Casting : Tom Holland, Mark Wahlberg, Sophia Ali, Tati Gabrielle, Antonio Banderas
Directed By : Ruben Fleischer
Music By : Ramin Djawadi
Produced By : Columbia Pictures, Arad Productions
சோனி நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் சீரிசான ‘அன்சார்டர்’ அதே பெயர் மற்றும் கதாப்பாத்திரங்களுடன் திரைப்படமாக வெளியாகியுள்ளது. படம் எப்படி என்பதை பார்ப்போம்.
500 ஆண்டுகளுக்கு முன்பான மான்காடா மாளிகையின் புதையலை மீட்டெடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு மாண்டு போகிறார்களே தவிர, புதையலை யாராலும் எடுக்க முடியவில்லை. அதே சமயம், புதையலுக்கான வாரிசுகளாக நினைக்கும் சாண்டியாகோ மான்காடா, தனது குடும்ப பாரம்பரியத்தை மீட்க நினைக்கிறார். பல பில்லியன்கள் மதிப்புள்ள அந்த தங்கத்தை கொள்ளையடிக்க சுல்லி, நேட், மற்றும் க்ளோயி கூட்டணியும் திட்டமிட, பல மர்மங்கள் நிறைந்த அந்த புதையலை இரு தரப்பில் யார் கைப்பற்றினார்கள், அதன் பின்னணியில் இருக்கும் ஆபத்துகளும், சவால்களும் என்ன? என்பதே படத்தின் கதை.
நேட் கதாப்பாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடித்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்’ படத்திற்கு பிறகு டாம் ஹாலண்ட் நடித்திருக்கும் படமாக இப்படம் வெளியாகியிருப்பதால், ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் டாம் ஹாலண்டும் நடிப்பு, ஆக்ஷன், அட்வெஞ்சர், நகைச்சுவை என அனைத்து ஏரியாவிலும் தனது தனித்தன்மையை நிரூபித்திருக்கிறார்.
சுல்லி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் வால்பெர்க் தனது நடிப்பு மூலம் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருப்பதோடு, அந்த கதாப்பாத்திரத்திடம் இருக்கும் குறைகளை ரசிகர்கள் மறந்துபோகும் விதத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மிகப்பெரிய அட்வெஞ்சர் பயணமாக இருந்தாலும், அவ்வபோது டாம் ஹாலண்ட் மற்றும் வால்பெர்க் ஆகியோர் செய்யும் நகைச்சுவை காட்சிகளும், அவர்களிடையே இருக்கும் கெமிஸ்ட்ரியும் படத்தை ரசிக்க வைக்கிறது.
க்ளோயி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சோபியா அலி, அதிரடியான சண்டைக்காட்சிகள் மூலம் கவனம் பெறுகிறார். கேப்ரியல், ஆண்டோயோ பேண்டரஸ் ஆகியோரும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
அன்சார்டட் கேமின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, ரஃபே ஜட்கின்ஸ், ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹாலோவே ஆகியோர் எழுதிய திரைக்கதைக்கு, தனது கற்பனை மூலம் பிரமாண்ட காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் ஃப்ளீஷர்.
மிகப்பெரிய அளவுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய விமான சண்டைக்காட்சியில் இருக்கும் அட்வெஞ்சர் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்தாலும், அந்த ஒரு காட்சிக்குப் பிறகு வேறு எந்த காட்சியும் அப்படி இல்லாமல் இருப்பது, படத்தின் வேகத்தை குறைத்து விடுகிறது. இருந்தாலும், வி.எப்.எக்ஸ் ரீதியாக படத்தில் பிரமாண்டத்தை காட்டி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்கள். அதேபோல், தமிழ் மொழிப்பெயர்ப்பில் இடம்பெறும் வசனங்களும் படத்தில் இருக்கும் சில குறைகளை மறக்கடித்து நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது.
மொத்தத்தில், ’அன்சார்டட்’ ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் சாகசப் பயணம்.
ரேட்டிங் 3.5/5