Casting : John Vijay, Nivin Kartik, Miyasree, Maria charm, Ashmita, Nakul
Directed By : Sunil Dixon
Music By : Kalaiarasan
Produced By : Shadow Light Entertainment
சென்னையில் இருந்து காட்டுப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றுக்கு மாற்றலாகும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்திக், தனது குடும்பத்தோடு அந்த கிராமத்தில் குடியேறுகிறார். அந்த கிராமத்தில் தொடர்ந்து பலர் கொலை செய்யப்படுகிறார்கள். ஊரில் நடக்கும் கொலைகளை தடுக்கும் முயற்சியில் நிவின் கார்த்திக் ஈடுபட, அவரையும் அவரது குடும்பத்தாரையும் அமானுஷ்ய சக்தி ஒன்று மிரட்டுகிறது. அந்த அமானுஷ்ய சக்தி யார்?, ஊரில் நடக்கும் கொலைகளின் பின்னணி என்ன? என்பதை போலீஸ் அதிகாரி நிவின் கார்த்திக் கண்டுபிடித்து, கொலைகளை தடுப்பது தான் ‘தூநேரி’ படத்தின் கதை.
கருப்பசாமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய், வித்தியாசமான நடிப்பில் மிரட்டியிருப்பதோடு, பல காட்சிகளில் படம் பார்ப்பவர்களை பயமுறுத்தவும் செய்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நிவின் கார்த்திக், தன்னால் முடிந்த அளவுக்கு கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தாலும், சற்று கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கும்.
சிறுவர்கள் அஷ்மிதா, நகுல், அபிஜித் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அபிஜித்தின் நடிப்பு அபாராம். நிவின் கார்த்திக்கின் மனைவியாக நடித்திருக்கும் மியாஸ்ரீ நடிப்பில் வேற்றுமையை காண்பித்து கவர்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் காலேஷ் மற்றும் ஆலென் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களின் அழகை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளனர். கலையரசனின் இசை திகில் படத்திற்கு ஏற்றவாறு பயணித்துள்ளது.
கதை வழக்கமான பாதையில் பயணித்தாலும், திரைக்கதையில் சற்று வித்தியாசத்தை காண்பிக்க இயக்குநர் சுனில் டிக்ஸன் முயற்சித்திருப்பதோடு, தான் சொல்ல வந்த கதையை நேர்த்தியாகவும், திகில் நிறைந்த காட்சிகளோடும் சொல்லியிருக்கிறார்.
படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் மிக நேர்த்தியாக இருப்பதோடு, குழந்தைகளை கவரும் விதத்திலும் இருக்கிறது.
மொத்தத்தில் ‘தூநேரி’ மிரட்டல்.
ரேட்டிங் 2.75/5