Casting : Samuthirakkani, Iniya, GM Sundar, Hari Krishnan
Directed By : Franklin Jacob
Music By : Govind Vasantha
Produced By : Pa.Ranjith
கடைநிலை காவலர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும், காவல்துறையில் இருக்கும் சாதி பாகுபாட்டையும் பேசியிருப்பதோடு, காவல்துறையில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை அழுத்தமாக பதிவு செய்திருப்பது தான் ‘ரைட்டர்’.
வயதான தோற்றத்தில் காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, மனசாட்சிபடி நடக்கும் காவலர்களை பிரதிபலிக்கும் விதமாக நடித்திருக்கிறார். அதிகம் பேசாமல் தனது ரியாக்ஷன்கள் மூலம் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கும் சமுத்திரக்கனி, உயர் அதிகாரிகளிடம் அடிபட்டு அவமானப்படும் காட்சிகளிலும் சரி, காவல்துறைக்காக சங்கம் கேட்டு போராடும் காட்சிகளிலும் சரி நடிப்பில் புதிய சமுத்திரக்கனியை வெளிக்காட்டி இருக்கிறார்.
அதிகாரம் மிக்க காவல்துறை அதிகாரியிடம் சிக்கி தவிக்கும் கல்லூரி மாணவர் வேடத்தில் நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணனின் கதறல் நம்மை குமுற வைப்பதோடு, காவல்துறையின் மீது அச்சப்படவும் வைக்கிறது.
ஹரியின் அண்ணன் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் சுப்பிரமணிய சிவா, தனது நடிப்பு மூலம் கதையின் நாயகனுக்கு இணையாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். தனது நம்பிக்கு நேர்ந்த நிலையை கண்டு அவர் கதறும் இடங்களில் படம் பார்ப்பவர்களின் கண்களும் கலங்கி விடுகிறது.
கதையின் மையப்புள்ளி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கு இனியா, வரும் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். குறிப்பாக உயர் அதிகாரி முன்பு குதிரை சவாரி செய்யும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.
’மேற்கு தொடர்ச்சி மலை’ புகழ் ஆண்டனியின் கதாப்பாத்திரமும், அதில் அவர் நடித்த விதமும் நம்மை சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கவிதா பாரதி, கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் மிக நேர்த்தி.
வழக்கறிஞராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர் என அனைவரும் கதாப்பாத்திறத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்கள்.
பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.
காவலர்களுக்கு சங்கம் வேண்டும், என்ற வலியுறுத்தலோடு படத்தை தொடங்கும் இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப், அதிகார வர்க்கத்தினால் ஒரு தலைமுறையே எப்படி நசுக்கப்படுகிறது என்பதையும், அதிகார வர்க்கத்தின் சாதி ஆணவத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல போலீஸ் படங்கள் வந்திருந்தாலும், இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு காவல்துறையை மையமாக வைத்து புதிய கதைக்களத்தில் பயணித்திருக்கும் இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப்புக்கு தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரிப்பது உறுதி.
மொத்தத்தில், ‘ரைட்டர்’ காவலர்களை சிந்திக்க வைக்கும்.
ரேட்டிங் 3.75/5