Latest News :

‘ஆயிரத்தில் இருவர்’ விமர்சனம்

2a125928c6ffbdbb25d7e3105d233e27.jpg

Casting : வினய், சமுத்ரிகா, ஸ்வஸ்திகா, பிரதீப் ராவத், அருள்தாஸ், மயில்சாமி, இளவரசு

Directed By : சரண்

Music By : பரத்வாஜ்

Produced By : சங்கர் கே பிரவீன் பிலிம்ஸ்


ல வெற்றிப் படங்களை கொடுத்த சரண் இயக்கத்தில், வினய் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’.

 

செந்தட்டிக்காளை, செவத்தக்காளை என்ற இரட்டை பிறப்புக்களான வினய்கள், அம்மாவின் கருவில் இருக்கும்போதே நீயா? நானா? என்று போட்டிக்கொண்டு பிறக்கிறார்கள். வளரும் போதும் அதே மோதலுடனே வளரும் இவர்களில் ஒரு வினய், பங்காளி பகையால் செய்யப்பட்டுவிட்டதாக அவரது பெற்றோர் நினைக்க, அந்த கோபத்தில் வினயின் அப்பா, தனது பங்காளியை போட்டு தள்ளிவிட்டு ஆந்திராவில் தலைமறைவாகி விடுகிறார். அதே ஆந்திராவில் உயிரிழந்துவிட்டதாக நினைத்த தனது மகனையும் சந்திக்கும் அவர், தனது மகன் உயிருடன் இருப்பது பங்காளி குடும்பத்திற்கு தெரிந்தால் விபரீதமாகிவிடும் என்பதால், தன்னுடனேயே வினயை ஆந்திராவில் தங்க வைத்துக்கொள்வதுடன், அந்த விஷயத்தை தனது மனைவி உள்ளிட்ட யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.

 

இப்படி அம்மாவிடும் ஒரு வினய், அப்பாவிடம் ஒரு வினய் என்று வளரும் வினய்கள், வளர்ந்து பெரியவர்களானவுடன் காதல் கசமுசா என்று இருப்பதோடு, தனது குடும்ப சொத்தை கைப்பற்றவும் நினைக்கிறார்கள். செந்தட்டிக்காளை உயிரோடு இருப்பது தெரியாமல் சொத்து அனைத்தையும் தனது பெயருக்கு மாற்றம் செய்ய செவத்தக்காளை முயற்சிக்க, அந்த செவத்தக்காளையை தனது சூழ்ச்சியின் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் செந்தட்டிக்காளை, செவத்தக்காளையாக வந்து சொத்தக்களை அபேஸ் செய்ய திட்டம் போடுகிறார். இதற்கிடையே வினய்களின் குடும்ப பகையாளியான போலீஸ் இன்ஸ்பெக்டர், கள்ள நோட்டு விவகாரத்தில் வினயை சிக்க வைப்பதுடன், சொத்துக்களை அபகரித்துக்கொண்டு கொலை செய்யவும் திட்டமிடுகிறார். இந்த பிரச்சினை போதாது என்று ஆந்திராவில் இருந்து ஒரு  பிரச்சினை வர, கூடவே மதுரையில் இருந்தும் ஒரு பிரச்சினை வருகிறது.

 

தங்களுக்குள்ளேயே கொலைவெறியுடன் மோதிக்கொள்ளும் இந்த இரட்டை சகோதர்களுக்கு, எதிராக மேலும் பல பிரச்சினைகள்  கிளம்ப, அவற்றில் இவர்கள் சிக்கி சிதைந்தார்களா? அல்லது பிரச்சினைகளை தீர்த்துவிட்டு திருந்தினார்களா? என்பதே ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் மீதிக்கதை.

 

எங்கள் வீட்டுப் பிள்ளை, பாணி ஆள்மாராட்டம் செய்யும் இரட்டை வேட ஹீரோ சப்ஜட்க் தான் படத்தின் கதை என்றாலும், அதற்கு சரண் அமைத்திருக்கும் திரைக்கதையும், கிளைக்கதைகளும் படத்தை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

 

சாக்லெட் பாயாக இருந்த வினய், இந்த படத்தில் நெல்லை தமிழ் பேசும் இளைஞராக வலம் வருகிறார். வேஷ்ட்டி, சட்டை என்று கிராமத்து கதைக்கு சற்று பொருந்தி போனாலும், மீசை இல்லாமல் இருப்பது கதாபாத்திரத்திற்கு சற்று ஒட்டாமல் போகிறது. இருந்தாலும் நடிப்பில் பெரிய அளவில் சொதப்பவும் இல்லை, கவரும் இல்லை. சமமாக பேலன்ஸ் செய்து, ஏதோ ஒரு வழியாக கூட நடித்த நடிகர்கள் புண்ணியத்தில் கரை சேர்ந்திருக்கிறார்.

 

சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா என்று இரண்டு ஹீரோயின்களும் பார்க்க அம்சமாக இருப்பதோடு, பாடல் காட்சிகளில் ரசிகர்களின் கண்களை குளிர்ச்சியாக்கிவிடுகிறார்கள். ரெட்டியாக வரும் அந்த நடிகை கவர்ச்சியில் படு சுட்டியாக இருக்கிறார். சுருட்டு லேடியாக வரும் காஜல் பசுபதியின் வேடமும், அவரை காதலிக்கும் மதுரை ரவுடி அருள்தாஸ் மற்றும் அவரது அடியாட்கள் கூட்டமும், காமெடிக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறார்கள்.

 

சரண் - பரத்வாஜ் கூட்டணி படத்தில் எது நன்றாக இருக்கிறதோ இல்லையோ, பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும். ஆனால், இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகமாகவே உள்ளது. ஒரே ஒரு பாடல் மட்டும் சற்று முனுமுனுக்க வைக்கிறது. இரட்டை வேடம் என்றால் அதிகமான வேலை ஒளிப்பதிவாளருக்கு தான் இருக்கும். ஆனால், இந்த படத்தை பொருத்தவரை ஒளிப்பதிவாளர் கிருஷ்ண ரமணன், அப்படிப்பட்ட கஷ்ட்டங்கள் எதையும் அனுபவிக்கவில்லை, என்பதற்கு படத்தின் அனைத்து காட்சிகளும் சாட்சிகளாக உள்ளன. இரண்டு வினயும் ஒரே சமயத்தில் காட்டப்படும் காட்சிகள் ஒன்று அல்லது இரண்டு காட்சிகல் மட்டுமே என்பதால், ஒளிப்பதிவாளர் மெனக்கெட்டு எதையும் செய்யவில்லை. அதே சமயம் பாடல் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.

 

இந்த படத்தை இரண்டரை மணி நேர படமாக வெட்டிய எடிட்டர் ரிச்சர்ட் கெவினுக்கும் அவரது கத்திரிக்கும், கோடான கோடி கைதட்டல் கொடுத்தாலும் பத்தாது. இந்த படத்தின் கதையை வைத்து இரண்டாம் பாகம் அல்ல, மூன்று மற்றும் நான்காம் பாகம் கூட எடுத்துவிடலாம், அந்த அளவுக்கு ஒரு படத்திற்குள் பல கதைகளை இயக்குநர் கையாண்டுள்ளார்.

 

ஆக்‌ஷன் மூடில் தொடங்கும் படம், கொஞ்சம் கொஞ்சமாக காமெடி மூடுக்கு மாறி, இறுதியில் நூறு சதவீத காமெடிப்படமாகவே முடிந்துவிடுகிறது. சரண் இயக்கும் படங்களிலேயே அதிகமான காமெடி காட்சிகள் உள்ள படம் என்றால் இந்த படமாகத்தான் இருக்கும்.

 

கதை சொல்வதில் தான் கெட்டிக்காரன் என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ள இயக்குநர் சரண், கிளைக்கதைகளை சற்று குறைத்துவிட்டு, ஹீரோக்களின் ஆள்மாராட்ட காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால் திரைக்கதையின் சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும்.

 

இருந்தாலும், படத்திற்குள் எத்தனை கதைகள் இருந்தாலும், அத்தனையும் ரசிகர்களை எந்தவிதத்திலும் குழப்பாத வகையில், திரைக்கதையை நேர்த்தியாக கையாண்டிருப்பவர் காட்சிகளையும் கச்சிதமாக வைத்து படத்தின் பல பகுதிகளை ரசிக்கும்படி இயக்கியுள்ளார்.

 

காதல் பிளஸ் ஆக்‌ஷன் என்று இரண்டையுமே அளவாக கையாளும் சரண், இந்த படத்தில் காதலை கொஞ்சம் அல்ல ரொம்பவே குறைத்துவிட்டு, டிரெண்டுக்கு ஏற்றவாரு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதுவும் நல்லாவே வேலை செஞ்சிருக்கு. அதிலும், அருள்தாஸுடன் வரும் அந்த அடியாள், எதற்கு எடுத்தாலும், ”மதுர காரங்க...” என்று கூறிக்கொண்டு செய்யும் நையாண்டி, நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதுடன், படத்தின் கடைசி 20 நிமிடத்தை ஜெட் வேகத்தில் நகர்த்தி செல்கிறது.

 

மொத்தத்தில் இந்த ‘ஆயிரத்தில் இருவர்’ கதையில் சுமாராக இருந்தாலும், காமெடியில் சூப்பரான படமாக உள்ளது.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery