Casting : சந்தோஷ் பிரதீப், ரேஷ்மி மேனன், ஜீவா, ராஜேந்திரன், பரணி, ஜெகன்
Directed By : ஜவஹர்
Music By : சத்யா
Produced By : சத்யா
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை தனியாக விட்டுவிட்டு, இலங்கைக்கு செல்லும் ஹீரோ சந்தோஷ் பிரதீப், தமிழர்கள் பிரச்சினை காரணமாக 4 மாதங்கள் கழித்து தமிழகம் திரும்ப நேரிடுகிறது. அப்போது அதே பிரச்சினையில் சிக்கிகொண்ட சென்னையில் இருந்து இலங்கை சென்றவர்களான ஜீவா, பரணி, ஜெகன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரையும் தன்னுடன் தமிழகத்திற்கு அழைத்து வரும் சந்தோஷ், தனது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு போகும்படி சொல்கிறார்.
அதன்படி, பிரதீப்பின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் தங்கும் இந்த நால்வர்களில் மொட்டை ராஜேந்திரன் சந்தோஷின் மனைவி ரேஷ்மி மேனனை பேய் என்று சொல்கிறார். அதே சமயம், அந்த ஊரில் உள்ள சிலரும், சந்தோஷின் மனைவியை பேய் என்று சொல்ல, ஒரு கட்டத்தில், சந்தோஷின் நான்கு நண்பர்களும் ரேஷ்மியை பேய் என்று சொல்வதோடு, அவர் இறந்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
தனது கை குழந்தையுடன் சகஜமாக இருக்கும் ரேஷ்மி மேனன், குறித்து தனது நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் சொல்வதை சந்தோஷ் நம்பாமல் இருந்தாலும், அவரை ரேஷ்மியிடம் இருந்து காப்பாற்றியாக வேண்டும், என்று அவரது நான்கு நண்பர்களும் முயற்சிக்கிறார்கள். அதே சமயம், உங்களுடன் பேய் இருக்கிறது, ஆனால் அது யார் என்பது தெரியாது, என்று கூறும் மந்திரவாதி கோவை சரளா, அதை கண்டுபிடிக்க மந்திர அரிசியை கொடுக்கிறார். அதை பயன்படுத்தும் நான்கு நண்பர்களும் சந்தோஷ் தான் பேய் என்ற முடிவுக்கு வர, சில நிமிடங்களில் சந்தோஷ் பேய் இல்லை என்பதையும் கண்டுபிடித்துவிட, உண்மையான பேய் யார்? உயிருடன் இருக்கும் இந்த 6 பேர்களில் ஒருவர் எப்படி பேய் ஆனார்?, என்பதே ‘பயமா இருக்கு’ படத்தின் கதை.
படத்தின் தலைப்பும், நடிகர்களும் பேய் படம் என்ற பெயரில் நமக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்க போறங்க, என்று நினைக்க வைத்தாலும், இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தொடங்கும் படம். கேரளா தமிழகம் எல்லையில் அமைந்துள்ள கிராமம், அந்த கிராமத்தில் தண்ணீரில் மிதக்கும் ஒரு வீடு, அதில் இருக்கும் மர்மங்கள் என படத்தின் ஆரம்பமே நம்மை சீட் நுணியில் உட்கார வைத்தாலும், பல தடுமாற்றங்களுடன் நகரும் திரைக்கதை, சில காட்சிகளுக்கு பிறகு, இதுவும் குண்டு சட்டியில குதிரை ஓட்ற விஷயம் தான், என்பதை நமக்கு உணர்த்தி விடுகிறது.
சந்தோஷ் பிரதீப், ரேஷ்மி மேனன், ஜீவா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், பரணி இவர்களுடன் ஒரு சில காட்சிகளில் வரும் சில ஜுனியர் ஆர்டிஸ்ட்கள் தான் படத்தின் மொத்த நடிகர்கள். இவர்களை வைத்துக்கொண்டு, ஆரம்பத்தில் படத்தை சீரியஸாக நகர்த்தி ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை தூண்டும் இயக்குநர் ஜவஹர், அதன் பிறகு காமெடி என்ற பெயரில் திரைக்கதையை திசை மாற்றுவதோடு, க்ளைமாக்ஸில் கோவை சரளாவை மந்திரவாதியாக்கி, செய்யும் நகைச்சுவை காட்சிகள் மூலம் மொத்த படத்தையே சிதைத்துவிடுகிறார்.
சத்யாவின் இசையும், மகேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருப்பதோடு, நடிகர்களைக் காட்டிலும் படத்தை அதிகமாக தூக்கி சுமப்பவர்களே இவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
கதை இல்லை என்றாலும் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் உருவான படத்தை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் எதுவுமே இல்லாமல், ஏற்கனவே சில படங்களில் வந்த காட்சிகளையும், ஒரு குறிப்பிட்ட லொக்கேஷனை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட படம் என்றால் இதுவாகத்தான் இருக்கும்.
ஆரம்பத்தில் காட்சிகளின் மூலம் மிரட்டியிருக்கும் இயக்குநர் ஜவஹர், தான் எழுதிய கதையின் பல பக்கங்களை தொலைத்துவிட்டு, பிறகு படத்தை எப்படி முடிப்பது? என்று தெரியாமல் காமெடி என்ற பெயரில், ரசிகர்களை படுத்தி எடுக்கிறார்.
ஒளிப்பதிவு மற்றும் இசை என்று தொழில்நுட்ப ரீதியாக படம் ரசிக்கும்படியாக இருந்தாலும், அதை வைத்து ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு ஒரு திகில் படமாக கொடுத்திருந்தாலே படம் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். ஆனால், அதைவிட்டுட்டு காமெடி என்ற பெயரில் படத்தின் இரண்டாம் பாதியை இயக்குநர் ஜவஹர் கடித்து கொதறியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘பயமா இருக்கு’ ரசிகர்களுக்கு பயத்தையும் ஏற்படுத்தவில்லை, சிரிப்பையும் எற்படுத்தவில்லை.
ஜெ.சுகுமார்