Latest News :

’ராக்கி’ விமர்சனம்

a883b423561adaad316240666e47bba2.jpg

Casting : Vasanth Ravi, Bharathiraja

Directed By : Arun Madheshwaran

Music By : Tarpuka Siva

Produced By : CR Manoj Kumar

 

இரண்டு ரவுடிகளுக்கு இடையே நடைபெறும் பழிக்கு பழி கொலை சம்பவங்களை இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத ஒரு கோணத்தில் காட்சிப்படுத்தியிருப்பது தான் ‘ராக்கி’.

 

கொடூர கொலைகள் என்று நாம் செய்திகளில் படித்திருப்போம், ஆனால், அந்த கொடூர கொலைகள் எப்படி இருக்கும், என்பதை காட்டும் விதமாக கையாளப்பட்டிருக்கும் காட்சிகள் நம்மை சற்று அதிர்ச்சியடைய செய்தாலும், பழிக்கு பழி என்ற உணர்வின் வீரியத்தை அக்காட்சிகள் மூலம் மிக தைரியமாகவும், அழுத்தமாகவும் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதுவே படத்தின் தனி சிறப்பும் கூட.

 

படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா மற்றும் வசந்த் ரவி இருவரும் அதிகம் பேசவில்லை என்றாலும், அவர்களுடைய மவுனம் பல இடங்களில், பல உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது.

 

நாயகன் வசந்த் ரவி, 10 நாட்கள் காய்ச்சலில் படுத்தவரைப் போல இருந்தாலும், அவருடைய அந்த பார்வையும், எதிரிகளை குத்தி கிழிக்கும் வேகமும் அவரை அக்மார்க் ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டுகிறது. கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற மிக சரியான தேர்வாக இருக்கும் வசந்த் ரவி, தனது வேலையில் எவ்வித குறையும் இன்றி பயணித்திருக்கிறார்.

 

ஆர்பாட்டம் இல்லாத வில்லனாக நடித்திருக்கும் பாரதிராஜா, சிறு சிறு ரியாக்‌ஷன்கள் மூலமாகவே தனது வில்லதனத்தை வெளிப்படுத்தி மிரட்டியிருக்கிறார்.

 

பாரதிராஜாவின் அடியாட்களாக நடித்திருப்பவர்கள், வசந்த் ரவியின் தங்கையாக நடித்திருப்பவர் உள்ளிட்ட படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் பொருத்தமான தேர்வு.

 

கதை மிக எளிமையானது என்றாலும், தொழில்நுட்பம் மூலம் அதை வலிமையாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் அருண் மாதேஷ்வரனுக்கு, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஷ் கிருஷ்ணா கதாப்பாத்திரங்களின் மனநிலைக்கு ஏற்றவாறு காட்சிகளை கையாண்டிருக்கிறார். குறிப்பிட்ட ஒரே வண்ணத்தை படம் முழுவதும் கையாண்டிருப்பவர், சிறிய அறை உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் சண்டைக்காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

 

தர்புகா சிவாவின் பின்னணி இசை கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. 

நாகேந்திரனின் படத்தொகுப்பு சில இடங்களில் ரசிகர்களின் பொறுமையை சோதித்தாலும், ஆக்‌ஷன் காட்சிகளில் பாராட்டு பெறுகிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் அருண் மாதேஷ்வரன், ஏற்கனவே ரசிகர்கள் பார்த்த பழைய கதை என்றாலும், அந்த கதையை சொல்லும் விதத்தில் புதுமையை கையாண்டிருப்பதோடு, வித்தியாசமான முறையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

 

படத்தில் இடம்பெறும் கொலை காட்சிகள் சற்று வன்முறை தூக்கலாக இருப்பது போல் தெரிந்தாலும், கதாப்பாத்திரத்தின் வலிமை மற்றும் மன உணர்வை வெளிப்படுத்த அந்த காட்சிகள் அவசியமானதாக இருக்கிறது.

 

படத்தின் ஆரம்பத்தில் காட்சிகளை மெதுவாக நகர்த்துவது சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், எதிரிகளை ராக்கி எதிர்கொள்ளும் காட்சிகள் நம்மை சீட் நுணியில் உட்கார வைப்பதோடு, ராக்கி எதிரிகளிடம் இருந்து தப்பிப்பாரா இல்லையா, என்ற எதிர்ப்பார்ப்போடு படம் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது.

 

மொத்தத்தில், ‘ராக்கி’ சினிமா ரசிகர்களை ரசிக்க வைப்பான்.

 

ரேட்டிங் 3.25/5

Recent Gallery