால் முதல் பாதி படம் சற்று தொய்வாக நகர்ந்தாலும், அமானுஷ்யத்தின் பின்னணியை விவரிக்கும் இரண்டாம் பாதி படத்தை தொழில்நுட்ப ரீதியாகவும், விறுவிறுப்பான திரைக்கதை மூலமும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் நவீன் கிருஷ்ணா.

 

முதல் பாதியில் காட்டப்படும் ஆவியின் கிராபிக்ஸ் காட்சி மிக பழைய பாணியில் இருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. அதை தவிர்த்துவிட்டு பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு மூலமாகவே ரசிகர்களை பயமுறுத்த முயற்சித்திருக்கலாம்.

 

இருப்பினும், இரண்டாம் பாதியில் திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு என இரண்டிலும் நேர்த்தியை கையாண்டிருப்பதோடு, நடிகர்களின் சிறப்பான நடிப்பு மூலமாகவும் முழு திரைப்படத்தையும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரவீன் கிருஷ்ணா.

 

மொத்தத்தில், ‘உத்ரா’  நல்ல படத்திற்கு உத்தரவாதம்.

 

ரேட்டிங் 2.75/5

Recent Gallery