Casting : மகேஷ் பாபு, ரகுல்ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத்
Directed By : ஏ.ஆர்.முருகதாஸ்
Music By : ஹரிஸ் ஜெயராஜ்
Produced By : லைகா புரொடக்ஷன்ஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ் பாபு இணையும் முதல் படம், மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப் படம் என்ற எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ‘ஸ்பைடர்’ எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்.
மற்றவர்களுடைய போன்கால்களை ஒட்டுகேட்டு, அதில் குற்ற செயலில் ஈடுபடுவதை போல் யாராவது பேசுவது போல சந்தேகம் ஏற்பட்டால், அவர்களுடைய போன்காலை தொடர்ந்து ஒட்டு கேட்டு, அவர்களுடைய விபரங்களை மேல் அதிகாரிக்கு வழங்கும் குழு ஒன்று இந்திய உளவுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. அதே சமயம், பொதுமக்களின் செல்போன் பேச்சை மேல் அதிகாரியின் உத்தரவு இன்றி ஒட்டு கேட்க கூடாது, என்பது இந்த துறையின் விதிமுறையாகும். இதில் பணிபுரியும் மகேஷ் பாபு, தான் கண்டுபிடித்த சாப்ட்வேர் மூலம், ஆபத்தில் இருப்பவர்களின் போன்காலை அறிந்து, அதை ஒட்டு கேட்டு, அவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றி வருகிறார்.
அப்படி ஒரு போன்காலில் பள்ளி மாணவி ஒருவர், தனது தோழியிடம் தனது வீட்டில் யாரும் இல்லை, தனக்கு பயமா இருக்கு, வீட்டில் ஏதோ பேய் இருப்பது போல தெரிகிறது, என்று கூற, இதை ஒட்டு கேட்கும் மகேஷ் பாபு, அந்த பெண்ணின் பெற்றோர் வரும் வரை, அவருடன் இருக்கும்படி தனது போலீஸ் தோழியிடம் கூற, அவரும் அந்த பெண் வீட்டுக்கு போக, அந்த மாணவியும், பெண் போலிஸும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். செய்தி மூலம் இதை அறிந்துக்கொள்ளும் மகேஷ் பாபு, அந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் போது, அந்த கொலையாளி பற்றியும், அவர் செய்ய இருக்கும் நாச வேலைகள் பற்றியும் பல பகீர் தகவல்கள் தெரிய வர, அந்த நாசவேலைகளை தடுத்தி நிறுத்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் மகேஷ் பாபு, ஸ்பைடர் மேன் போல பறக்காமல், உட்கார்ந்த இடத்தில் இருந்தே தனது புத்திசாலித்தனத்தாலும், தொழில்நுட்பத்தாலும் அந்த கொலையாலியை எப்படி பிடிக்கிறார் என்பது தான் ‘ஸ்பைடர்’ படத்தின் கதை.
டைட்டில் ‘ஸ்பைடர்’ என்று இருந்தாலும் பேட்மேன் ஆங்கிலப்படத்தில் வரும் ஹீரோ, வில்லன் கதாபாத்திர அமைப்பை போல இப்படத்தின் ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அக்மார்க் தெலுங்கு படம் போல படத்தை ஆரம்பித்தாலும், பிறகு சுதாரித்துக்கொண்டு தனது பாணி படம் போல திரைக்கதையை நகர்த்திச் செல்கிறார்.
சமூக குற்றங்களையும், அதை செய்பவர்களையும் தனது படங்களின் வில்லன்களாக காட்டி வந்த முருகதாஸ், முதல் முறையாக சைக்கோ கொலையாளியை தனது படத்தில் வில்லனாக்கியிருப்பவர், வில்லனை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே அவர் மீது பெரிய பயத்தையும், எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்திவிடுகிறார். அதே சமயாம், வில்லன் எண்ட்ரிக்கு பிறகு, படம் முடிந்துவிட்டது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் திரைக்கதையும், காட்சியும் நகர்வது படத்திற்கு மிகபெரிய பலவீனமாக அமைந்துள்ளது.
முதல் தமிழ் படத்திலேயே தமிழ் டப்பிங் பேசி நடித்திருக்கும் மகேஷ் பாபுவை பாராட்டினாலும், அவரது குரல் ஏதோ 50 வயதை தாண்டியவர் பேசுவது போல இருக்கிறது. எது ஆக்ஷன் காட்சி, எது நடன காட்சி என்று தெரியாத அளவுக்கு இரண்டையுமே ஒரே மாதிரி செய்யும் மகேஷ் பாபு, படத்தின் தொடக்கம் முதல் முடியும் வரை ரொம்ப இறுக்கமாக இருப்பது போலவே நடித்திருந்தாலும், தனது மாஸ் ஹீரோ தனத்தை மூட்டைக்கட்டிவிட்டு கதையின் நாயகனாக வலம் வந்திருக்கிறார். அதிகம் பேசாமல் செயலில் தான் யார்? என்பதை காட்டும் மகேஷ் பாபு, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல இடங்களில் அடக்கி வாசித்தாலும், சில இடங்களில் தனது ஹீரோயிசத்தை காட்டுவதால், அது லாஜிக் மீறலாக அமைந்துவிடுகிறது.
ஹீரோயின் ரகுல்ப்ரீத் சிங், நல்ல எடுப்பாக இருந்தாலும், அவர் வரும் காதல் காட்சிகளும், அவரது வேடமும் படத்தில் எடுபடாமல் போகிறது. எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி இந்த பேடத்தில் பேசுவதை மட்டுமல்ல காமெடியையும் தவிர்த்திருக்கிறார்.
சைக்கோ கொலையாளியாக வரும் எஸ்.ஜே.சூர்யா, தனது கெட்டப்பால் மிரட்டும் அளவுக்கு நடிப்பில் மிரட்டவில்லை. அதற்கான வாய்ப்பும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. போலீஸாரால் கைதாகிவிட்டு, மகேஷ் பாபுவிடம், தான் ஏன் கொலை செய்கிறேன், என்பதை சொல்லும் இடத்தில் மட்டும் நடிக்க முயற்சித்திருப்பவர், பல இடங்களில் எக்ஸ்பிரசன்ஸ் மூலம் தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தினாலும், ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, திணிக்கப்படும் காட்சிகளால் அவரது கதாபாத்திரம் இறங்கிவிடுகிறது.
ஒரு ஆக்ஷன் காட்சியோடு மூட்டையை கட்டிக்கொண்டு கிளம்பும் பரத், தான் ஹீரோ என்பதையே மறந்து, ஏதோ வாய்ப்பு தேடும் நடிகரை போல நடித்து வருகிறார். விட்டால் ஹீரோவின் நண்பராக கூட நடிப்பார் போலிருக்கு.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக இருப்பதோடு, பிரமிப்பாகவும் இருக்கிறது. அதிலும், ரோலர் கோஸ்டரில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி மிரட்டுகிறது. கிராபிக்ஸ் பயன்படுத்தி அந்த காட்சி எடுக்கப்பட்டிருந்தாலும், கிராபிக்ஸ் என்பது தெரியாதவாறு சந்தோஷ் சிவனின் கேமரா செயல்பட்டிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் தான். ஹீரோ அறிமுக பாடல் மட்டும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் முன்னணிக்கு வர ஹாரிஸ் முயற்சித்திருந்தாலும், வில்லன் கதாபாத்திரத்திற்காக அவர் போட்டிருக்கும் பீஜியம் எடுபடவில்லை.
ஹீரோக்களை தனது திரைக்கதைக்குள்ளேயே மாஸ் காட்ட வைப்பதோடு, லாஜிக் மீறாத வகையில் காட்சிகளை வடிவமைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், இந்த படத்தில் பெரிய அளவில் லாஜிக்கை மீறியுள்ளார். வில்லனை அறிமுகப்படுத்தும் வரை விறுவிறுப்பாக நகரும் படம், வில்லன் அறிமுகமான பிறகு சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது.
இவரை தான் கொலை செய்ய வேண்டும், என்ற எந்த ஒரு டார்கெட்டும் இல்லாத, பார்ப்பவர்களை எல்லாம் கொலை செய்யும் சைக்கோ கொலையாளியாக வில்லனை சித்திரித்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கொலையாளிக்கு பெரிய பில்டப் கொடுப்பதற்காக, ரயிலை கொளுத்துகிறார், மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கிறார், என்ற காட்சிகளை வைத்து, தனி நபரான எஸ்.ஜே.சூர்யாவால் இவற்றை எல்லாம் எப்படி செய்ய முடியும்? என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்புகிறார். சரி, சம்மந்தப்பட்டவர்களை மிரட்டி, இதுபோன்ற வேலைகளை எல்லாம் செய்கிறார், என்றே வைத்துக்கொள்ளலாம். போலீஸ் கஷ்ட்டடியில் இருந்து எஸ்.ஜே.சூர்யா தப்பிக்கும் காட்சியை கூட ஏதோ உப்புமா பட இயக்குநர் போல கையாண்டிருக்கிறார். (7ம் அறிவு வில்லனை போல நோக்குவர்ம கலை எஸ்.ஜே.சூர்யாவுக்கு தெரிந்திருக்குமோ)
வில்லன் ஒரு திட்டம் போட, அடை சாமர்த்தியமாக ஹீரோ முறியடிப்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய சுவார்ஸ்யமாக இருந்தாலும், சூர்யாவிடம் இருந்து தனது அம்மாவை காப்பாற்றும் காட்சியில் மட்டும் இருக்கும் சுவாரஸ்யம், படத்தின் முக்கியமான இரண்டு காட்சிகளான மருத்துவமனை மற்றும் பாறை உருண்டு வருவது போன்ற காட்சிகளில் இல்லாமல் போகிறது. அதிலும், சூர்யா எந்த மருத்துவமனையை அட்டாக் செய்யப் போகிறார், என்பதை தெரிந்துக்கொள்ளும் மகேஷ் பாபு, அதை போலீஸுக்கு சொல்லாமல், தனி ஆளாக தடுக்க முயற்சிப்பது தெலுங்கு படங்களுக்கே உறிய அம்சமாக இருப்பதோடு, படத்திற்கு பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது.
உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே, டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களை வைத்து எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதும், அவரை கைது செய்யும் காட்சியும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆனாலும் அந்த காட்சியில் பெண்கள் வீட்டு மேல் ஏறுவது, சுவர் மீது நடப்பது போல காட்டியிருப்பது கொஞ்சம் ஓவரகாத்தான் இருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யாவை போலீஸ் கைது செய்ததுமே படம் முடிந்துவிடுகிறது. ஆனால், பிரம்மாண்டமான காட்சியோடு படத்தை முடிக்க நினைத்து, போலீஸ் கஷ்ட்டடியில் இருந்து வில்லன் தப்பிப்பது போல காட்சியை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பெண்கள் உதவியோடு போலீஸ் ரவுண்ட் அப் செய்யும் போதே எஸ்.ஜே.சூர்யா எஸ்கேப் ஆவது போல காட்சியை அமைத்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு லாஜிக்கே இல்லாமல் காட்சிகளை வடிவமைத்து, இயக்குநராக தான் செய்யும் மேஜிக்கை தவறவிட்டுள்ளார்.
படம் சுமாராக இருக்கிறது. ஒரு முறை பார்க்க்கலாம், என்று சொல்லிவிடலாம், இப்படி ஒரு சுமாரான படத்தை எடுக்க ஏ.ஆர்.முருகதாஸ் என்ற இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர் எதற்கு? ரூ.125 கோடி பட்ஜெட் எதற்கு?
’ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் தோல்வியை பார்க்காத இயக்குநர், என்று பேசியவர்கள், முருகதாஸின் அடுத்த பட நிகழ்வில் பேசும் போது, தாங்கள் பேசியது தவறு என்று ஒப்புக்கொள்வார்கள்.
ஜெ.சுகுமார்