Casting : Nallandi, Vijay Sethupathi, Yogi Babu, Muneeshwaran, Raichal Rabecca Philip
Directed By : M. Manikandan
Music By : Santhosh Narayanan and Richard Harvey
Produced By : Tribal Arts Production - M. Manikandan
தமிழகத்தில் உள்ள ஒரு கிராமம். அங்கு பல வருடங்களாக குலதெய்வ கோவிலுக்கு திருவிழா நடத்தாமல் போனதால் சாமி கோபம் கொண்டிருப்பதாக நம்பும் மக்கள், அக்கோவிலுக்கு விழா எடுக்க முடிவு செய்கிறார்கள். அப்படி நடத்தப்படும் விழாவுக்கு அனைவரும் தாங்கள் விளைவித்த தானியங்களை காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். ஆனால், அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் விவசாயம் செய்வதை நிறுத்துவிட்டு, வெவ்வேறு வேலை செய்து வாழ்வது அப்போது தான் தெரிய வருகிறது. இருப்பினும், அந்த கிராமத்தில் உள்ள சுமார் 80 வயதுடைய முதியவர் மட்டும் விவசாயம் செய்து வருகிறார். அவர் கோவில் திருவிழாவுக்காக தனது நிலத்தில் நாத்து நடுகிறார்.
இதற்கிடையே விவசாய நிலம் அருகே இறந்து கிடந்த மயில்களால் முதியவருக்கு பிரச்சனைகளும், பல சோதனைகளும் வர அதன் மூலம் அவர் சிறைக்கு சென்றுவிடுகிறார். பிறகு அவரது பயிர்கள் என்ன ஆனது? கோவில் திருவிழா நடந்ததா இல்லையா, என்பதை கலங்கடிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
விவசாயியாக நடித்திருக்கும் முதியவர் நல்லாண்டி தான் கதையின் நாயகன். இவர் நடித்தார் என்று சொல்வதை விட, இவருடைய வாழ்க்கையை இயக்குநர் மணிகண்டன் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பயிர்களை தடவி கொடுப்பது, கோயிகளிடம் பரிவு காட்டுவது, மாடுகளிடம் பாசம் காட்டுவது என ஒவ்வொரு காட்சியிலும் நம்மை உருக வைத்துவிடும் முதியவர் நல்லாண்டியின் நடிப்பு மட்டும் அல்ல ,அவர் பேசும் வசனங்களும் கவனம் பெறுகிறது. ஒரு திரைப்படத்திற்காக எழுதப்பட்ட வசனமாக அல்லாமல் ஒரு விவசாயின் வாழ்க்கை அனுபவத்தையும், நாட்டு நடப்பையும் சொல்லும் உண்மை வார்த்தைகளாக நம்மை சிந்திக்க வைக்கிறது.
தமிழ் கடவுள் முருகனின் பக்தராக வரும் விஜய் சேதுபதி, கதைக்கு தேவைப்படாத கதாப்பாத்திரம் போல் தோன்றினாலும், அவருடைய கதாப்பாத்திரம் மற்றும் நடிப்பு படத்திற்கு பலம் சேர்ப்பதை மறுக்க முடியாது.
மாவட்ட நீதிபதியாக நடித்திருக்கும் ரேய்ச்சல் ரெபக்காவின் கதாப்பாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் சிறப்பு. சட்டத்தின் ஆட்சியை மீறமுடியாமல் தவிக்கும் தவிப்பை தனது சிறப்பான நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார்.
யானை வைத்து பிழைப்பு நடத்துபவராக வரும் யோகி பாபு, காமெடியோடு குணச்சித்திர நடிகராகவும் ஜொலிக்கிறார். ஊர் மக்களாக கிராம மக்களையே நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களும் நடிகர்களாக அல்லாமல் அந்த ஊர் மக்களாகவே வலம் வருவதால் காட்சிகள் அனைத்தும் சிரித்து ரசிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது.
இயக்குநர் மணிகண்டனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். சொல்ல வரும் காட்சிகளை வசனங்கள் மூலமாக மட்டும் இன்றி காட்சிகள் மூலமாகவும் விவரித்திருப்பவர் அந்த கிராமத்துக்குள் நாமும் பயணிக்கும் அனுபவத்தை கொடுக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, பல இடங்களில் அமைதியை மட்டுமே பின்னணி இசையாக கொடுத்திருப்பது காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும், அவற்றில் சொல்லப்படாத பல விஷயங்களை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மணிகண்டன், பறை, மயில், யானை, முருக கடவுள் போன்ற குறியீடுகள் மூலம் உண்ணதமான விஷயங்கள் பலவற்றைய விளக்கியிருக்கிறார்.
படத்தின் தலைப்பு கடைசி விவசாயி என்று இருந்தாலும், விவசாயத்தை கைவிட்டவர்களுக்கு மீண்டும் பெரும் நம்பிக்கை அளித்து மீண்டும் விவசாயத்திற்கு திருப்பும் மாபெரும் விவசாய புரட்சியாளராகவே இப்படம் இருக்கிறது.
மொத்தத்தில், தமிழ் சினிமா மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கொண்டாடும் ஒரு மிகச்சிறந்த படைப்பு இந்த ‘கடைசி விவசாயி’.
ரேட்டிங் 4/5