Casting : Sella, Nishanth, Vijay Sathya, Balaji Rathinam, Joe Malluri
Directed By : Bala Aran
Music By : Suren Vikash
Produced By : Vignesh Selvaraj
அறிமுக இயக்குநர் பாலா அரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ சோனி லிவ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. பிளாக் காமெடி வகை கதையம்சம் கொண்ட இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்.
பன்றி சிலை ஒன்றை மையப்புள்ளியாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு பயணப்பட்ட சுமார் 1000 வருடங்கள் பழமையான பன்றி சிலை ஒன்றை கைப்பற்ற சிலர் முயற்சிக்க, அதனை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும், இறுதியில் அந்த சிலை என்னவானது, யார் கைப்பற்றியது என்பதை பல திருப்புமுனைகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
சிலை கடத்தல் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பாலா அரன், படம் முழுவதும் சில பிளாஷ்பேக்குகளை வைத்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு பிளாஷ்பேக் இடம்பெறும் போதெல்லாம், என்ன நடந்திருக்கும்!, என்று படம் பார்ப்பவர்களை யோசிக்கும் வகையில் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த், ரவுடியாக நடித்திருக்கும் விஜய் சத்யா, செல்லா, பாலாஜி ரத்தினம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரங்களுக்கு பொருத்தமாக இருப்பதோடு, இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விக்னேஷ் செல்வராஜ் இரவு காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, கடத்தல் மற்றும் புதையல் தொடர்பான கதை என்பதால் செஃப்பியா கலர் டோனை பயன்படுத்தியிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
சுரேன் விகாஷின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசையில் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். பல இடங்களில் பின்னணி இசை கவனம் பெறுகிறது.
சாதாரண கதையை சுவாரஸ்யமாக சொல்லும் முயற்சியில் இயக்குநர் பாலா அரன் வெற்றி பெற்றிருந்தாலும், அதிகமான பிளாஷ்பேக்குகள் மூலம் சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அதை தவிர்த்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு அதிகரித்திருக்கும். இருந்தாலும், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, நம்மையும் படத்துடன் பயணிக்க வைக்கும் வகையில் காட்சிகளை இயக்குநர் விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.
மொத்தத்தில், ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் சினிமா.
ரேட்டிங் 3.5/5