Casting : CS Kishan, Shritha Shivadas, Nandini Ray
Directed By : Vijay Tamilselvan
Music By : LV Muthu Ganesh
Produced By : Vijay Tamilselvan
நாயகன் சி.எஸ்.கிஷன் மனோதத்துவ டாக்டர். அனைத்தும் அறிவியல் என்று நம்புகிறவர், சாமியார்கள் நிகழ்த்தும் மந்திர, தந்திரத்தின் தில்லுமுல்லு பின்னணியை ஆதாரத்துடன் தோலுரித்து காட்டி வருகிறார். இதற்கிடையே கதாநாயகியை எப்போதும் எதாவது பிரச்சனை துரத்திக்கொண்டே இருக்க, அதற்கு காரணம், அவர் குடும்பத்தில் ஒருவர் வைத்த செய்வினைதான் என்பது தெரிய வருகிறது. ஆனால், அதை நம்பாத நாயகன் அதன் பின்னணியை அறிய முயற்சிக்கும் போதே, அவரே செய்வினை, சூனியம் போன்றவற்றை நம்பும்படியான சம்பவங்கள் அரங்கேற மனுஷன் அதிர்ந்து போகிறவர், நாயகியை சுற்றும் செய்வினையில் இருந்து அவரை காப்பாற்றினாரா, இல்லையா, என்பதே கதை.
திகில் படங்களுக்கு உரிய பாணியில் ரசிகர்களை பல விதத்தில் பயமுறுத்தும் இயக்குநர், ஒருவர் கதை எழுத எழுத, அவர் எழுதுவதெல்லாம் அப்படியே நடப்பது, ஆடம்பரமான வீட்டில் உளவும் அமானுஷ்ய சக்தியும், அது மனிதர்களை பதற வைப்பது என்று ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் சி.எஸ்.கிஷன் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப கச்சித தேர்வு. மனோதத்துவ டாக்டராக, அறிவியலை மட்டுமே நம்பும் அவர், பிறகு செய்வீனை போன்றவற்றால் பாதிக்கப்படும் நாயகியின் நிலையை எண்ணி வருந்துவதும், பதட்டப்படுவதும் என்று குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் ஷிரிதா சிவதாஸ், நந்தினிராய் கதையுடன் பயணிக்கும் முக்கிய வேடத்தில் முழுமையாக நடித்து மனதில் நிற்கிறார்கள். சாமியாராய், மந்திரவாதிகளாய், பேய் ஒட்டுபவர்களாய் வருகிறவர்களும் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பது பலம்.
எல்.வி.முத்து கணேஷின் பின்னணி இசை திகில் காட்சிகளின் பயத்தை ரசிகர்களிடம் கத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு திகில் காட்சிகளுடன் கிளுகிளுப்பு காட்சிகளிலும் நேர்த்தியை வெளிப்படுத்தியுள்ளது.
திகிலை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதையை நகர்த்தாமல், செய்வினை வைப்பது பற்றி இந்துமத வேதங்களிலேயே குறிப்புகள் இருப்பதை ஆதாரங்களோடு இயக்குநர் விஜய் தமிழ்செல்வன் விளக்கியிருப்பது படத்தின் தனி சிறப்பு.
வித்தியாசமான கதைக்கருவை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதை நேர்த்தியாகவும், படம் பார்ப்பவர்கள் ஆச்சரியம் அடையும் விதத்திலும் சொல்லியிருக்கிறார். ஆனால், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், படம் ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றிருக்கும்.
மொத்தத்தில், ‘அஷ்டகர்மா’ பரவாயில்லை
ரேட்டிங் 2.5/5