Latest News :

’கொம்புவச்ச சிங்கம்டா’ விமர்சனம்

e0215c04bac7667e555ce1dc1a7e9b31.jpg

Casting : M.Sasikumar, Madonna Sebastian, Soori, Director Mahendran, Hareesh Peradi, Aruldoss, Inder Kumar, Sri Priyanka

Directed By : S.R. Prabhakaran

Music By : Dhibu Ninan Thomas

Produced By : Redhan The Cinema People - Inder Kumar

 

சிறு வயதில் இருந்தே சாதி, மதம் பாகுபாடு பார்க்காமல் பழகும் ஆறு நண்பர்கள், தங்களை சுற்றியிருப்பவர்களையும் ஒற்றுமையாக்கும் முயற்சிகளை அவ்வபோது செய்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு போகிறார்கள். அவர்களுக்கிடையே அப்படி ஒரு பகை எப்படி ஏற்பட்டது?, அதன் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.

 

சாதி பாகுபாடு பார்க்காமல், ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்ற கருத்தை படம் வலியுறுத்தினாலும், சாதி பாகுபாடு பார்ப்பவர்களுக்கு ஆதரவாகவும் படம் பேசுவது பெரும் சோகம்.

 

அனைத்து ரியாக்‌ஷன்களையும் ஒரே மாதிரியாக கொடுத்தாலும், அதை சரியாக சமாளித்துவிடும் சசிகுமார், காதல் காட்சிகளில் மட்டும் சொதப்புவதை அப்பட்டமாக வெளிக்காட்டி சிக்கிக்கொள்கிறார். நண்பர்கள் கொலை, அதை தொடர்ந்து எழும் பிரச்சனைகள், அதை சரி செய்ய எடுக்கும் நடவடிக்கைகள் என அதிரடி ஏரியாக்களில் மட்டுமே தன் அக்மார்க் நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்.

 

கதாநாயாகியாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். 

 

நல்லவர்களா அல்ல கெட்டவர்களா, என்று யூகிக்க முடியாத கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி மற்றும் இந்தர் குமார் ஆகியோர் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.

 

சூரியின் காமெடி காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை. பழைய காமெடியை வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை படங்களில் காமெடி என்ற பெயரில் மனுஷன் கடித்துக்கொண்டிருக்க போகிறாரோ.

 

அழுத்தமான கதாப்பாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கும் இயக்குநர் மகேந்திரனின் இயல்பான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பில் இருக்கும் துடிப்பு, அவரது கதாப்பாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

 

சில காட்சிகளில் வந்தாலும் தனது கருத்து பணியை கச்சிதமாக செய்துவிட்டு போகிறார் சமுத்திரக்கனி. ஸ்ரீ பிரியங்கா, சங்கிலி முருகன், அபி சரவணன், அருள்தாஸ், தீபா ராமானுஜம் என்று படத்தில் பலர் இருந்தாலும், அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை.

 

திபு நினன் தாமஸின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் கரூ மாவட்டத்தின் அழகு கண்னுக்கு நிறைவு

 

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், மிகப்பெரிய வெற்றி பெற்ற தனது முதல் படமான ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் கையாண்ட திரைக்கதை யுக்தியை இதில் சற்று தூக்கலாக பின்பற்றியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

 

சாதி பாகுபாடு வேண்டாம், என்ற கருத்தை வலியுறுத்தி, பெரியாரின் கருத்து பேசும் படத்தில்,  “பெண்கள் என்றால் சமையல் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்” போன்ற வசனங்கள் வைத்திருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.

 

ஒற்றுமையாக இருக்கும் நண்பர்களை வைத்தே சாதி சண்டையை ஏற்படுத்தி அதன் மூலம் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் அந்த நபர் யார்? , நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு நாயகன் எப்படி தீர்வு காணப்போகிறார்? போன்ற கேள்விகள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துவதோடு, அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

 

படத்தின் மையக்கரு சமூகத்திற்கு தேவையான ஒன்றாகவும், வரவேற்க கூடியதாகவும் இருந்தாலும், அதை ஒரு திரைப்படமாக சொல்லும்போது கையாள வேண்டிய சில அம்சங்களில் சற்று குறை இருப்பதாக தோன்றுகிறது. அந்த குறையை தவிர்த்துவிட்டு பார்த்தால், சமூக கருத்து பேசும் நல்ல கமர்ஷியல் படம் தான் இந்த ‘கொம்புவச்ச சிங்கம்டா’.

 

ரேட்டிங் 2.75/5

Recent Gallery