Casting : Kathiravan, Anagha, Sharavana Subbaia, Pranav Rayan, Durai Sudhakar
Directed By : Sharavana Subbaia
Music By : Naren Balakumar
Produced By : Hero Cinemas - C.Manikandan
இந்திய உளவுத்துறையில் பணியாற்றும் நாயகன் கதிரவன், தனது பணியால் தனது காதல் மனைவியை பிரிந்துவிடுகிறார். தனது மகன் தான் உலகம் என்று வாழும் கதிரவனுக்கு மிகப்பெரிய பயங்கரத்தை தடுத்து நிறுத்தும் பணி கொடுக்கப்படுகிறது. அதற்காக சிலாக்கி என்ற நாட்டுக்கு உளவு பார்க்க கதிரவன் செல்ல முடிவு செய்கிறார். தனது மனைவியை பிரிந்தது போல் மகனையும் பிரியும் சூழல் கதிரவனுக்கு உருவாக, இறுதில் தனது பணியை வெற்றிகரமாக முடித்து தனது மகனுடன் அவர் சேர்ந்தாரா இல்லையா, என்பதே ‘மீண்டும்’ படத்தின் மீதிக்கதை.
மிகப்பெரிய பட்ஜெட்டில், ஆக்ஷன் ஹீரோக்கள் நடிக்க வேண்டிய ஒரு கதைக்களமாக இருந்தாலும், அதை சிறிய பட்ஜெட்டில் எளிமையாகவும் சொல்லியிருந்தாலும், மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.
ஆக்ஷன் ஹீரோக்கள் நடிக்க வேண்டிய ஒரு கதைக்களத்தில் நடிகர் கதிரவன் தன்னால் முடிந்தவரை சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் மனைவியை பிரிந்த வலியோடு, தனது மகனையும் பிரியும் சூழல் வரும் போது ஒரு தந்தையாக உருகும் இடங்களில் நல்ல நடிப்பு. உளவு பார்க்க செல்லும் இடத்தில் கதிரவன் அனுபவிக்கும் சித்ரவதைகளும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடலும் பாராட்டும்படி உள்ளது.
கதாநாயகியாக நடித்திருக்கும் அனகா, தாய்மையின் உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அனாகாவின் கணவராக நடித்திருக்கும் இயக்குநர் சரவண சுப்பையாவின் கதாப்பாத்திரம் மீது மரியாதை வருகிறது.
வில்லனாக நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் அலட்டல் இல்லாமல் அதிரடி காட்டியிருக்கிறார். நாகேந்திர ரெட்டி என்ற கதாப்பாத்திரத்தில் அவர் காட்டும் வில்லத்தனம் சரவெடியாக வெடிக்கிறது.
பெண் ஹிட்லர் வேடத்தில் நடித்திருக்கும் நடிகை பயமுறுத்துகிறார். இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி, யார் கண்ணன், கேபில் சங்கர் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீநிவாஸ் தேவம்சம், தன்னால் முடிந்தவரை கதைக்களத்தில் இருக்கும் பிரமாண்டத்தை திரையில் காட்ட முயற்சித்திருக்கிறார்.
‘சிட்டிசன்’ போன்ற பிரமாண்டமான திரைப்படத்தை இயக்கிய சரவண சுப்பையா, எழுதியிருக்கும் கதை மிக பிரமாண்டமானதாக இருந்தாலும், பட்ஜெட் காரணமாக மிக எளிமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
கணவன் - மனைவி பிரிவு, தாய்மையின் வலி, தந்தை - மகன் பிரிவு என்று உறவுகளின் வலிகளை உணர்த்தும் கதை ஒரு பக்கம், மறுபக்கம் உளவுத்துறையின் பணிகளும், அவர்கள் எதிரிகளிடம் சிக்கிக்கொண்டால் அனுபவிக்கும் கொடுமைகளை வெளிக்காட்டும் கதையோடு பயணிக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்கிறது.
கதைக்களம் வலுவாக இருந்தாலும், படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பலர் பரீட்சயம் இல்லாத முகங்களாக இருப்பதும், கதையில் இருக்கும் பிரமாண்டம் திரையில் இல்லாததும் குறையாக இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குநர் சரவண சுப்பையாவை பாராட்டியாக வேண்டும்.
மொத்தத்தில், ‘மீண்டும்’ இயக்குநர் சரவண சுப்பையாவை மீண்டும் கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக பயணிக்க வைக்கும்.
ரேட்டிங் 3/5