Latest News :

’கார்பன்’ விமர்சனம்

2281f9585afcbff44b5980608770ae85.jpg

Casting : Vidaarth, Dhanya, Marimuthu, Munar Ramesh, Vinod Sagar, Ajay Natraj

Directed By : R.Srinuvasan

Music By : Sam CS

Produced By : A.Bagyalakshmi, M.Anandhajothi and R.Srinuvasan

 

நாயகன் விதார்த்துக்கு இரவில் வரும் கனவு காலையில் அப்படியே நடந்துவிடுகிறது. ஒரு இரவில் அவரது தந்தைக்கு விபத்து நடப்பது போல் கனவு காண, அந்த கனவு பலித்துவிடுகிறது. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் விதார்த்தின் அப்பாவை காப்பாற்ற ரூ.10 லட்சம் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்தால் இன்சூரான்ஸ் பணம் கிடைக்கும் என்பதால், யார்? என்று தெரியாத அந்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபடும் விதார்த்துக்கு, தனது அப்பாவுக்கு நேர்ந்தது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை முயற்சி, என்பது தெரிய வருகிறது. அவர் யார்?, எதற்காக விதார்த்தின் அப்பாவை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும், அவரை விதார்த் எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதே படத்தின் மீதிக்கதை.

 

க்ரைம் திரில்லர் ஜானர் கதையை வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு புதிய ரூட்டில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஆர்.ஸ்ரீனுவாசன், தமிழ் சினிமாவின் சமீபத்திய எண்ட்ரியான டைம் லூப் அம்சத்தை வேறுவிதமாக கையாண்டிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.

 

நாயகனாக நடித்திருக்கும் விதார்த் அப்பா மீது பிள்ளைகள் வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் காட்சிகளிலும், உயிருக்கு போராடும் அப்பாவை காப்பாற்ற துடிக்கும் காட்சிகளிலும் நிறைவாக நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் தன்யா, ஆரம்பத்தில் அமைதியான நடிப்பின் மூலம் கவர்கிறவர், இரண்டாம் பாதியில் எடுக்கும் விஸ்வரூபம் மிரட்டுகிறது.

 

விதார்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து, எப்போதும் போல் தனது இயல்பான நடிப்பால் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார். காவலராக நடித்திருக்கும் மூணாறு ரமேஷ், வினோத் சாகர், அஜய் நட்ராஜ் என படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கதையோடு பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷத்தின் கேமரா ஒரு கதாப்பாத்திரமாகவே பயணித்திருக்கிறது. சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு. படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் பணி படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

 

க்ரைம் சஸ்பென்ஸ் ஜானர் கதையை நேரடியாக சொல்லாமல், கனவு பலிக்கிறது, நாயகனின் திடீர் காதல் பின்னணியில் இருக்கும் ட்விஸ்ட் போன்ற பல அம்சங்கள் மூலம் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருக்கும் இயக்குநர் ஆர்.ஸ்ரீனுவாசன், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார். படம் வேகமாக நகர்ந்தாலும், அப்பா - மகன் இடையே இருக்கும் பாசத்தை படம் பார்ப்பவர்கள் மனதிலும் படரும்படி செய்கிறார்.

 

அனைத்தையும் அளவாக கையாண்ட இயக்குநர் க்ளைமாக்ஸில் அரங்கேற்றிய மேடை நாடகம் படத்துடன் ஒட்டாமல் இருப்பதோடு, அவருடைய அத்தனை முயற்சியையும் அலங்கோலப்படுத்திவிடுகிறது. இருந்தாலும், படத்தின் இறுதி வரை, அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்புடனே ரசிகர்களை உட்கார வைத்த இயக்குநர் ஆர்.ஸ்ரீனுவாசனை தாராளமாக பாராட்டலாம்.

 

மொத்தத்தில், ‘கார்பன்’ அசல் க்ரைம் திரில்லர்

 

ரேட்டிங் 3/5

Recent Gallery