Latest News :

’குதிரைவால்’ விமர்சனம்

6abe8f859f6a90b1ebf43412835cc56e.jpg

Casting : Kalaiyarasan, Anjali Patel, Sethan, Anandsaamy, Lakshmi Patti

Directed By : Manoj Leonel Jahson and Shyam Sunder

Music By : Pradeep Kumar

Produced By : Pa. Ranjith and Vignesh Sundaresan

 

தூக்கத்தில் இருந்து விழிக்கும் நாயகன் கலையரசன், தனது உடலில் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்கிறார். அவர் உடலில் குதிரைவால் ஒன்று இருக்கிறது. இது கனவா? அல்லது நிஜமா? என்று குழம்பும் கலையரசனுக்கு, அந்த வல் தனது கண்ணுக்கு மடுமே தெரிகிறது, மற்றவர்களுக்கு தெரியவில்லை என்ற உண்மை புரிகிறது. இருந்தாலும் அந்த வால் எப்படி வந்தது, என்பதை அறியும் முயற்சியில் ஈடுபடும் கலையரசன், இதற்காக குறிசொல்லும் பாட்டி, ஜோசியர், கணக்கு வாத்தியார் ஆகியோரை சந்திக்க, அவர்கள் சொல்லும் காரணமும், அவருடைய பிரச்சனை தீர்ந்ததா இல்லையா, என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.

 

“நினைவில் தொலைத்ததை கனவில் தேடுகிறேன்” என்ற வசனம் படத்தில் அடிக்கடி இடம்பெறுகிறது. இந்த வசனம் தான் படத்தின் ஒரு வரிக்கதை. இதற்கான திரைக்கதை அமைப்பு தான் நம்மை பிரமிக்க வைப்பதோடு பெரும் குழப்பமடையவும் செய்கிறது. ஆனால், படம் பார்க்கும் போது இருக்கும் குழப்பம், படம் முடிந்த பிறகு, ரூம் போட்டு யோசித்தால் தீர்ந்துவிடும், என்பது நம் கணிப்பு. (ரூம் போட வசதியில்லாதவங்க, வீட்ல கூட தனியா உட்கார்ந்து யோசிக்கலாம்)

 

கதையின் நாயகன் என்று சொல்வதை விட முதன்மை கதாப்பாத்திரமாக கலையரசன் நடித்திருக்கிறார். குதிரைவால் கொடுக்கும் தொல்லையை வெளிப்படுத்தும் இடத்திலும், தனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற கேள்வியோடும், தன்னை சுற்றி நடப்பது கனவா அல்லது நிஜமா என்று தெரியாத குழப்பத்தோடும் சுற்றி திரியும் கலையரசனின் நடிப்பு குறை சொல்லும் அளவுக்கு இல்லை, என்றாலும் அந்த கதாப்பாத்திரத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. இருந்தாலும், அவருடைய முயற்சி பாராட்டத்தக்கது.

 

கலையரசனுக்கு பிறகு விளம்பரங்களிலும், செய்திகளிலும் இடம் பிடித்தவர் அஞ்சலி பாட்டீல். ஆனால், அவருடைய கதாப்பாத்திரத்திற்கு பெரிய வேலை இல்லை. அவ்வபோது தொலைதூரத்தில் நிற்கிறார். உடல்மொழி அற்ற வசனங்களை பேசுகிறார். மொத்தத்தில், அவர் ஒரு கனவு கதாப்பாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

 

மற்ற கதாப்பாத்திரங்களான சேத்தன், சிறுமி மானசா, சிறுவன் பரிதிவாலன், லட்சுமி பாட்டி ஆகியோர் அளவாக நடித்திருக்கிறார்கள். அதிலும் சிறுமி மானசா மற்றும் சிறுவன் பரிதிவாலன் வரும் காட்சிகளும் அவர்களின் நடிப்பும் கவனம் பெறுகிறது. கணக்கு வாத்தியாராக நடித்திருக்கும் ஆனந்த்சாமியின் நடிப்பும், அவருடைய சிறு சிறு உடல் மொழியையும் பாராட்டும்படி உள்ளது.

 

படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துகுமார். மலையும், மலை சார்ந்த இடங்களையும் அழகியலோடு படமாக்கியிருப்பதோடு, அவற்றையும் ஒரு கதாப்பாத்திரமாக நம் கண் முன் நிறுத்துகிறார்.

 

படத்தொகுப்பாளர் எம்.கே.பி. கிரிதரண், தன்னால் முடிந்த அளவுக்கு படத்தை ரசிகர்களுடன் இணைக்க முயற்சித்திருக்கிறார். அவருடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி, படத்தின் நீளம் 2 மணி நேரம், 4 நிமிடங்களாகம இருப்பது தான்.

 

பிரதீப் குமாரின் இசையில் பாடல்கள் இறகுகள்  வருடுவது போல்  இருக்கிறது. பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் இணைந்து அமைத்திருக்கும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக, பல இடங்களில் அமைதியை மட்டுமே பின்னணி இசையாக கொடுத்திருப்பது கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும், காட்சிகளின் அழுத்தத்தையும் கவனிக்க வைக்கிறது.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் ஜி.இராஜேஷ். இவருடைய கதையும், திரைக்கதையும் பல விஷயங்களை மறைமுகமாக பேசியிருக்கிறது. குறிப்பாக உலகம் வெப்பமயமாதல், வாழ்க்கை தத்துவம், மதம் மாற்றம் மூலம் ஒரு சமூகத்தின் அடையாளத்தை அழிப்பது, உலவியல் ரீதியான பிரச்சனைகள், தனிமை ஒரு மனிதனை எப்படி எல்லாம் வாட்டி எடுக்கிறது, அரசு மனிதர்களை வெறும் எண்களாக பாவிப்பது  என்று பல விஷயங்களை பேசியிருந்தாலும், அவற்றை சாமானியர்களுக்கு புரியாதபடி சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

 

படத்தை இயக்கியிருக்கும் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர், கதையாசிரியர் இராஜேஷின் எழுத்து செல்லும் வழியில் எவ்வித கேள்வியும் இன்றி பயணித்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது. 

 

குறிப்பாக படத்தில் பேசப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களும் அறிவு ஜீவிகளுக்கு மட்டுமே புரிய வேண்டும், என்ற ரீதியில் படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர்கள், சினிமாவின் வெற்றிக்கு காரணமான பாமர மக்களை பற்றி யோசிக்காதது பெரும் சோகம்.

 

மொத்தத்தில், ‘குதிரைவால்’ குறிப்பிட்ட ரசிகர்களுக்காக மட்டும்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery