Casting : Surya, Priyanka Mohan, Sathyaraj, Vinay, Saranya Ponvannan, Ilvarasu, MS Baskar, Soori
Directed By : Pandiraj
Music By : D.Imman
Produced By : Sun Pictures
சமூகத்தில் நடக்கும் அவலங்களை பேசிவிட்டு மறந்து போனவர்கள் மத்தியில், அதை திரைப்படமாக்கி, அந்த குற்ற செயல் புரிந்தவர்களுக்கு கொடூர தண்டனை கொடுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தியிருக்கும் சூர்யாவின் மற்றொரு சமூக அக்கறைக்கொண்ட படம்.
இளம் பெண்கள் கொலை செய்யப்படுவதும், தற்கொலை செய்துக்கொள்வதும் தொடர்ந்து நடந்து வர, அதன் பின்னணி குறித்து கண்டறியும் நாயகன் சூர்யா, அந்த குற்றங்களை செய்தவர்களை கலையெடுப்பது தான் படத்தின் கதை.
தமிழகத்தில் நடந்த பெரும் குற்றத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ஒரு நடிகராக அல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராடும் ஒரு போராளியைப் போன்று சூர்யா நடித்திருக்கிறார். மிரட்டலாக அறிமுகமாகும் சூர்யா, காதல், பாசம், கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி படம் முழுவதும் அமர்க்களப்படுத்துகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன், புன்னகை மூலமாகவே நம் மனதில் நிற்பவர், பெண்களை காம கண்களோடு பார்ப்பவர்களையும், ஆபாச வீடியோக்களை அசிங்கமற்றதாக எண்ணி ரசிப்பவர்களைப் பற்றி பேசும் போது நடிப்பில் விஸ்வரூபம் எடுக்கிறார்.
சூர்யாவின் அப்பா, அம்மாவாக நடித்திருக்கும் சத்யராஜ் மற்றும் சரண்யா பொன்வன்னன் அளவான நடிப்போடு கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் இளவரசு, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி ஆகியோரது நடிப்பும் நிறைவு.
காமெடி ஏரியாவை கையில் எடுத்திருக்கும் சூரி, இராமர், தங்கதுரை, புகழ் ஆகியோரும் நம்மை பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
வினயின் வில்லத்தனம் கொடூரமாக இருந்தாலும், அந்த கதாப்பாத்திரத்தின் மீதும் உச்சபச்ச கோபம் ஏற்படும் வகையில் நடித்திருக்கிறார். புன்னகையோடு வலம் வந்தாலும், அவரை உயிரோடு புதைத்துவிட வேண்டும், என்று எண்ணும் அளவுக்கு அவரது வில்லத்தனம் அமைந்திருக்கிறது.
ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்கு ஏற்ப இருப்பதோடு, பல காட்சிகளை பிரமாண்டமாக காண்பித்து பிரமிக்க வைக்கிறது.
டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அளவாகவும், கதைக்கு ஏற்றபடியும் இருக்கிறது.
குடும்ப உறவு, காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் அளவாக கொண்டு ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக எழுதி இயக்கியிருக்கும் பாண்டிராஜ், அதன் கதைக்களமாக கையில் எடுத்துக்கொண்ட சம்பவம் உண்மையில் நடந்தது, என்பதை படம் பார்ப்பவர்களை உணர வைப்பதோடு, அந்த கொடூர குற்றவாளிகளுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும், என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெறுகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் வசனம் பேசும் சூர்யா, ஆண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், என்ற அறிவுரைகள் மூலம் சமூகத்திற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
சமூக குற்றங்கள் பற்றி பேசினாலும், அதை குடும்பத்தோடு பார்க்க கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக கையாண்டிருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், அறிவுரை சொல்ல வேண்டிய இடத்தில் அடக்கி வாசித்தாலும், வெளுக்க வேண்டிய இடத்தில் பலருக்கு மறைமுகமாக சுளுக்கெடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ’எதற்கும் துணிந்தவன்’ ரசிக்க வேண்டிய திரைப்படம் மட்டும் அல்ல, கற்க வேண்டிய பாடமும் கூட.
ரேட்டிங் 4/5