Casting : Aadhi, Aakanksha Singh, Nassar, Prakash Raj, Krisha Kurup, Munishkanth, Maim Gopi, Prammaji
Directed By : Prithivi Adithiya
Music By : Ilayaraja
Produced By : Big Print Pictures - IB Karthikeyan, P.Prabha Prem, Manoj & Harsha
ஆதி நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரித்திவி ஆதித்யா இயக்கத்தில், ஐ.பி.கார்த்திகேயன், பி.பிரபா பிரேம், மனோஜ் மற்றும் ஹர்ஷா ஆகியோரது தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளாப்’. விளையாட்டை மையப்படுத்திய இப்படம் சோனி லிவ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது.
ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் நாயகன் ஆதி, எதிர்பாரத விபத்து ஒன்றில் ஒரு காலை இழக்கிறார். கால் இழந்த பிறகு, விரக்தியோடு வாழும் ஆதி, திறமையை மட்டுமே வைத்துக்கொண்டு போராடும் ஒரு தடகள வீராங்கனையை வெற்றி பெற செய்வதற்காக களத்தில் இறங்குகிறார். ஆதியின் இந்த முயற்சிக்கு விளையாட்டுத்துறையில் இருக்கும் அரசியலால் பல்வேறு பிரச்சனைகள் வர, அவற்றையெல்லாம் கடந்து அவர், அந்த பெண்ணை சாதிக்க வைத்தாரா இல்லையா, என்பதே மீதிக்கதை.
தடகள வீரர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமான உடற்கட்டோடு இருக்கும் ஆதி, ஒரு காலை இழந்து மாற்றுத்திறனாளியாக வாழும் காட்சிகள் அனைத்தும் நம்மை கலங்கடிக்கிறது. அதிலும், இல்லாத கால் வலிக்கும் போது அவர் வெளிப்படுத்தும் வேதனை, படம் பார்ப்பவர்களாலும் அந்த வலியை உணர முடிகிறது. பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் ஆதி, விளையாட்டுத்துறையில் இருக்கும் அரசியலை எதிர்கொள்ளும் விதம் பாராட்ட வைக்கிறது.
ஆதியின் மனைவியாக நடித்திருக்கும் ஆகான்ஷா சிங், படம் முழுவதும் அமைதியாக இருப்பவர், க்ளைமாக்ஸ் காட்சியின் போது, ஆதி தன் பெயரை சொல்லி அழைத்தவுடன், வெளிப்படுத்தும் நடிப்பு கைதட்ட வைக்கிறது.
தடகள வீராங்கனையாக நடித்திருக்கும் க்ரிஷா குருப், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பால் கவர்கிறார்.
ஆதியின் தந்தையாக ஒரு சில காட்சிகள் வந்தாலும் ஊக்கமளிக்கும் வகையில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். தடகள சம்மேளனத்தின் தலைவர் வேடத்தில் நடித்திருக்கும் நாசர், விளையாட்டுத்துறையில் இருக்கும் அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
முனிஷ்காந்த் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும் சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் மைம் கோபி, பிரம்மாஜி, ஐ.பி.கார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் நடிப்பும் அளவு.
ஒளிப்பதிவாளர் பிரவின் குமார் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, விளையாட்டை மையப்படுத்திய படங்களுக்கு ஏற்றபடி காட்சிகளை பரபரப்பாகவும் படமாக்கியிருக்கிறார். ராகுலின் படத்தொகுப்பு இயக்குநர் சொல்ல வந்ததை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் சொல்ல உதவியிருக்கிறது.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருப்பதோடு, கேட்டது போலவும் இருக்கிறது. பின்னணி இசை களத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.
விளையாட்டை மையப்படுத்திய படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும், என்ற ஃபார்மட்டில் தான் திரைக்கதை பயணித்தாலும், அவ்வபோது சில திருப்புமுனை காட்சிகளோடு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் பிரித்திவி ஆதித்யா.
விளையாட்டை மையப்படுத்திய கதை என்றாலும், காதல், கணவன் - மனைவி புரிதல் போன்ற உறவுகளின் உணர்வுகளையும் மிக அழுத்தமாக, அதே சமயம் சுருக்கமாக விவரித்திருப்பது ரசிக்க வைக்கிறது.
ஆதி போன்ற ஹீரோ என்றாலும், கூடுதலாக எதையும் திணிக்காமல் தான் சொல்ல வந்ததை மிக தெளிவாக சொல்லியிருக்கும் இயக்குநர் பிரித்திவி ஆதித்யா, ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை படுவேகமாக நகர்த்தி செல்கிறார்.
மொத்தத்தில், ‘கிளாப்’ வெற்றியாளர்
ரேட்டிங் 3/5